முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சக்கர நாற்காலியில் அமர்ந்தே நடன  நிகழ்ச்சிகள்!

மாற்றுத் திறனாளிகள்  மேடைகளில் நடனம்  ஆடும் அளவுக்குத் திறமை பெற முடியுமா...?  "முடியும்' என்கிறார்  சக்கர நாற்காலியில்  அமர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் 30 வயதான ஹஸ்னைன்.  

Updated On : 29 மே, 2022 at 6:00 AM
பகிர்:


மாற்றுத் திறனாளிகள் மேடைகளில் நடனம் ஆடும் அளவுக்குத் திறமை பெற முடியுமா...? "முடியும்' என்கிறார் சக்கர நாற்காலியில் அமர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் 30 வயதான ஹஸ்னைன்.

தன்னைப் போலவே சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளைக் கேட்கும், பேசும் திறன் இல்லாதவர்களை ஒன்றி
ணைத்து நடனப் பயிற்சி நிலையம் ஒன்றையும் ஹஸ்னைன் நடத்திவருகிறார். இதுகுறித்துஅவர் கூறியதாவது:

""தில்லியில் உள்ள எனது நடனப் பயிற்சி நிலையத்தில் பரத நாட்டியம், ஸல்ஸா நடனங்களைக் கற்றுத் தருகிறோம். சுமார் 90 மாற்றுத்திறனாளிகள் நடனம் கற்றுக் கொள்கிறார்கள். நான் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டேன். இதுபோல நடனம் தெரிந்த எட்டு நண்பர்கள் சேர்ந்து "நாங்கள் ஒன்று' என்ற நடனப் பள்ளியை 2016-இலிருந்து நடத்திவருகிறோம்.

Advertisement

இங்கு நடனம் கற்பிப்பவர்களும் மாற்றுத் திறனாளிகளே. எல்லா வயதிலும் நடனம் கற்பவர்கள் இருக்கிறார்கள். 65 வயது மாற்றுத் திறனாளியும், எட்டு வயது மாற்றுத் திறனாளியும் எங்கள் மாணவர்களாக இருக்கிறார்கள். பலவிதங்களில் மாற்றுத் திறனாளிகளாக உள்ள எங்களை இணைப்பது நடனம் கற்க வேண்டும். கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம்தான்.

ஒரு வயதாக இருக்கும் போது கடுமையான காய்ச்சல் என்னைப் பாதிக்க, நடக்க முடியவில்லை. அம்மாவின் மடியில், பெற்றோரின் கரங்களில் வளர்ந்தேன். பிறகு சக்கர நாற்காலியில் நிரந்தரமாக அமர்ந்தேன். அமர்ஜோதி அறக்கட்டளை பள்ளியில் படித்தேன். நடனமும் என் வாழ்க்கையில் அறிமுகமானது. பன்னிரண்டாம் வயதில் தில்லி தல்கோட்ரா விளையாட்டு அரங்கில் சக மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் நடன நிகழ்ச்சி அரங்கேறியது. அந்த நிகழ்ச்சி எனக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து, 1,500 நடன நிகழ்ச்சிகளை எட்டு நாடுகளில் நடத்தியுள்ளேன். சில சமயங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்த நான் பிறந்திருப்பதாக நினைத்துக் கொள்வேன்.

"சக்கர நாற்காலியில் அமைந்து கொண்டு நடன அசைவுகளை அதுவும் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் அமைப்பது சாதாரண விஷயம் அல்ல. எங்கள் நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் பிரமித்துப் போவார்கள். உடலில் இத்தனை குறையிருந்தும் எப்படி இத்தனை நிறைவாக நடன நிகழ்ச்சிகளை வழங்க முடிகிறது என்று ஆச்சரியப்படுவார்கள். இவ்வளவு நளினம் லாவகம் இருக்கும் இந்தக் கலைஞர்களை மாற்றுத்திறனாளியாக கடவுள் படைத்துவிட்டானே என்று அனுதாபப்படுவார்கள். பரத நாட்டியம், ஸல்ஸா படங்களுடன் மணிப்புரி வீர சாகச விளையாட்டுகள், யோகா இவற்றை சக்கர நாற்காலிகளில் இருந்து கொண்டே செய்து காண்பிப்போம். எங்களை நடனப் பள்ளிதான் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஸல்ஸா நடனத்தைப் பயிற்றுவிக்கும் முதல் பள்ளி.

"எல்லா பயிற்சி வகுப்புகளும் உடற்பயிற்சி வகுப்புகளுடன் தொடங்கும். அதனால்தான் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் நடன நிகழ்ச்சிகளை அமைக்க முடிகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டும்போது எங்கள் கவலைகள் அனைத்தும் பறந்து போகும். நாங்கள் பாத்ருத் திறனாளிகள் என்பதும் மறந்து போகும்....' என்றார் ஹஸ்னைன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.