காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி நிறைவுற்றது.விழாவினை முன்னிட்டு சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரில் ராஜவீதிகளில் பவனி வந்தனர்.
விழா நாட்களில் சுவாமியும்,அம்மனும் தினசரி எந்தெந்த வாகனங்களில்,என்ன அலங்காரத்தில் பவனி வருகிறார்கள் என்பதை இரு இளைஞர்கள் சாக்பீஸ் மூலம் அழகிய கோட்டோவியமாக, கரும்பலகையில் கண்களைக் கவரும் வகையில்,வண்ண ஓவியமாக வரைந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் பார்வையில் படும்படி வைத்திருந்தனர்.
பக்தர்கள் பலராலும் சாக்பீஸ் சகோதரர்கள் என்றே அழைக்கும் இவர்களைப் பற்றி விசாரித்தோம்.காஞ்சிபுரம் ராயன்குட்டை மேட்டுத்தெருவைச் சேர்ந்த டில்லிபாபு மற்றும் இவரது தம்பி தினேஷ் என்பதும் இருவரும் சிறந்த சிவபக்தர்கள் என்றும் தெரிய வந்தது.அவர்களிருவரையும் சந்தித்துப் பேசினோம்:
மூத்த சகோதரர் டில்லிபாபு கூறியது.. நாங்கள் இருவரும் தினசரி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்வது வழக்கம்.அப்போது பலரது நட்பு கிடைத்தது.அதில் சிவனடியார் ஒருவர் "கோயிலுக்குத் திருவிழா வரப்போகிறது.
தினசரி சுவாமியும்,அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் செல்வதை ஒரு கரும்பலகையில் எழுதி பக்தர்கள் பார்வையில் படும்படி வையுங்களேன்' என்றார்.
அதே போல தினசரி எழுதி வைத்தோம். அப்போது அதையே படமாக வரைந்து வைத்தால் பக்தர்கள் ஒரு நிமிடமாவது,நின்று பார்த்து,ரசித்து விட்டுப் போவார்கள் என உணர்ந்து அதையே படமாக வரைந்து வைத்தோம். எழுத்துப் படமாக மாறியது.
கரும்பலகையில் எழுதி வைத்திருந்ததை விட வண்ண சாக்பீஸ் கோட்டோவியங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. பலரும் பாராட்டினார்கள்.
ஒவியங்கள் ஒவ்வொன்றும் பல வண்ணங்களிலும்,பளிச்சென்றும் இருந்ததால் பக்தர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியாகவும் இருந்தது. திருவிழாக்களின் போது சுவாமியும், அம்மனும் எந்த வாகனத்தில், என்ன அலங்காரத்தில் செல்கிறது என்பதை அப்படியே தினமும் கரும்பலகையில் வண்ண கோட்டோவியங்களாக வரைந்து வைத்தோம்.
சிவனின் மீது கொண்ட பக்தி காரணமாக நேரத்தை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் நானும், என் தம்பி தினேஷூம் இணைந்தே ஓவியங்களை வரைவோம். இந்த ஓவியங்களை நாங்களாகவே வரையவும் கற்றுக் கொண்டோம்.கடந்த 2009 ஆம் ஆண்டுத் தொடங்கிய இந்தத் தெய்வீகப்பணி இன்று வரை 12 ஆண்டுகளாகத் தொடர்கிறது.
கோயில் திருவிழாவின் போது நடைபெறும் கொடியேற்றம், திருக்கல்யாண வைபவம், பல்லக்கிலும், வாகனங்களிலும் சுவாமி வீதியுலாகள், 63 நாயன்மார்கள் ஊர்வலம், தேரோட்டம் உட்பட ஒரு நாள் கூட விடாமல் திருவிழா நடக்கும் அத்தனை நாட்களும் நடக்கும் நிகழ்வுகளைப் படமாக, வண்ண ஒவியமாகக் கரும்பலகையில் வரைந்து கோயில் முன்பாக வைத்து விடுவோம் என்றார்.
தம்பி தினேஷ் கூறியது.. பெயிண்டிங் ஓவியமாக வரைந்தால் ஒரு படம் வரைய எங்களுக்கு குறைந்த பட்சம் 3 நாட்களாவது ஆகும்.
பெயிண்ட் காய்வதற்கு நேரமாவதுடன் உடனுக்குடன் அழிப்பதும் சிரமம். இதையே வாட்டர்கலரில் வரைந்தால் சிறு ஓவியமாக இருந்தாலும் அரை நாட்களாவாது ஆகி விடும்.
சாக்பீஸ் கோட்டோவியத்தைப் பொறுத்தவரை சிறு ஓவியமாக இருந்தால் 3 மணி நேரமும், பெரிய ஓவியமாக இருந்தால் சுமார் 5 மணி நேரமாவது ஆகும். தேவையில்லாதவற்றை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.
நமது திறமைகளைக் கலைநயத்துடன் காட்சிப்படுத்துவதும் எளிது.
சாக்பீஸ் கோட்டோவியங்கள் பார்ப்பதற்குப் பளிச்சென்றும், வண்ணமயமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். பக்தர்கள் மனதில் படம் அப்படியே நிற்கும். அதனால் தான் சாக்பீஸ் ஓவியத்தைத் தேர்வு செய்தோம். எங்கள் ஓவியங்களுக்கு ரமணா கலைக்கூடம் என்றும் பெயர் வைத்துக் கொண்டோம். இது ஓர் இலவச சேவை.
அதே நேரத்தில் தெய்வீகப்பணி. இதற்காக தமிழக அரசு எனது சகோதரர் அ.டில்லிபாபுவுக்கு கலைவளர்மணி விருதும் வழங்கி கெளரவித்திருக்கிறது. எங்கள் ஓவியங்களைப் பார்த்து வேறு கோயில்களிலும் திருவிழாக்களின் போது ஓவியம் வரைந்து தருமாறு கேட்கிறார்கள்.
அவர்களுக்கும் ஓவியங்களை வரைந்து கொடுத்து வருகிறோம்'
எனவும் அ.தினேஷ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.