காலங்களில் அவள் வசந்தம்
புதுமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் எழுதி, இயக்கி வரும் படம் "காலங்களில் அவள் வசந்தம்'. கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹெரோசினி, விக்னேஷ் காந்த், அனிதா சம்பத், ஜெயா சாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
புதுமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் எழுதி, இயக்கி வரும் படம் "காலங்களில் அவள் வசந்தம்'. கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹெரோசினி, விக்னேஷ் காந்த், அனிதா சம்பத், ஜெயா சாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""கடந்து போன காலங்கள்தான் முக்கிய அம்சம் பெறுகிறது. அதிலும் காதல். அதிலும் திருமணத்துக்குப் பிந்தைய காதல் இன்னும் பெரிய அனுபவம். ஆன்மிக அனுபவம் எனக் கூட சொல்லலாம். காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். கடந்த காலத்தில் நம் வாழ்வை அழகாக்கிய உறவை மீட்டெடுப்பது ஒரு வேளை விபரீதத்தில் முடிந்தால், அதன்பின் வரும் இடர்களை எதிர்கொள்வதற்கு என்ன விதமான பக்கபலம் ஒருவருக்குத் தேவைப்படுகிறது என்பதே கதை. சதா இரை தேடி அலையும் மானுடம், காகம் போல் கரையும் மனம். ஜனத்திரட்சி, நெரிசல் காடு, எப்போதும் பரபரப்பு, தாளாது விம்மும் எண்ணங்கள், தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சி விவாதங்கள்... இன்னும் எவ்வளவோ இருக்கிறது இங்கே. இவற்றுக்கு நடுவே ஒரு சாராசரி மனிதன். அவன் மனைவி, குடும்பம்... கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம். இதுதான் இந்தப் படம். நான்கு காலக் கட்டங்களில் நடந்து முடிகிற ஒரு சினிமா இது'' என்றார் இயக்குநர்.