காவலராக வேண்டும் என்பதுதான்சதீஷின் சிறுவயது கனவு. எதிர்பார்த்தது போன்று, சொந்த ஊரான தஞ்சாவூரிலேயே பணியும் கிடைத்தது. ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், ஊதியம் போதாதால் பணியை ராஜிநாமா செய்துவிட்டு நவீன உடற்பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார். பின்னர், தஞ்சாவூரிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் இருக்கும் குருவாடிப்பட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு இயற்கை விவசாயத்தையும் தொடங்கினார். கோழிகள், ஆடுகள், மாடுகள், நாய்களை வளர்க்கத் தொடங்கினார். கணிசமாக வருமானம் பெருகத் தொடங்கியது.
தனது வெற்றி குறித்து அவர் கூறியதாவது:
"காவலர் பணியைவிட தீர்மானித்தபோது பலரும், ""அரசு வேலை கிடைப்பது எவ்வளவு சிரமம், காக்கி உடை அணிந்தாலே தனி மரியாதை கிடைக்கும். கெளரவமான வேலையை ராஜிநாமா செய்கிறேன் என்கிறாயே? ஒரு முறைக்குப் பலமுறை யோசி'' என்றெல்லாம்
சொன்னார்கள்.
எனது கனவை நனவாக்க மாத ஊதியம் போதாது என்று தோன்றியது. மனைவி ரயில்வேயில் காவலராகச் செல்ல வேண்டிய பணியை செய்து வருகிறார். அவள் காவலராகத் தொடரட்டும் என்று
நான் பணியைத் துறந்தேன்.
எனக்கு மகள், என்னுடைய பெற்றோருடன் கிராமத்தில் தங்கிப் படிக்கிறாள். மகன் என்னுடன் தஞ்சாவூரில் வசிக்கிறான்.
உடற்பயிற்சி டிரைனர் தேர்வில் தேறியிருந்ததால், உடனடியாக நவீன உடற்பயிற்சி, ஃபிட்னஸ் சென்டரைத் தொடங்கினேன். உடல் எடை குறைக்க, அதிகரிக்க விரும்புவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, பயிற்சி, உணவு முறைகளையும் சொல்லிக் கொடுத்து வருகிறேன். வாடிக்கையாளர்கள் பெருகினர்.
தஞ்சாவூரில் ஷூட்டிங் நடந்தால் நடிகர்கள் சமுத்திரக்கனி, சூரி போன்றவர்கள் எனது பயிற்சி மையத்துக்கு வந்து செல்வார்கள். எனது தந்தைக்குச் சொந்தமான நிலத்தில் நெல் விவசாயம் செய்கிறேன்.
மறுபுறம் வாழைத் தோப்பு. முதலில் நாட்டுக் கோழிகளை வளர்க்க ஆரம்பித்தேன். ஆனால் நாட்டுக் கோழிகள், வாழை மரங்களின் வேர்களைக் கொத்திக் கொத்தி சாய்த்துவிட்டன.
வாழை மரங்கள் சாய்ந்ததனால் பச்சை போர்வை அணிந்திருந்த நிலத்தின் ஒரு பகுதி பொட்டல்காடாக மாறியது. அத்துடன் நாட்டுக் கோழி வளர்ப்பதை நிறுத்தினேன். வெள்ளாடுகளை வளர்த்து விற்க ஆரம்பித்தேன். லாபம் கிடைக்க ஆரம்பித்தது. ஜல்லிக்கட்டு காளைகள் இரண்டினை வளர்த்து வருகிறேன்.
தினமும் அதிகாலை ஐந்து மணியிலிருந்து பதினோரு மணி வரை உடற்பயிற்சி மையத்திலும், நிலத்திலும் மாறி மாறி இருப்பேன். தினமும் சுமார் 16 மணி நேரம் பணிபுரிகிறேன்.
காவலராக இருந்தபோது, அதிகாலை எழ வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். எப்போது வேண்டுமானாலும் மேலதிகாரிகளிடமிருந்து ஆணைகள் வரும். அதற்கு ஏற்ற மாதிரி பணியிடங்களுக்குப் போக வேண்டும். எப்போதும் ஆயத்தமாக தயார் நிலையில் இருக்கவேண்டும். இந்தப் பயிற்சிதான் சளைக்காமல் பணிபுரிய உதவுகிறது.
இப்போது பல மடங்கு சம்பாதிக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், காவலராக இருந்தபோது பைக் ஓட்டிக் கொண்டிருந்தேன். இப்போது காரில் பயணிக்
கிறேன்'' என்றார் சதீஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.