முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இதுவும் கடந்து போகும்!

""இந்தப் படத்துக்கான கருவை சாதாரண மக்களின் வாழ்க்கையில்  இருந்துதான் எடுத்தேன். என் வாழ்க்கை, என் நண்பர்களின் வாழ்க்கை என  எல்லாமே  இருக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:

""இந்தப் படத்துக்கான கருவை சாதாரண மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் எடுத்தேன். என் வாழ்க்கை, என் நண்பர்களின் வாழ்க்கை என எல்லாமே இருக்கிறது. வாழ்க்கையின் அனுமானம்தான் இந்தக் கதை. "உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி' என்கிற அழகான கருத்தை புத்தர் சொல்லியிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாமே பெரிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு இருக்கும்போது, நாமே அதற்கு சாட்சியாக இருப்போம் என்று தோன்றியது. அப்படித்தான் இந்தக் கதை வடிவமைக்கப்பட்டது. தயாரிப்பும் கூட நண்பர்களுடன் சேர்ந்துதான். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். நம்பிக்கையுடன் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் லோகேஷ்குமார். "மை சன் இஸ் கே' படத்தின் மூலம் அறியப்பட்டவர். இப்போது வட சென்னையை களமாக கொண்டு "ச 4' படத்தை இயக்கி வருகிறார்.

இண்டிபெண்டன்ட் சினிமா...?

நிறுவனங்கள் சாராத சுதந்திரமான சினிமா. சின்ன வயதில் கூட்டாஞ்சோறு ஆக்குகிற மாதிரி ஒரு சினிமா எடுத்திருக்கிறோம். நண்பர்கள் நவீன்சர்மா, யோகேஷ் சர்மா என்ற நண்பர்களுடன் நானும் தயாரித்திருக்கிறேன். கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேசத்தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான ஃபார்முலா இருக்காது. ஆனால், சுவாரஸ்யமான சினிமா. சுவாரஸ்யம் என்பது பாட்டு, சண்டை, குரூப் நடனத்தில் மட்டும் இல்லை. இயல்பான வாழ்க்கையிலும் இருக்கிறதென சொல்ல வருகிற சினிமா. தயாரிப்பாளருக்காகப் பாட்டு வைத்தேன். காமெடி வைத்தேன் என்று இல்லாமல் கதைக்கு நேர்மையாக என்ன வைக்கிறோம்... அதுதான் முக்கியம் என்று நினைத்து ஒரு படத்தை எடுத்தோம். படத்தைப் பார்த்தப் பிறகு பிறகு நாம் பேச நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன். அதற்கு முன்னாடி இப்படி வந்திருக்கிறது. அப்படி வந்திருக்கிறதென சொல்ல கூச்சமாக இருக்கிறது. ஓர் எளிமையான சினிமா. இந்த மாதிரி இண்டிபெண்டன்ட் முயற்சியை உலகத்தில் எல்லோரும் செய்து பார்த்து விட்டார்கள்.

எப்படி கைக்கு சேர்ந்திருக்கிறது படம்...

முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதை நிகழ்த்தியும் காட்டினேன். இது இரண்டாவது படம். கொஞ்சம் எளிமையாக அதே நேரத்தில் நம் வாழ்க்கையை விட்டு அகலாத சினிமாவாக வேண்டும் என நினைத்தேன். அது நடந்திருக்கிறது. நாம பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. இதுவும் அப்படித்தான். எங்கேயோ யாரோ சொன்ன வார்த்தைகள். அதுததான் இந்தக் கதைக்குள் இழுத்து வந்தது. அதை வைத்து ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தேன். எல்லோரும் எதாவது ஒரு நேரத்தில் சந்திக்கிற பிரச்னை இந்தக் கதையில் இருக்கும். பணக்காரனையோ, கோடிஸ்வரனையோ, பலம் பொருந்திய தாதாவையோ எங்கேயாவது சந்திப்போம். அவர்கள் நமக்கு உதவுவார்கள், இல்லையெனில் நமக்கே எதிராக திரும்புவார்கள். அப்படி ஒரு சூழல்தான் கதை. யாரோ செய்கிற ஒரு நிமிட தவறு, நம்மின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி வைக்கும். அதுதான் கதைக்கரு. வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். இந்தப் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக்கலாம். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யவோ, குறைகளை சுட்டிக் காட்டவோ, நான் படம் எடுக்கவில்லை. நல்ல கமர்ஷியல் படம். அதே நேரத்தில் உறுத்தல் இல்லாத சினிமா. எல்லோரும் பார்த்து கழிக்கும் ஒரு சாதாரண கதை. எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அடித்தளம். அவ்வளவுதான். நானே தயாரிப்பாளர் என்பதால் கொஞ்சம் சுமை.
அவ்வளவுதான்.

கதைக்கான தொடக்க புள்ளி எது....

"இதுவும் கடந்து போகும்'... இந்த வார்த்தைகள் எல்லோரின் வாழ்க்கையிலும் வந்து போகும். மிக அதிக முறை எனக்கு நானே சொல்லிக் கொள்கிற சொற்கள் இதுதான். எல்லோருக்கும் அப்படித்தான். சூழலை சமாளிக்கிற விஷயம். எல்லோருக்குமான, எப்போதைக்குமான வார்த்தைகள். "அஞ்சு ரூபா இருந்தா ரெண்டு இட்லியாவது சாப்பிட்டுக்கலாம்....' என கையில் காசியில்லாமல் பசியோடு எங்கு திரிந்தமோ, அங்கேயே மிகப் பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு யாராவது உபசரித்தால் எப்படி இருக்கும். இதுதான் வாழ்க்கை. இதற்கெல்லாம் யாரோ ஒருவர் எங்கேயோ காரணமாக இருப்பார். இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இன்னொரு சக மனிதன் உலவி கொண்டிருக்கிறார். இதுதான் இதன் அடித்தளம். அதை மூன்று காதல் ஜோடிகள்.... இன்னும் சில கதாபாத்திரங்கள் வாயிலாக நகர்த்தி வந்திருக்கிறேன். ஆழ்ந்து பார்த்தால், உங்கள் வாழ்க்கையும் இதில் இருக்கும். எல்லாவற்றையும் சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் சாமானியன் போல் நீங்கள் பார்ப்பீர்கள். என் 4 என்பது சென்னை காசிமேடு பகுதியின் போலீஸ் ஸ்டேஷனை குறிக்கும். அந்த ஸ்டேஷனைச்சுற்றிய மீனவர்கள் வாழ்க்கை, கடற்புரம், மனிதர்கள் இதுதான் களம். "பர்மா' மைக்கேல் துரை, டி.வி. புகழ் கேப்ரியல்லா செலஸ், அஃப்சல் ஹமீது, வினுஷாதேவி, அக்ஷய் கமல், பிரக்யா, நாக்ரா, அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு.... இப்படி நடிகர்கள். இப்படி தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு சம அளவில் கை கொடுத்திருக்கிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.