மகாத்மா காந்தி நூல் நிலையத்துக்கு வயது 70
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மகாத்மா காந்தி நூல் நிலையம் தொடங்கி, 70 ஆண்டுகள் ஆகின்றன.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மகாத்மா காந்தி நூல் நிலையம் தொடங்கி, 70 ஆண்டுகள் ஆகின்றன.
சென்னை சைதாப்பேட்டை தேரடி வீதியில் 1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஓர் கூட்டத்தில் மூதறிஞர் ராஜாஜி பேசியபோது, ""இன்று மகாத்மா காந்தி நம்மிடையே இல்லை. இருந்தாலும், அவரது நற்சிந்தனைகளைக் கடை பிடிக்க வேண்டிய மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது'' என்றார்.
இதற்கு செயல் வடிவம் கொடுக்க விரும்பினார் காந்தியவாதியான மகாலிங்கம். அதே ஆண்டு நவம்பர் 2-இல் தான் வசிக்கும் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் தெருவில், நெசவாளர்கள் நிறைந்த பகுதியில் சிறியதாய் ஒரு நூல் நிலையத்தை மகாலிங்கம் தொடங்கினார்.
"மகாத்மா காந்தி நூல் நிலையம்' என்று 25 புத்தகங்களோடு தொடங்கப்பட்டது. இப்போது அங்கு 25 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன.
இதுகுறித்து நூல் நிலைய நிறுவனர் மகாலிங்கம் கூறியதாவது:
""நூல் நிலையத்தை அப்போதைய எம்எல்ஏ ராஜம் ராமசாமி, பாரதியாரின் சீடரான பரலி சு,நெல்லையப்பர் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இங்கு ராஜாஜி, காமராஜர், கக்கன், ம.பொ.சி., சி.சுப்ரமணியம், பா.ராமசந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வந்துள்ளனர்.
1958-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நூல் நிலையத்தில் காந்திஜி சிலையை அன்றைய முதல்வர் காமராஜர் திறந்துவைத்தார்.
தொடக்கத்தில் நூல் நிலையத்துக்கு நிதி திரட்டுவதற்காக, மாம்பலம், சைதாப்பேட்டையில் இருந்த திரையரங்குகளில் அரசு அனுமதி பெற்று சிறப்புக் காட்சியாகத் திரைப்படங்களைத் திரையிடுவோம்.
அரசுக்கு வரி செலுத்தியதுபோல, மீதமுள்ள பணத்தில் புதிய நூல்களை வாங்குவோம். நிர்வாகச் செலவுகளை மேற்கொள்வோம்.
காமராஜரை சந்தித்து, "பொதுக் காரியத்துக்காக நிதி திரட்ட திரைப்படங்களைத் திரையிடுவதால், வரி விலக்கு அளித்தால் நன்றாக இருக்கும். மீதமாகும் பணத்தில் நிறைய நூல்களை வாங்க முடியும்'என்றேன்.
இதற்கு காமராஜர், "உனக்காகக் கேட்கவில்லை. நீ எனக்குத் தெரிஞ்சவன் என்பதால் என்னிடம் சலுகை பெற்றுவிட்டதாக உன்னை தப்பாய் பேசுவார்கள். என்ன வரியோ, அதைக் கட்டி விடு. மீதியை நீ உன் நூல் நிலையத்துக்குப் பயன்படுத்திக் கொள்' என்று சொல்லிவிட்டார்.
நூல் நிலையத்துக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களின் வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி பல உதவிகளைச் செய்திருக்கிறார். இவரால் தியாகராஜ பாகவதர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ், முத்துராமன், இயக்குநர் ஸ்ரீதர் உள்பட திரையுலப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர்.
இப்போது சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உதவி வருகிறார்.
காந்திஜி, லால் பகதூர் சாஸ்திரி, வினோபாஜி உள்ளிட்டோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். காமராஜர், கக்கன், ம.பொ.சி. ஆகியோருடன் நேரடித் தொடர்பில் இருந்தேன்.
ஒவ்வொருஆண்டும் காந்தி ஜயந்தியையொட்டி, நடைபெறும் விழாவில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோருக்கு "சக்தி கிருஷ்ணசாமி விருது' அளித்து வருகிறேன்.
இந்த விழாக்களில் சாண்டில்யன், அகிலன், ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், பெ.சு.மணி, அசோகமித்ரன், திருப்பூர் கிருஷ்ணன், பட்டுக்கோட்டைபிரபாகர், சுபா, தேவிபாலா, என்.சி.மோகன்தாஸ், படுதலம் சுகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நூல் நிலையத்தின் சேவையைப் பாராட்டி, எஸ்.ஆர். ரங்கநாதன் விருது, பாபாசி விருது, பாரதி இலக்கிய விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
""தொடக்கக் காலத்தில் நூல் நிலையத்தில் உறுப்பினர்களுக்கு மாதச் சந்தா காலணா. தற்போது மாதம் ரூ.70 வசூலிக்கிறோம். கரோனாவுக்கு முன்பு வரை 150 உறுப்பினர்கள் இருந்தனர். இப்போது அது எண்பதாகக் குறைந்துவிட்டது. நூல் நிலையம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. இருந்தாலும், காந்திஜியின் பெயரில் ஒரு கொள்கையோடு தொடங்கப்பட்ட நூல் நிலையத்தை எத்தனை சிரமங்கள் வந்தாலும் தொடர்ந்து நடத்துவோம்'' என்கிறார் நூல் நிலைய நிர்வாகியும், மகாலிங்கத்தின் மகனுமான நித்யானந்தம்.