ஞாயிறு கொண்டாட்டம்

அரசியல் என்பது தேர்தல் மட்டுமே அல்ல!

"ஒரு சமூகத்தின் நீதி கல்வி கூடங்களில்தான் பிறக்கிறது. ஆசிரியர்களிடம் இருந்துதான் ஒவ்வொரு சமூகமும் முதல் ஒளி வாங்கி கொள்ள முடியும்.''

ஜி. அசோக்


"ஒரு சமூகத்தின் நீதி கல்வி கூடங்களில்தான் பிறக்கிறது. ஆசிரியர்களிடம் இருந்துதான் ஒவ்வொரு சமூகமும் முதல் ஒளி வாங்கி கொள்ள முடியும்.'' இரண்டே வார்த்தைகளில் கதையின் ஆழம் பேச தொட்டுப் பார்க்கிறார் இயக்குநர் ஜெய் அமர்சிங்.  "காலேஜ் ரோடு' படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவுக்கு வரும் புதுமுக இயக்குநர்.

கல்லூரி கால வாழ்க்கை நினைவே.... எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு....

ஒரு கல்லூரி  என்பது, ஒரு சமூகம். ஒரு தேசம். அங்கிருக்கும் சூழலையும் சக மாணவர்களையும் அனுசரிக்க முடியாமல் போனதுதான் இங்கே பல பேருக்கான பிரச்னை. அது வெறும் வாடகை சத்திரம் அல்ல. அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். ரசவாதக் கூடம். மாறுபவனும் இருக்கிறான். மாற்றப்படுகிறவனும் இருக்கிறான். எல்லா கல்லூரிகளிலும் யாரோ ஒருவன் வீட்டுக்கு அடங்காமல் வந்து சேருகிறான். யாரோ ஒரு மாணவனுக்கு காதல் பூக்கிறது. ஒருவனுக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவன் கலைஞனாகிறான். கவிதை எழுதுகிறான். அரசியல் கற்று உணர்கிறான். ஒருவன் குற்றவாளியாகிறான். நிறைய பேர் திருந்துகிறார்கள். யாரோ ஒருவன் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்கிறான் வெகு நாள்களுக்கு பிறகு... கல்லூரி  என்பது ஒரு வனத்தை கடந்த மாதிரி இருக்கிறது எல்லோருக்கும். இதுதான் கதையின் அடிப்படை. இன்றைய கல்வி சூழல், அரசியல், ஜாதியம் எல்லாவற்றையும் கொண்டு வருவதில் சவால். ஒரு அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். இன்றைய கல்லூரி  சூழல் சீர் கெட்டு கிடக்கிறது. தனியார் கல்லூரிகள் வட இந்திய இளைஞர்களை அதிகமாக சேர்த்து விடுகிறது. அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்களை நிர்வாகங்கள் கண்டிக்கத் தவறி விடுகிறது. அவர்களின் வாழ்க்கை சூழல் வேறு மாதிரியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் கல்வி கடன் மோசடி, பணக்கார மாணவர்களுக்கு ஒரு கல்வி. ஏழை மாணவனுக்கு ஒரு கல்வி என பேதங்கள் நிறைய இருக்கின்றன. இது மாதிரி ஒவ்வொரு இடமும் கவனிக்கத் தோன்றும். 


விமர்சனங்கள்தான் அதிகமாக வெளிப்படும் போலவே...

எல்லாம் உண்டு.  விமர்சனங்களும்தான்.  குறிப்பாக தனி மனித வாழ்வு தொடங்கி அரசியல் வரைக்குமான ஏக விமர்சனங்கள் இருக்கும். இங்கே அரசியல் என்பது மக்கள் புரட்சி, தேர்தல், ஆட்சி என்பது மட்டுமே அல்ல... கல்வி, வேலை, தனி மனித வளர்ச்சி, குடும்பம், உறவுகள் வரை அந்த வார்த்தை ஊடுருவிக் கிடக்கிறது. குருஷேத்திர யுத்தமும் அரசியல்தான். யூதாஸ் கொடுத்த முத்தமும் அரசியல்தான். நீங்கள் எதை தருகிறீர்கள்... எதை பெறுகிறீர்கள்... என்பது அல்லவா முக்கியம். கொலம்பிய காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சே-வின் விழிகளில், சிறுநீருக்கு பை வைத்துக் கொண்டு இறுதிக் கணங்களிலும் பேசிய பெரியாரின் சொற்களில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன.. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்கோப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் கல்வி என்றாகி விட்டது. அரசியல் செல்வாக்கு இருந்தால் அவர் ஒரு கல்லூரி தொடங்கி, கல்விமான் ஆகி விடலாம்  இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அது தவறு.. இது தவறு... எனப் பேசிப் பேசியே நமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்ய தவறி விடுகிறோம். எவ்வளவு திட்டமிடல்களோடு இருந்தாலும், அவனையறியாமல் அந்த நாள்களை இந்த சமூகமும், அரசியலும் மாற்றி எழுதி விடுகின்றன. உன்னை சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும் என்பதுதான் இந்த கதையின் நீதி. அதை கல்வி கொள்கை கொண்டு உரசியிருக்கிறேன். 

கல்லூரி சாலை, காதல், ரகளை, நட்பு, பிரிவு என இன்னொரு தனி கலர் தர வேண்டுமே... 

எதிர்பார்க்கும் எல்லாமே இருக்கும்.  குறிப்பாக  கல்லூரி, மாணவர்கள், சக ஆசிரியர்கள் இதுதான் களம். ஆசிரியர்கள் நமக்குச் சொல்லித் தந்த பூக்கள், எப்போதும் உதிராத பூக்கள். நிறம் இழக்காமல் , வெயில் மழை குடிக்கும் பூக்கள். எங்கே சென்றாலும், என்ன ஆனாலும்  ஆசிரியர்களுக்கு நாம் சிறு பிள்ளைகள்தான். அவர்கள் கடவுளின் நிழல் போல் எங்கோ இருக்கிறார்கள். வயதாகி உடல் உடைந்து சிரமங்கள் கடந்து எப்படி எப்படி எல்லாமோ ஆகி விடுகிறார்கள். ஆனால், நம் நினைவில் நிற்பது கம்பீரமான ஆசிரியர்கள்தான். பறவையின் இறகைப் போன்ற அப்பழுக்கு எதுவும் இல்லாத நமது பால்யத்தை எடுத்துக் கொண்டு ஆசிரியர்கள் போய் விடுகிறார்கள். அதனால்தான் காலத்துக்கும் அவர்களை நினைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆசிரியர்கள் எப்போதும் பரிசுத்தம்.  இது மாதிரி கவிதையான இடங்களும் இங்கே உண்டு. கல்வியின் அவசியமும்,  அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிற படமாகவும் 
இருக்கும்.

நடிகர்கள்....

"கபாலி', "பரியேறும் பெருமாள்', "கஜினிகாந்த்', "டானாக்காரன்  உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் வருவாரே, லிங்கேஷ் அவர்தான் ஹீரோ.

மோனிகா, ஆனந்த்நாகு,  அன்சர், அக்சய் கமல், பொம்முலக்ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத் இப்படி மற்ற கதாபாத்திரங்களுக்கு இவர்கள் எல்லாம் பொறுப்பு. இசைக்கு ஆப்ரோ, ஒளிப்பதிவு இயக்குநராக  கார்த்திக் சுப்ரமணியம்  இப்படி மற்ற இடங்களிலும் சாதிக்க துடிக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு இருக்கிறது. எல்லோருக்கும் இந்தப் படத்தில் தனித்துவமான இடங்கள் உண்டு..இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. அதுதான் இந்த சினிமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT