முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மாயாவி!

லா.ச.ரா. ஒரு இலக்கிய மாயாவி. சொல் உபாசகர். தன் தந்தை லா.ச.ரா பற்றி அவரது மகன் லா.ச.ரா. சப்தரிஷி எழுதிய புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.. (சாகித்ய அகாதெமி வெளியீடு)

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

லா.ச.ரா. ஒரு இலக்கிய மாயாவி. சொல் உபாசகர். தன் தந்தை லா.ச.ரா பற்றி அவரது மகன் லா.ச.ரா. சப்தரிஷி எழுதிய புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.. (சாகித்ய அகாதெமி வெளியீடு)
"மற்ற எழுத்தாளர்கள் மாதம் நான்கு நாளாவது படைக்க இவருக்கோ ஒரு சிறுகதை எழுத குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் ஆகும். அவரோ பல இடங்களில் குறிப்பிட்டபடி, "பஞ்ச பூதக் கதைகள்' வரிசையில் இரண்டு சிறுகதைகள். இரண்டிரண்டு வருடங்களும் - மூன்றாவது கதை ஒரு வருடமும் - அடுத்த கதை இரண்டு வருடமும் ஆகாயத்தை ஆதாரமாகக் கொண்ட கதை - சிறுகதைதான்- உதயமாக 8 வருடங்கள் பிடித்தது.
முதல் நாவல் "புத்ர'- இரண்டு வருடங்கள் நாவல் "கழுகு' - பத்து வருடங்கள் அவர் வேகமாக எழுதுபவரல்ல. ஆனால் ஓயாமல் எழுதுபவர். ஆமை நடை யானாலும் எறும்பு ஊர, ஊரக் கல்லும் குழியுமே. அவருக்கு சொல்லும் - சொல்லைத் தட்டிப் பார்த்து உணவும் ஒலியும் - சொல்லின் அர்த்தம் காட்டும் ஜாலமும் மிக முக்கியம்.
அவர் எழுதுவதற்கு தனி மலைவாசஸ்தலம் கிடையாது. தனி அறை கிடையாது. மேஜை, நாற்காலி கிடையாது. சுற்றுவர அமைதியான சூழ்நிலை கிடையாது (நாங்கள் இருக்குமிடம் இரைச்சல்கள் வாழுமிடம்தானே) .
ஒரு பழைய அட்டையை இடது தொடையில் வைத்து கொண்டு - மை போட்ட பேனாவால் எழுதுவார். எழுதிக் கொண்டே இருப்பார். எதுவும் அவரை கட்டுப்படுத்தாது. எதுவும் அவரைத் திசை திருப்பாது.
அவருக்கென்று ஒரு கோஷ்டி கிடையாது. எந்தக் கோஷ்டியிலும் அவர் கிடையாது.  அவரது எழுத்துகள் இலக்கியம் மிக்கவை. எந்த சிறு பத்திரிகையிலும் அதிகம் எழுதியதில்லை. அவருக்கு வியாபாரத்தனமாக எழுதத் தெரியாது. ஆனால், அவரது படைப்புகள் வெளிவராத வியாபார பத்திரிகைகள் கிடையாது.
அவரை ஸ்ரீராமகிருஷ்ணரும், காந்தியடிகளும், பைபிளும் மிகப் பாதித்திருக்கிறார்கள். ஹெமிங் வேவ், ஜேம்ஸ் ஜாய்ஸ், தி.ஜ.ரா., ந.பிச்சமூர்த்தி,  மாப்பசானும் பாதித்திருக்கிறார்கள். 
லா.ச.ராவின் பெற்றோர் காலமாகி வெகு நாள்களாகியும் அவர்களது பாதிப்பு லா.சா.ராவின் எழுத்துகளில் மிளிர்ந்து கொண்டே இருந்தது. அவருடைய தன்மையின் ஆதாரச்சத்து அவருடைய பெற்றோர்களும், அவர்கள் அடங்கிய பரம்பரையின் பண்பிலிருந்தும் வடிந்ததுதான்...
அவருடைய எழுத்தில் அவரது தாய் தனிப்பட்ட முறையிலும், அவருடைய கதைகளில் நிறைய வந்திருக்கிறார். தோரணையாக வரும் அவருடைய பெண் பாத்திரங்கள் அவர்களது வெவ்வேறு பருவங்களில் அவருடைய தாயின் குணச்சித்திரங்களே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.