ஞாயிறு கொண்டாட்டம்

பருவ நிலை போராளி!

கடலில்  நீந்துவது  ஒரு சாகசம்தான்...!  கடலினுள் நீந்துதல் (ஸ்கூபா டைவிங்) கடலில் நீந்துவதைவிட  சாகசமானது.

பிஸ்மி

கடலில் நீந்துவது ஒரு சாகசம்தான்...! கடலினுள் நீந்துதல் (ஸ்கூபா டைவிங்)கடலில் நீந்துவதைவிட சாகசமானது. தாரகைஆராதனா இரண்டு வயதிலேயே நீந்துதலை கற்றுக்கொண்டவர். இப்போது எட்டு வயதில் கடலில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, கடலைத் தூய்மைப்படுத்தும் "பருவநிலை போராளி' யாக மாறியிருக்கிறார்..

சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்தஆராதனா அனுபவங்களைப் பகிர்கிறார்:

""நீச்சல் மிக அருமையான உடல் பயிற்சி. முக்கியமாக மூச்சு இழுக்க, வெளியே விடும் நுரையீரலுக்கு முறையான பயிற்சி நீச்சல் மூலம் கிடைக்கும். இந்தக் கரோனா காலத்தில் நுரையீரலுக்கு பயிற்சி மிகவும் அவசியம். கடலுக்குள் நீந்தும் முன் நீச்சலில் நல்ல பயிற்சி வேண்டும். கடலுக்குள் மூழ்கி நீந்தும் போது மூச்சை பிடித்து வைக்கக்கூடாது. இது கடலுக்குள் நீந்துவதன் முதல் விதி. காலத்தினுள் நீந்தும் போது சுவாசிப்பதற்கு உதவ ஆக்ஸிஜன் அடங்கிய சிலிண்டர்கள் உண்டு. அதை முதுகில் கட்டிக்கொண்டு கடலுக்குள் போக வேண்டும்.

கடலில் ஐந்து வயதிலிருந்தே நீந்தி வருகிறேன். அப்பா அரவிந்த் தருண்ஸ்ரீ தான் நீந்துதலைக் கற்றுக் கொடுத்தார். இருபது ஆண்டுகளாக அப்பா ஸ்கூபா டைவிங் பயிற்றுவிப்பாளராக இருக்கிறார். நீந்தி நீந்தி, கடலுடன், கடல் அலைகளுடன் பழகிவிட்டேன். கடலில் நீச்சலைக் கற்றுக் கொடுத்ததுடன் கடலுக்குள் மூழ்கி நீந்துவதையும் படிப்படியாகக் கற்றுக் கொடுத்தார். அத்துடன் கடலுக்கு அடியில் வளரும் தாவரங்கள், கடலினுள் இருக்கும் சூழல் குறித்தும் அப்பா விளக்கியுள்ளார்.

இப்போது நிலத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலை எப்படி கெட்டுப் போயுள்ளதோ, அது போலவே கடலினுள் சுற்றுப்புறச் சூழ்நிலையின் கட்டமைப்பும் பாதிப்படைந்துள்ளது.

கடலின் நீர்மட்டத்தைப் பார்த்தால் கடல் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது கண்களுக்குத் தெரியாது. ஆனால் கடலுக்கு அடியில் எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்துள்ளது என்பதை கடலுக்குள் சென்றால்தான் புரியும். அப்பா இதனை எனக்கு நன்றாகவிளக்கியுள்ளார்.

அப்பா கடற்கரையில் கழிவுகளையும், கடலுக்கு அடியிலும் சுத்தம் செய்யும் முறைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார். அப்பாவுடன் சேர்ந்து கடலுக்கு அடியில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் வலை துண்டுகள், மீனவர்கள் சாப்பிட்டுவிட்டு வீசும் பிளாஸ்டிக் தாள்கள், உறைகள் இவற்றை அகற்றி வருகிறேன். இதுவரை நான் மட்டும் சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கடலிலிருந்து அகற்றியுள்ளேன். அப்பா 17 ஆண்டுகளாக 10 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கடலின் அடியிலிருந்து வெளியே கொண்டுவந்துள்ளார். இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு விலைக்கு கொடுக்கிறோம் . வரும் பணத்தை சேமித்துசுற்றுப்புற சூழ்நிலையைப் பேணும் நடவடிக்கைகளுக்கு நன்கொடையாக வழங்குவேன்.

பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் வாழும் மீன்கள், "கடல் பசு' , ஆமைகள், டால்பின்களைப் பாதிக்கும். அதனால் கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை போடுவதை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். இதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்த கடலைக் காப்போம் என்ற நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக 18 கி.மீ கோவளம் முதல் நீலாங்கரை வரை கடலில் நீந்தியுள்ளேன். வளர்ந்ததும் அப்பா போல் நீச்சல் பயிற்சியாளராக மாறவேண்டும். கடல் மாசுபடுவதிலிருந்து என்னால் முடிந்த அளவுக்கு பாடுபடுவேன்... என்கிறார் தாரகை ஆராதனா..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT