முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

லாபம் நெசவாளர்களுக்கே..!

""விற்பனையின் லாபம் ஏழை நெசவாளர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படும்'' என்கிறார் "தறிஆடையகம்' என்ற துணிக்கடையின் இயக்குநர் சி.சண்முகம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

""விற்பனையின் லாபம் ஏழை நெசவாளர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படும்'' என்கிறார் "தறிஆடையகம்' என்ற துணிக்கடையின் இயக்குநர் சி.சண்முகம்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சி.டி.எச். சாலையில் உள்ள இந்தத் துணிக்கடை கடந்த 4 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. கைத்தறி நெசவாளர்களின் தயாரித்த துணி வகைகள் முழுக்க, முழுக்க விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் கடையை நடத்திவரும் சி.சண்முகம், ""கடையின் லாபம் நெசவாளர்களுக்கு; நஷ்டம் ஏற்பட்டால் எனக்கே?'' என்ற தாரக மந்திரத்தோடு இந்தத் துணிக்கடையைத் தொடங்கினார்.

அவருடன் ஓர் பேட்டி:

தறி ஆடையகத்தைத் தொடங்கியது ஏன்?

கடலூர் மாவட்டத்துக்குள்பட்ட சி.எம்.பாளையத்தில், நெசவாளரான சிங்காரவேலுவுக்கு மகனாய் பிறந்தேன். நெசவுத் தொழிலைப் பற்றி சிறு வயதிலேயே அறிந்தேன். பள்ளி படிப்பை உள்ளூரில் பள்ளிகளிலும், பி.காம். படிப்பைகடலூரில் உள்ள அரசுக் கல்லூரியிலும் படித்தேன். பின்னர், 1978-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் உள்ள மணிநகரில் உள்ள நூற்பாலையில் நெசவாளராகப் பணியில் சேர்ந்தேன். சில ஆண்டுகள் பணிபுரிந்தவுடன் சென்னைக்குவந்தேன். ஆயத்த ஆடை நிறுவனத்தில் நெசவாளராகப் பணியில் சேர்ந்து, பல்வேறு உயர்பதவிகளை அடைந்தேன். இதன்பின்னர், 1985-இல் டிவிஎஸ் நிறுவனத்தின் உப தொழிற்சாலையாக , சிறு நிறுவனத்தைத் தொடங்கினேன். தற்போது அதில் 150 பேர் பணியாற்றிவருகின்றனர்.

நெசவுத் தொழில் நசிவடைந்துவருவதைப் பார்த்து, கண்ணீர் வடித்து, அவர்களின் மேம்பாட்டுக்காகவே தறி ஆடையகத்தை 2018-இல் தொடங்கினேன்.

தறி ஆடையகத்தின் சிறப்பு என்ன?

வறுமையிலேயே நெசவாளர்கள் வாழ்கின்றனர். சத்துக்குறைவால் 50 வயதுக்கு மேல் நெசவு செய்ய இயலாது. இவர்கள் நலனுக்காக, தறி ஆடையகத்தைத் தொடங்கி, நெசவாளர்களின் தயாரிப்புப் பொருள்களை விற்பனை செய்து, அதில் வரும் வருவாயை நெசவாளர்களுக்கும், அவர்களின் பிள்ளைகளின் கல்விக்காகவும் செலவிடுகிறோம். கைத்தறி வளர்ந்தால் விவசாயம் பெருகும். விவசாயம் பெருகினால் வேலைவாய்ப்புப் பிரச்னை தீரும். அரசு நெசவாளர்களைப் பாதுகாக்கும் வரை தறி ஆடையகம் தொடரும்.

என்னதான் ஆடையகத்தில் நீங்கள் செய்கிறீர்கள்?

சேலம், ஈரோடு, சென்னிமலை, கடலூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீமுஷ்ணம், அரியலூர், புதுச்சேரி, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் லுங்கிகள், டவல்கள், போர்வைகள், பெட்ஷீட்டுகள், கைத்தறி ஆடைகள் போன்றவற்றை பெற்று, தறி ஆடையகத்தில் விற்பனை செய்கிறோம். இதுவரை லாபமாகக் கிடைத்த ரூ.12 லட்சத்தை நெசவாளர்களுக்காக, கரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை செய்துள்ளோம். நெசவாளர் குடும்பத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கியுள்ளோம். இதுதவிர, சென்னை மாநகரம், புறநகரில் உள்ள ஏழை,எளிய மாணவர்களுக்கும் கல்வி உதவிகளைச் செய்துவருகிறோம்.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள நெசவாளர்களைத் தேடி சென்று, உதவி வருகிறோம் என்பதைப் பெருமையாகச் சொல்கிறோம்.

எதிர்கால லட்சியம் என்ன?

நெசவுத் தொழிலை அரசு மேம்படுத்த வேண்டும். நெசவாளர்களின் பெருமைகளைப் போற்றும் வகையில், "தறி பேசுகிறது' என்ற புத்தகத்தை எழுதிவருகிறேன்.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்று என்ன?

சிறுமுகையைச் சேர்ந்த காரப்பனார் என்பவர் ஒரு காலில் மட்டுமே இயக்கி, தறி இயந்திரத்தை ஓட வைக்கும் இயந்திரத்தைத் தயார் செய்துள்ளார். ரூ.1 லட்சத்துக்கும் குறைவே இந்த இயந்திரம். இதுபோன்ற நெசவுத் தொழில் ஊக்குநர்களை அரசு கண்டறிந்து, உதவிகளைச் செய்ய வேண்டும். என்னைப் போன்ற, நெசவுத் தொழிலைக் காக்கும் "ஓராயிரம் சண்முகங்கள்' உருவாக வேண்டும்.
-தி.நந்தகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.