ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், அது எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதை பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. ஒரு நல்ல திரைக்கதைதான் சினிமாவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. அழுத்தமாக பேசத் தொடங்குகிறார் இயக்குநர் செல்வகுமார். இயக்குநர்கள் மீரா கதிரவன், முத்தையா ஆகியோரிடம் சினிமா கற்றவர். இப்போது "பம்பர்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
பம்பர்.... தலைப்பு தருகிற பொருள் எப்படி....
கதைதான் இங்கே அதிமுக்கியம். தலைப்பு என்பது கவர்ந்திழுக்கும் மையம்தான். பம்பர் என்பது என்பது லாட்டரி சீட்டு வட்டத்தில் உச்சரிக்கப்படும் சொல். கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஓணம் பண்டிகை, மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை, கிறிஸ்துமஸ் போன்ற விழா காலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை மூலம் அதிஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் கதை நடக்கிற களம் என்பதால், பம்பர் என்ற தலைப்பு பொருந்தி வந்திருக்கிறது. மற்றபடி இது முழுக்க முழுக்க மனிதம் பேசுகிற கதை. தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம். நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி இருவரை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனை, அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் படித்த பத்திரிகை செய்தி, அதன் பின் தொடர்ந்து சென்று பார்த்தல் இப்படித்தான் கதை. தமிழக - கேரள எல்லையில் லாட்டரி சீட்டு பின்பு புலத்தில் நடக்கிற கதை. அதன் பின்னால் போய் பார்த்தால் அதனுள் அவ்வளவு அரசியல். அதையெல்லாம் சினிமாவுக்கான சமரசங்களுடன் புனைந்து வந்திருக்கிறேன். வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக் கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை.
ஆய்வு அனுபவம், படமாக்கிய பக்குவம்....
இப்போது கூட பார்க்கலாம், கேரளத்தில் லாட்டரி சீட்டு விற்பவர்களில் கணிசமாக தமிழர்களே இருக்கிறார்கள். அதன் பின்புலத்தை சரியாக ஆராய்ந்து கதையின் களமாக பயன்படுத்திக் கொண்டேன். கேரள மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பரிசுத்தொகை பெறுவதற்கு இதே நடைமுறையுடன் நோட்டரி முத்திரை, கையொப்பம் ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும். கேரளா அரசு கொடுத்த அடையாள அட்டையோ, அல்லது கேரளத்துக்கு நாம் வந்துசென்ற காரணம் குறித்த கடிதமோ சமர்ப்பிக்க வேண்டும். இங்கு குறிப்பிட்டுள்ள நடைமுறைகள் மேலோட்டமானவைதான். முழுமையான நடைமுறைகள் கேரளா லாட்டரி துறையின் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது குலுக்கலில் விழுந்துள்ள பரிசுத்தொகையை யாராவது வாங்க வருவார்களா, அல்லது அரசு கஜானாவுக்கு செல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். இப்படி பல சூழல்கள் கதையில் இருக்கும். அப்படி ஒரு கட்டம் இந்தக் கதையில் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனிதத்தின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. இதுதான் இதன் சிறப்பு.
படத்தின் பேசு பொருள் என்ன...
உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. பொருளையும், பணத்தையும் முதன்மைப்படுத்தாமல் வாழ்க்கைக்கு அன்புதான் முக்கியம் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்தாலே போதும், ஆரோக்கியமான தலைமுறை உருவாகி விடும். இதற்கு தேவையில்லாத தியாகங்கள் அவசியமில்லை. ஒருவன் பணத்துக்காக எதையும் செய்வான். அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் வெற்றி. ஒருவன் வாழ்வை அறத்தோடு வாழ்ந்து வருகிறான். அந்த இடத்தில் நடிகர் ஹரிஸ் பேராடி. இருவரும் சந்திக்கும் புள்ளியில் மனிதம் என்ன ஆனது என்பதே திரைக்கதை. இந்தக் கதையின் அடிநாதமாக அதன் கதாபாத்திரங்களுக்கு மனமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மனதில், புத்தியில் ஏற்படுகிற அதிர்வின் காரணமாக மனமாற்றம் நிகழ்ந்து ஒரு புது வாழ்வு பரிசாகக் கிடைத்து விடும். கர்ப்பகரகத்தில் ஏற்றப்படும் தீபம் போல் அது மகத்தனாது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அந்த போன்ற நம்பிக்கைகள்தான் இந்தப் படம். நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனும், அவன் உலகத்தில் ஹீரோதான்.
அப்படி நான் சந்தித்த பல சுவாரஸ்யமான ஹீரோக்கள்தான் இந்தப் படத்தின் நாயகர்கள். கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்த பம்பர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.