பாசியில் மின்சாரம்!
ஒரு சிறிய ஆல்காவில் (பாசி) நடைபெறும் ஒளிச் சேர்க்கையின்போது உருவாகும் மின்சாரத்தில் கணினி பாகம் இயங்கும் அதிசயத்தை அறிவியல் நடத்திக் காட்டியுள்ளது.
ஒரு சிறிய ஆல்காவில் (பாசி) நடைபெறும் ஒளிச் சேர்க்கையின் போது உருவாகும் மின்சாரத்தில் கணினி பாகம் இயங்கும் அதிசயத்தை அறிவியல் நடத்திக் காட்டியுள்ளது. இது இணையத்துடன் இணைக்கப்பட்ட கோடிக்கணக்கான கணினி சாதனங்களில் சிலவற்றை இயக்குவதற்கான மாற்றுவழியை நிரூபிக்கிறது.
2035-ஆம் ஆண்டில், ஒரு லட்சம் கோடி தொலைபேசிகள், ஸ்மார்ட் கருவிகள் மற்றும் பிற சாதனங்கள் இணையத்தில் இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இன்று பல இணைய சாதனங்கள் லித்தியம்-அயன் பேட்டரிகளால் இயக்கப்படுகின்றன. ஆனால், அவை குறிப்பிடத்தக்கக் குறைபாடுகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக, விலை உயர்ந்தவை. அவற்றின் ஆற்றல் மிக நீண்ட காலம் நீடிக்காது. இறுதியில் அவை முற்றிலும் வீணாகி, மின்-கழிவுகளாக மாறும்.
இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனமான ஆர்ம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சாதனங்களுக்கான வேறுபட்ட சக்தி மூலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
அலுமினியம், தெளிவான பிளாஸ்டிக் மூலம் ஏஏ பேட்டரி அளவுள்ள ஒரு கொள்கலனை அவர்கள் உருவாக்கினார்கள். சூரிய ஒளியிலிருந்து ஆற்றலைப் பெற ஒளிச் சேர்க்கையைப் பயன்படுத்தும் நீர், பாசிகளால் அதை நிரப்பினர். அந்த ஒளிச் சேர்க்கையின்போது ஒரு சிறிய மின்னோட்டம் உருவாகியது.
இந்த மின்னோட்டத்தை இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் சாதனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய கணினி பிராசசரை இயக்குவதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். 45 நிமிடங்களுக்கு அந்த பிராசசர் இயங்கியது. 15 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து அது இயங்கியது.
6 மாதங்களுக்குப் பிறகு தங்கள் ஆய்வைச் சமர்ப்பித்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ""ஒரு சாளரத்தில் வைக்கப்பட்ட இந்தச் சாதனம் ஓராண்டுக்கும் மேலாக, இரவில் கூட சீராக வேலை செய்தது. இந்த அமைப்பு நீண்ட காலமாக எவ்வளவு சீராக இயங்குகிறது என்பதை அறிய ஆர்வத்துடன் காத்திருந்தோம். சில வாரங்களுக்குப் பிறகு அது இயக்கத்தை நிறுத்திவிடலாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், அது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது'' என்றனர்.
இது குறித்த முடிவுகளை எரிசக்தி, சுற்றுச்சூழல் அறிவியல் இதழில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த முயற்சி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றால், வீடுகள், அலுவலகங்களில் உள்ள கணினி சாதனைங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக ஒளிச்சேர்க்கை மின்சாரம் அமையும்.
இதுதொடர்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கார்பஸ் கிறிஸ்டி கல்லூரியின் உயிரி வேதியியல் துறை பேராசிரியரும், ஆய்வில் ஈடுபட்ட முக்கிய விஞ்ஞானியுமான கிறிஸ்டோபர் ஹோவ் கூறுகையில், ""குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கிராமப்புறங்களில் இது பெருமளவில் பயன்படும். உதாரணமாக, சுற்றுச்சூழல் சென்சார்கள் அல்லது மொபைல் போனை சார்ஜ் செய்வது போன்ற சிறிய அளவிலான சக்தி பயன்பாடுகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.