மலையாள நகைச்சுவைத் திரைப்படங்களின் ருசி என்பது பத்தியச் சாப்பாடு மாதிரி. ஒருவகையான பிரத்யேக சுவையில் இருக்கும். முகத்தில் அடிக்கும் மசாலாவோ, வயிற்றைக் கெடுக்கும் காரமோ அதில் இருக்காது. அமுங்கிய குரலில் மெலிதாக வெளிப்படும் இந்த நகைச்சுவையை நுகர்வதற்குத் தனியான ரசனை வேண்டும். இந்த வகையான நகைச்சுவைப் படங்கள், டப்பிங் வடிவில் அல்லது ரீமேக் வழியில் தமிழிற்கு நிறைய வந்திருக்கின்றன. காமெடியும் சென்டிமென்ட்டும் கச்சிதமான கலவையில் அமைந்திருக்கும் இவ்வகையான திரைப்படங்களை உருவாக்க இப்போது இயக்குநர்களே இல்லை. அந்த குறையை தீர்க்க ஒரு கதை எழுதினேன். அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொடுப்பதில் நிறைய சவால். அதுதான் இந்த படம்.'' இதுவரை பாடலாசிரியராக அறியப்பட்ட பிரியன். இப்போது இயக்குநர் ப்ளஸ் ஹீரோ. படத்தின் பெயர் "அரணம்'.
என்ன, திடீரென்று இயக்குநர், நடிகர் என வந்து விட்டீர்கள்....
சினிமாக்காரனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறுமென நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்ததா... நான் தேடிப் போகவில்லையா... என்பதை இப்போது கணக்குப் போட்டு பார்க்க முடியாது. பெரும் கனவு, லட்சியம் என கோடம்பாக்கத்துக்கு ஓடோடி வந்த நாள்கள் நினைவில் நிழலாடுகின்றன. கனவு தேடி அலைந்த எல்லா இடங்களிலும் சின்ன சின்ன தோல்விகள். குறைவான பாடல்கள் என்றாலும் குறிப்பிடத்தகுந்த பாடல்களை எழுதியிருக்கிறேன். பாடல் வரிகளில் எனக்கென தனி இடம் இருக்கிறது. இருந்தாலும் எனக்குள்ளும் ஒரு கதை சொல்லி தென்பட்டான். அதனால்தான் இந்த முயற்சி. சினிமா தவிர தேடிப் பிடிக்க மனசு இல்லை. குடும்பம், மனைவி, மக்கள் என சமூகச் சூழல்களின் துரத்தல் ஒரு புறம். சிதைந்து விடாத சினிமா கனவு ஒரு புறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அதை வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியும். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பின் இப்போது இன்னொரு இருக்கை கொடுத்திருக்கிறது காலம். பார்க்கலாம்....
என்ன கதை....
வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர் கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது. ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட இன்னொரு மகன் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை ஹாரர், க்ரைம், த்ரில்லர் வடிவில் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறேன்.
பேய் படங்களின் சீசன் முடிந்த மாதிரி இருந்தது...
பொதுவாக அனைத்துப் பேய்க்கதைகளிலும் தொன்மத்தின் சாயல் படிந்திருக்கும். நாட்டுப்புறக் கதைகளின் சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். இவற்றைத் தர்க்க ஒழுங்கில் அணுகக்கூடாது. லாஜிக் பார்க்கக்கூடாது. அவை தரும் திகில் உணர்ச்சிதான் நமக்கு முக்கியம். இந்தத் திகில் உணர்ச்சியே ஒரு கட்டத்தில் காமெடியாகி விடும். "இதற்கா இத்தனை பயந்தோம்?' என்று விடிந்த பிறகும் சிரித்துக் கொண்டேயிருப்போம். லாஜிக்கை சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இதிலுள்ள அபாரமான நகைச்சுவையை ரசிக்க முடியும். "பேய்ப்பட காமெடி' என்றொரு சுனாமி தமிழ் சினிமாவில் வீச ஆரம்பித்தது. "முனி'யில் ஆரம்பித்தது இந்த சனி. இடைவிடாமல் பத்து வருடங்களுக்கும் மேலாக நம்மை அடித்துத் துவைத்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது.
நீங்கள் பேசுகிற விதம் சரி.... இப்போதுள்ள ட்ரெண்ட் பிடித்து கதை சொல்லுவதுதான் இங்கே முக்கியம்...
ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும்.
ஹீரோயின் புதுசா தெரியுறாங்க...
ஆமாம். கேரள வரவு பட்டியல். பெயர் வர்ஷா. ஆனால், நன்றாகவே தமிழ் பேசுவார். முதல் படம் மாதிரியே இருக்காது. உறுத்தாத நடிப்பைத் தந்திருக்கிறார். அழகு தமிழ் முகம். ஏற்கெனவே மாடலிங், விளம்பரம் என வேலை தெரிந்த பொண்ணு. பாட்டு, கிளாமர்னு சும்மா வந்துட்டுப் போகாமல், அவ்வளவு தூரம் நடிக்க ஸ்கோப் இருக்கிறது அந்த பொண்ணுக்கு. இதில் சில காதல் இடங்கள் இருக்கிறது. இருவருக்கும் காதல் உணர்வுகள் அரும்புவது சகஜமே. காதல் மாதிரி மனசை சுத்தப்படுத்துவதும் கிடையாது. "ராட்டினம்', "எட்டுத்திக்கும் மதயானை', "சத்ரு' போன்ற படங்களில் கதைநாயகன் லகுபரன் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னொரு புதுமுகம் கீர்த்தனாவுக்கு இன்னொரு முக்கிய இடம். ஆகியோரும் நடித்துள்ளனர். சரியான திட்டமிடலுடன் 23 நாள்களில் படமாக்கி முடித்துவிட்டேன். சாஜன் மாதவ்வின் இசையில் பாடல்களும் ஹிட். பின்னணி இசை இன்னும் பெரும் பலமாக கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
அம்ரிஷின் இசையில் நான்கு பாடல்களும் ஹிட். பின்னணி இசை இன்னும் பெரும் பலமாக கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.