மரக்காணம் சென்னை- புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஊர். இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சங்கக் காலத்தில் தொண்டை நாட்டில் முக்கிய துறைமுகப் பட்டணமாக இருந்துள்ளது. இந்த ஊர் மனக்காணம் எனவும் அழைக்கப்பட்டது.
"கானம்' என்பது கடலோரப் பகுதியைக் குறிக்கும். கடலோரத்தில் மரங்கள் அடர்ந்திருப்பதால், மரக்காணம் என பெயர் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த ஊரும், சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள "எயிற்பட்டினம்' என்பதும் ஒரே இடமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
பெரிப்ளூஸ் எனும் கிரேக்க நூலில் "சோப்ட்மா' (சோபட்டினம்) என்ற இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. "எயில்' என்றாலும் "சோ' என்றாலும் மதில் என்பதே பொருள். இந்தத் துறைமுகத்தை மதில் சூழ்ந்திருந்ததால் இந்தப் பெயர் பெற்றது.
சோபட்மா என்ற வியாபாரத் தலம் "காமரா' (காவிரிபூம்பட்டினம்) எனப்படும் இடத்துக்கு அடுத்ததும், புதுக்கேயை (புதுச்சேரி) அடுத்ததும் இவ்வூர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நூலில் சோபட்மா என்பது சூ- பட்டனா (அழகான நகரம்) என குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கத் தொகை நூல்களாகிய பத்துப்பாட்டில் ஒன்று சிறுபாணாற்றுப்படை. இதில் இந்தப் பகுதி "ஒய்மாநாடு' என்று அழைக்கப்பட்டிருந்தது. ஒய்மா நாட்டை ஆண்டு வந்த நல்லியக் கோடன் என்ற அரசிடம் பரிசல் பெற்றுவந்த சிறுபாணன் ஒருவன், வறிய மற்றொரு சிறுபாணனைக் கண்டு அவனை அரசன் நல்லியக் கோடனை ஆற்றுப்படுத்துவதாகவும் பாடப்பட்டதாகும். இந்தப் பாட்டு 296 அடிகளைக் கொண்டது. இதனைப் பாடியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் ஆவார்.
மரக்காணத்திலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் வடக்கே இடைக்கழி நாடு அமைந்துள்ளது. கடப்பாக்கம் அருகேயுள்ள வேம்பனூர் கோயில் கல்வெட்டில் இடைக்கழிநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுபாணாற்றுப்படையில் ஒய்மா நாட்டுக் கடற்கரையின் எழில், முல்லை நிலம், மருத நிலம் ஆகியவைப் பற்றிய செய்திகளும், இந்த நாட்டில் அமைந்திருந்த ஊர்களான எயிற்பட்டினம், ஆமூர், கிடங்கில் மாவிலங்கை வேலூர் ஆகியன பற்றிய குறிப்புகளும், மாமன்னனின் கொடைத்தன்மையும் பிற பண்புகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
எயிற்பட்டணத்தைப் பற்றி
""காணல் வெண் மணல் கடலுலாய் நிமிர்தரப்
பாடல் சான்ற நெய்தல் நெடுவி''
மணி நிர் வைப்பு மதிலொடு பெயரிய
பணிநீர்ப படுவடிவற் பட்டினம்
ஒழுங்கு நிலை ஒட்டகந் துயில் மடித்தன்ன
விங்குதிரை கொணர்ந்த விரை மாவிற்கு (155-156)
இப்பாடல் வரிகளின் மூலம் விரைமரம் (அகில் கட்டை) இத்துறைமுகத்தில் சாவக நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்ற செய்தியை அறியலாம்.
இவை அறிஞர் மயிலை சீனி, வேங்கடசாமியின் கருத்து. இதே பாடலில் இந்த அகில் மரக்கட்டைகள் படுத்து உறங்கும் ஒட்டகம் போன்ற வடிவில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூமிசுவரர் திருக்கோயில் மரக்காணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பூமிசுவரர் கோயிலில் 21 கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் குலோந்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், விருப்பண்ண உடையார், நரசிங்கராயர், மல்லிகார்ச்சுனராயர், இம்மடி அச்சுதேவ மகாராயர் ஆகிய மன்னர்கள் கால கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன.
முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் இப்பகுதி ""ஓய்மா நாட்டு பட்டினமான தேவதானம்'' என்றும் குறிப்பிடப்படுகிறது.
இராஜேந்திர சோழன் கல்வெட்டுகளில், ""ஒய்மா நாட்டுப் பட்டின நாட்டுப் பட்டின தேவதானம்'' என்றும் அழைக்கப்படுகிறது.
முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டில் "எயிற்பட்டினம்' என்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. மேலும், ""விக்கிரமச் சோழ சதுர்வேதிமங்கலம்'' எனவும் ""கண்டராதித்த நல்லூர்'' எனவும் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
விஜயநகர மன்னர்கள் காலத்தில்தான் இவ்வூர் மரக்காணம் என்று அழைக்கப்பட்டது.
இராஜராஜன் பெயரில் வழங்கப்பட்ட உப்பளத்திலிருந்து வரும் வருவாயைக் கொண்டு திருகோயிலுக்கு விளக்கு எரிக்க தானம் அளிக்கப்பட்டது. இன்றும் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலுக்கு அடிப்படையான உப்பளங்கள் பூமிசுவரர் கோயிலுக்கு வடக்கே காணப்படுகின்றன.
மண்மேடுகள்
மரக்காணம் பூமிசுவரர் கோயிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் கடற்கரை அமைந்துள்ளது. இவ்வூரில் அருகே கடல்நீரை உள்ளே கொண்டுவரும் கழிமுகம் இருக்கிறது.
கடற்கரை அருகே மணல் மேடுகள் காணப்படுகின்றன. கரிப்பாளையம், உச்சிமேடு, கரிமேடு, அழகன் குப்பம், தாழைக்காடு, வசவன் குப்பம், கைப்பாணிக் குப்பம் முதலிய சிறு ஊர்கள் காணப்படுகின்றன. இங்குள்ள மணல் மேடுகளில் பண்டைய பானை ஓடுகள், காசுகள் முதலியவை கிடைத்து
ள்ளன.
அகழாய்வு
மரக்காணத்தின் தொன்மைச் சிறப்பை அறிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (2005-06) ஆண்டுகளில் இங்குள்ள கந்தாடு- நடுக்குப்பம் வழியில் "பச்சை பைத்தான் கொல்லை', பூமிசுவரர் கோயில் அருகே, முக்குருணிக்காடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஆய்வுக் குழிகள் அமைத்து, அகழும் பணியை மேற்கொண்டது. அப்போது, கெண்டியின் மூக்குப் பகுதிகளும், பிற்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள், கூரை ஓடுகளின் பகுதிகளும் கிடைத்தன.
மேலும், விஜய மன்னர் கால காசுகள், சோழசிற்றர்களின் காசுகள், ஈழக் காசுகள், ஆங்கிலேயர் காசுகள், சுடுமண் குழாய், பானை ஓடுகள் போன்றவையும் கிடைத்தன.
அகழாய்வில் கிடைத்த தொல்பொருள்கள் கி.பி. 11 முதல் 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக உள்ளன. வரலாற்றுச் சான்றுகளின்படி, மிகவும் குறைந்த காலத்துக்கே இந்தத் துறைமுகம் பயன்பட்டிருக்க வேண்டும் என்றும் இயற்கைச் சீற்றத்தால் துறைமுகம் அழிந்து போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதற்கு அடையாளமாக உயரமான மணல்மேடுகளே அடையாளமாக விளங்குகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.