முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பத்து நாள்- பத்து திருவிழா...!

பஞ்ச பூத ஸ்தலங்களில் கண்களால் காண முடியாத ஆகாயம்,  வாயுவுக்குக் கீழே நாம் பார்க்கக் கூடியவை நெருப்பு, நீர், நிலம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:


பஞ்ச பூத ஸ்தலங்களில் கண்களால் காண முடியாத ஆகாயம், வாயுவுக்குக் கீழே நாம் பார்க்கக் கூடியவை நெருப்பு, நீர், நிலம். இவற்றில் அக்னிக்குரிய ஸ்தலம் திருவண்ணாமலை.. என்று ஆரம்பித்து, சிவனின் முடி, அடி காணப் புறப்படும் பிரம்மா, விஷ்ணுவின் கதையை விவரித்தனர். அதை முடித்துவிட்டு, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் சந்நிதிக்குப் பின்னால் கொலு வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரரது பெருமைகளையும், கார்த்திகை தீபத் திருவிழாவை நேரில் சென்று காண்பது போல வர்ணித்தனர்.

டாக்டர் சுதா சேஷையனின் சிற்றுரையைக் கேட்டபிறகு, பரதநாட்டியக் கலைஞர் மேதா ஹரி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை பரதநாட்டியமாக வழங்கினர்.

சுதாவினுடையது செவிக்கு உணவு என்றால், மேதா ஹரி வழங்கியது கண்களுக்கும், மனதுக்கும் இதமான விருந்து.

இதுபோன்று மொத்தம் பத்து ஊர்கள். பத்து திருவிழாக்கள்.

முதல் நாள் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழாவில் துவங்கி, திருவாரூர், திருப்பதி, காஞ்சிபுரம் (வரதராஜ சுவாமி கோயில்) பிரம்மோத்ஸவங்கள், ஸ்ரீரங்கம் அரங்கன் திரு உலா, திருவண்ணாமலை கார்த்திகை தீபம், மதுரை சித்திரைத் திருவிழா, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பங்குனி, ஐப்பசி உத்ஸவங்கள், திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா.. என்று தொடர்ந்து இறுதியாக மைசூரு தசரா கொண்டாட்டம் என்று "உத்ஸவ பரதம்' என்ற தலைப்பில் சென்னை நாரதகான சபா சார்பில் நாட்டிய விழா கோலாகலமாக அண்மையில் நடைபெற்றது.

""நாரதகான சபாவின் நாட்டியப் பிரிவுதான் நாட்டிய அரங்கம். ஆண்டுதோறும் நாட்டிய அரங்கம் சார்பில் பரதநாட்டியத் திருவிழா நடத்திவருகிறோம். கரோனா காரணமாக, கடந்த இரு ஆண்டாக நடத்த முடியாமல் போனது. இந்த ஆண்டு நடத்தி இருக்கிறோம். கோயில் திருவிழாக்கள் என்பதன் அடிப்படையில் பத்து நாள் நாட்டிய விழா மிகச்சிறப்பாக நடந்துமுடிந்தது'' என்கிறார் நாரத கான சபாவின் செயலாளர் ஹரிசங்கர்.

இதுகுறித்து நாட்டிய அரங்கத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள சுஜாதா விஜயராகவனிடம் ஓர் சந்திப்பு:

இப்படி ஒரு புதுமையான தலைப்பில் நாட்டியத் திருவிழா நடத்தும் எண்ணம் எப்படி வந்தது?

வழக்கமாக, நாட்டிய அரங்க விழாக்களில் பரதநாட்டியக் கலைஞர்களின் நடனங்கள் நடக்கும். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை குறித்த வரலாற்று வல்லுநரான வி. ஸ்ரீராம் "பொதுவான நாட்டிய நிகழ்ச்சிகளையே தொடர்ந்து நடத்துகிறீர்களே! அப்படி இல்லாமல், ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அதன்அடிப்படையில் அனைத்து நாட்டியக் கலைஞர்களும் நிகழ்ச்சிகளை வழங்கினால் நன்றாக இருக்குமே! ஒரு சில கோயில் திருவிழாக்களைஎடுத்துக்கொண்டு, அவற்றின்அடிப்படையில் நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கலாமே!' என்றார். அதன்பிறகு நானும் ஸ்ரீராமும் நிறைய விவாதித்தோம். அதன்அடிப்படையில் பிறந்ததுதான் இந்த உத்ஸவ பரதம் திருவிழா.

எந்த அடிப்படையில் கோயில் திருவிழாக்களைத் தேர்வு செய்கிறீர்கள்?

திருவிழாக்கள் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. தமிழகத்தில் இருந்து சென்னை, மதுரை, திருவாரூர், திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் உள்ள கோயில்களில் நடக்கும் முக்கியமானதிருவிழாக்களைத் தேர்ந்தெடுத்தோம். கேரளத்தில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடக்கும் பங்குனி, ஐப்பசி மாத உத்ஸவங்கள், ஆந்திரம்- தெலங்கானாவுக்கு திருப்பதி பிரம்மோத்ஸவம். கர்நாடகத்துக்கு மைசூரு தசரா கொண்டாட்டம் என்று தேர்வு செய்தோம்.

திருவிழாக்களின் சிறப்புகள் என்ன?

அந்தத் திருவிழாக்கள் பற்றி ஆழ்ந்த ஞானம் கொண்டவர்களைக் கொண்டு சிற்றுரை ஆற்ற ஏற்பாடு செய்தோம்.

இதைத் தொடர்ந்து, நாட்டியக் கலைஞர்கள் தனியாகவோ அல்லது தங்கள் குழுக்களுடனோ நாட்டிய நிகழ்ச்சி வழங்கினார்கள். இதில் சுதா சேஷையன், இசைக்கலைஞர்ஆர்.கே. ஸ்ரீராம்குமார் ஆகிய இருவரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

மூத்த பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் இந்த நாட்டிய விழாவைத் துவக்கிவைத்தார். தொடக்க நாளன்று வி. ஸ்ரீராம் கபாலீஸ்வரர் கோயிலின் பெருமைகளை எடுத்துச் சொல்லி, நூற்றாண்டு காலமாக இசைக்கும், நாட்டியத்துக்கும் அளிக்கப்படும்முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டார்.

கபாலிஸ்வரர் கோயிலின்அறுபத்து மூவர் திருவிழா எப்படி ஒரு மக்கள் திருவிழாவாக இன்றும் பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்பதை விவரித்தார்.

தொடர்ந்து, ஜயந்தி சுப்ரமணியன் குழுவினர் கபாலீஸ்வரர், அறுபத்து மூவர் தொடர்பான பாடல்களுக்கு நாட்டியமாடி மெருகூட்டினர்.

ஸ்ரீரங்கத்தின் அரங்கன் உலா பற்றி டாக்டர் சித்ரா மாதவனின் அரிய சிற்றுரையத் தொடர்ந்து, மஞ்சரி குழுவினரது நாட்டிய நிகழ்ச்சி. மதுசூதனன் கலைச்செல்வன், திருவாரூர்சிறப்பு, தியாகராஜர் பெருமை, பிரம் மோத்ஸவ மகிமை என விளக்கிக் கூறி, அரங்கத்தினரை திருவாரூருக்கே அழைத்துச் சென்றார். அன்று நாட்டிய நிகழ்ச்சி வழங்கியவர் சங்கீதாஈஸ்வரன்.

திருப்பதியின் பெருமையை எடுத்துக் கூறி, பிரம்மோத்ஸவத்தை நாட்டியமாக வழங்கினார் கே.ஆர். பிரகாஷ் குழுவினர். காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் பற்றியும், பிரம்மோத்ஸவம் பற்றியும் டாக்டர் சித்ரா மாதவன் விளக்க, ஹரிணி ஜீவிதா நாட்டியம் வழங்கினார்.

ரோஜா கண்ணன், ப்ரியா முரளி, ஸ்ரீகாந்த், அஸ்வதி, பிரஷாந்த் அனைவருமாக மதுரை சித்திரைத் திருவிழாவையும், அழகர் சேவையையும் அரங்கத்தினர் கண் முன்னேகொண்டு வந்து நிறுத்தினார்கள்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பங்குனி, ஐப்பசி திருவிழாவை நாட்டியமாக வழங்கியவர்கள் ஷீஜித் கிருஷ்ணா குழுவினர்.

திருச்செந்தூரின் பிரபலமான கந்த சஷ்டி திருவிழாவுக்குத் தங்கள் நாட்டியம் மூலம் புது வடிவம்அளித்தனர் கருணாசாகரி குழுவினர்.

தசரா என்றாலே உடனே நினைவுக்கு வருவது மைசூரும், அங்கே அரண்மனையில் நடக்கும் கோலாகலமான கொண்டாட்டமும்தான்.

மைசூரு தசரா பற்றிய ஓர் ஆவணப் படத்தின் ஒரு பகுதியைத் திரையிட்டு, மகிஷாசுரமர்த்தினி கதை சொல்லி, மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சி செய்தபோதும், அதன்பின்னரும் நடக்கும் தசரா கொண்டாட்டம் குறித்த சுவையான வரலாற்று செய்திகளை விரிவாகப் பகிர்ந்து கொண்டார் விக்ரம் சம்பத்.

அதனைத் தொடர்ந்து,பெங்களூரைச் சேர்ந்த பர்ஷ்வனத் உபாத்யே மைசூரு அரண்மனையில் விநாயகர் பூஜையில் தொடங்கி, நடைபெறும் நவராத்திரி பூஜை, (வாள்) ஆயுத பூஜை, நவராத்திரி கலைநிகழ்ச்சிகள், ராஜ ஊர்வலம், மகிஷாசுரமர்த்தினி கதை எனஅனைத்தையும் ஒற்றை மனிதராக நாட்டியத்தில் கொண்டுவந்து கண்முன்னே நிறுத்தியதை அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டிப் பாராட்டினர்.

இந்த ஆண்டு நாட்டிய அரங்க நடனத் திருவிழாவைப் பார்த்துரசித்தவர்கள், கேட்கும்கேள்வி: அடுத்த ஆண்டு திருவிழாவுக்குஎன்னதலைப்பு? என்பதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.