நல்ல உணவை வழங்குவதே இலக்கு
பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும்; செயற்கை இல்லாத நல்ல உணவுப் பொருள்களை வழங்கி, கொஞ்சம் வருவாயை ஈட்ட வேண்டும் என்பதே இலக்கு என்கிறார் "சுகா டயட்' நிறுவன உரிமையாளர் ராஜேஸ்வரி ரவிகுமார்.
பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும்; செயற்கை இல்லாத நல்ல உணவுப் பொருள்களை வழங்கி, கொஞ்சம் வருவாயை ஈட்ட வேண்டும் என்பதே இலக்கு என்கிறார் "சுகா டயட்' நிறுவன உரிமையாளர் ராஜேஸ்வரி
ரவிகுமார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழமார்நேரி என்ற சிறு கிராமத்தில் ராஜகோபால்- பட்டம்மாள் தம்பதிக்கு மகளாய் பிறந்தவர் ராஜேஸ்வரி(56), பத்தாம் வகுப்பு வரையே படித்தார். படிக்க ஆர்வம் இருந்தும், அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த பெண்ணை கல்வி பயில அனுப்புவதில்லை என்பதால், மேற்படிப்பு பயில அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், திருவையாறில் சோப்பு டீலராக இருக்கும் ரவிகுமார் என்பவரை மணமுடித்த ராஜேஸ்வரி, இல்லத்தரசியானார். ஓய்வு நேரத்தில் தனது கணவர் ரவிக்குமாரின் வியாபாரப் பணிகளுக்கு உதவினார்.
கணவரின் ஆதரவில், 2012-ஆம் ஆண்டில் தனது ஓய்வு நேரத்தில் வீட்டிலேயே இயற்கை உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கினார்.
தற்போது சுமார் 10 பணியாளர்களுடன் "சுகா டயட்' என்ற பெயரில் நிறுவனம் இயங்கிவருகிறது. தற்போது விருதுகள், பாராட்டுகள் குவிய பரபரப்பாக இருக்கும் ராஜேஸ்வரி ரவிகுமாரிடம் ஓர் மினி பேட்டி:
உங்கள் உணவுப் பொருள்களின் சிறப்பு , விற்பனை எப்படி உள்ளது?
சிறுதானியங்களை மதிப்புக் கூட்டி உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். தமிழகம் முழுவதும் விற்பனையாளர்கள் இருக்கின்றனர். மருத்துவமனைகள், இயற்கை உணவகங்களில் நேரடியாகவே விற்பனை செய்கிறோம். நல்ல வரவேற்பு உள்ளது. முக்கியமாக, காதி பவன்கள், காதி கிராப்ட்கள் போன்ற அரசு நிறுவனங்களில் எனது தயாரிப்புப் பொருள்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து, கொஞ்சமாய் வருவாய் ஈட்டி வருகிறேன். பலரும் மூலிகை சூப் மிக்ஸ், தேநீர் பொடிகளை நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
சிறுதானியங்கள் அந்தக் காலத்தில் சத்து மாவு கஞ்சி மட்டுமே. கஞ்சியாக கொடுத்தால் இன்றைய தலைமுறையினருக்குப் பிடிக்காது. அதனால், வேறு சுவைகளில் கொடுக்க முயற்சித்தேன். வெற்றியும் கண்டேன். பராம்பரிய அறிவையும், கற்பனைத் திறனையும் மேம்படுத்தி உருவானதுதான் எங்கள் தயாரிப்புகள்.
எத்தனை வகை உணவுகளைத் தயாரிக்கிறீர்கள்?
வரகரிசி, தினை, சாமை, குதிரை வாளி, பனி வரகு, கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா, கொள்ளு, ராகு, கம்பு, வெந்தயம், சோயா, பார்லி ஆகியவற்றைப் பயன்படுத்தி, அடை மிக்ஸ், வடை மிக்ஸ், பொங்கல் மிக்ஸ், தோசை மிக்ஸ், சப்பாத்தி மாவு வகைகள், புட்டு மாவுகள் என 250 வகைகளில் உணவுப் பொருள்களைத் தயார் செய்கிறேன். எங்கள் உணவுப் பொருள்களுடன் தண்ணீரை சேர்த்து சமைத்தாலே போதும். உணவு உடனே தயார். இதனால், மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.
உங்களுக்கு கிடைத்த பாராட்டுகள்...?
எனது செயல்பாட்டுக்காக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழககத்தில் இயங்கி வரும் "வீட்' என்ற அமைப்பு 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த சாதனைப் பெண்மணி விருதை வழங்கியது. தஞ்சாவூர் ஐ.ஓ.பி. ஆர்.எஸ்.இ.டி.இ. சார்பில் ""மில்லட் குயின்'' என்ற விருதும், சென்னை நீதிபதிகள் சங்கம் சார்பில் ""பில்லர் ஆப் நேஷன்' என்ற விருதும், 2020-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள குளோபல் பீஸ் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டன.
தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஐ.ஐ.எஃப்.பி.டி. சார்பில் 2014-ஆம் ஆண்டு முதல் 2021 வரை சாதனையாளர் விருது தொடர்ந்து வழங்கப்பட்டது.
உங்களது லட்சியம் என்ன?
இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது என்பது பெரிதும் வரவேற்கத்தக்கது. இந்த நேரத்தில் எனது சிறுதானிய உணவுப் பொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது லட்சியம். இதுவும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.