"கைக்கு எட்டும் தொலைவில்
கழற்றி வைக்கப்படும்
கண்ணாடியை அணிந்து கொண்டு
ஓடி விளையாடும் குழந்தைகள்
கண நேரத்தில்
பெரியவர்களாகிவிடுகிறார்கள்!''
இப்படி ஒரு கவிதை படித்ததும், மனசு எங்கெங்கோ அலை பாய்ந்து திரிந்தது. அப்படி எனக்குள் தோன்றியதை, நூல் பிடித்து எழுதி சேர்த்தேன். இன்னொரு பக்கம் இந்த வாழ்க்கையின் மீது குழந்தைகள் கொண்டிருக்கும் கோபத்தின் வெளிப்பாடாகவும் இதை முன்னெடுத்து வந்தேன். ஸ்டீல்ஸ், படத்தின் மூட் எல்லாம் பார்த்தால் உங்களை சீரியல்தனம் தொற்றிக் கொள்ளலாம். ஆனால் முழுக்க முழுக்க காமெடி, கருத்து எனப் பெரியவர்களுக்கான விஷயங்களும் சேர்ந்த படம். குழந்தைகளின் உலகத்தை படம் பிடிக்கும் விதமாக "எறும்பு' படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுரேஷ். ஜி. கதை என்பதை தாண்டி, அது கையாளப்படுகிற விதங்களுக்குதான் இப்போது வெற்றி முகம்... இது எந்த விதத்தில் மாறுபடும்...?
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என ஒவ்வொன்றும் குழந்தைகளின் கோபத்தை சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன. இதை விட ஒரு கொடுமை.... ஒரு தகப்பனாக எனக்கும் என் மகளுக்குமான இடைவெளியை யாரோ போட்டு வைத்த சட்டத் திட்டங்கள் தீர்மானிப்பதுதான். பெண்களுக்காவது வீட்டில் அம்மாக்கள் இருக்கிறார்கள். உடல் சம்பந்தமான சந்தேகங்களை மகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று நினைக்கிற பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. அப்பாக்களுக்கு அந்த பொறுப்புணர்வு இல்லை. அதனால் நம் நாட்டில் வயது பெண்களை விட, வயது பையன்கள்தான் பாவம். தன் உடலில் நடக்கிற மாற்றங்களை நினைத்து குழம்பி, அநாவசியமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் நாம் மீட்கவே முடியாத தூரத்துக்கு போய் விடுகிறார்கள். நம் வீட்டிலேயே வளர்ந்தாலும், நிறைய டீன் ஏஜ் குழந்தைகள் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் இருக்கிறார்கள். இப்படி நிறைய விஷயங்களை இந்தப் படம் பேசும்.
பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்...?
குழந்தைகளின் உலகம் அப்பழுக்கு இல்லாத பிராயம். ஏக்கம், கனவு, ஆசை, பொறாமை, வன்மம், ஈகோ, மன்னிப்பு, காதல், தண்டனை என எதுவும் இல்லாத இதயங்கள். உண்மையில் பரிசுத்தங்கள். இல்லாதபோது ஏங்குவதும், இருக்கிறபோது ஆடுவதுமான மன நிலை அவர்களுக்கு இருப்பதில்லை. எப்போதும் ஒரே மன நிலைதான். குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லோரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும், நம்மால் நுழைந்து விடவே முடியாத உலகம் அது. ஒரு மழைக் காலையில் ஜன்னல் விளிம்பில் நெளிந்த மரவட்டை, ரயில் பூச்சியானது ஒரு குழந்தைக்குத்தானே? ஊளையிடும் நரிகள் கதையானதும் ஒரு குழந்தைக்குத்தானே? மரக்கிளை தூளியாவது...சுவர்களின் கிறுக்கல்கள் ஓவியமாவதும் குழந்தையால்தான்...? குழந்தைகளின் உலகத்தில் அசிங்கம் என்பதே இல்லை. அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளை பற்றியே பேசி விடுகின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும்.
பொதுவாக, தமிழ் சினிமாவில் சிறுவர்கள் இயல்புக்கு மீறி அதிகமாக பேசுவது மாதிரி காட்டுகிறார்கள்...
இதில் சிறுவர்களை அதிபுத்திசாலியாகவோ, மேதாவியாகவோ காட்டவில்லை. உண்மையில் சிறுவர்களின் உலகம் வேறு.
அதற்குள் நிறையவே பயணம் செய்து வசனங்கள் எழுதியிருக்கிறேன். காட்சிகள் வைத்திருக்கிறேன். பொன்வண்டு பிடித்து சந்தையில் விற்கிறது மாதிரியான சிறுவர்களின் குட்டிக் குட்டி சந்தோஷங்களைப் பதிவு செய்திருக்கிறேன். இந்தப் படம், இயக்குநர் பார்வையில சிறுவர்களின் வாழ்க்கையைச் சொல்லவில்லை. சிறுவர்களின் பார்வையிலேயே அவர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன்.
யாரெல்லாம் நடிக்கிறார்கள்...
13 வயது அக்காவிற்கும், 9 வயது தம்பிக்கும் இடையே நடைபெறும் சுவாரசியமான சம்பவங்களே படத்தின் மையக்கதை. குழந்தைகளுக்கான படம் தமிழ் திரையுலகில் உருவாவது அரிது. அதிலும் கிராமத்து பின்னணியில் தயாராவது அரிதிலும் அரிது. கைதி', "கனா' போன்ற படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரமான பேபி மோனிகா சிவாவும், "பிகில்', "மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரமான மாஸ்டர் சக்தி ரித்விக் இந்த இருவரும் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள். சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான் மற்றும் நடிகை சூசன் உள்ளிட்டோர் மற்ற இடங்களை நிறைத்திருக்கிறார்கள். காக்கா முட்டை படத்தில் நடித்த ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நாசத் இருவருக்கும் கதையில் தனி இடம் கதையை கேட்டதும் தயாரிக்க முன் வந்த டர்னிங் பாயிண்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ஆர். தாமோதரன் சாருக்கு இந்த சமயத்தில் பெரும் நன்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.