ஞாயிறு கொண்டாட்டம்

வனநாயகன்..!

அனுபவித்து உணர்ந்து ரசிப்பது வேறு. இதை வனப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் தெரிந்து கொண்டால்தான் இயற்கையை நம்மால் பாதுகாக்க முடியும்.

ஏ. பேட்ரிக்

""இயற்கையை ரசிப்பது வேறு; அனுபவித்து உணர்ந்து ரசிப்பது வேறு. இதை வனப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் தெரிந்து கொண்டால்தான் இயற்கையை நம்மால் பாதுகாக்க முடியும்'' என்கிறார், வால்பாறை வனச் சரகர் ஜி.வெங்கடேஷ்.

பணி நேரத்தில் வேட்டைத் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதோடு, வனத் தீயைத் தடுப்பதையும், கட்டுப்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டியது இவரது பணி. ஆனால், பணி நேரம் முடிந்தும் வனப் பகுதியிலேயே அமர்ந்து தனது காமிரா லென்ஸ்களின் மூலம் வன உயிர்களைப் புகைப்படங்களாக எடுத்து ஆவணப்படுத்தி வருகிறார் வெங்கடேஷ்.

இவரின் முகநூல் பதிவுகளில் பேபி பானெட் மக்காக், உயரமான மரத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ கருப்புக் கழுகு, நீலகிரி வரையாடு, ஆக்ரோஷமான யானைகள், மலபார் ராட்சத அணில் போன்ற உயிரினங்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்திய கானுயிர் பாதுகாப்பு சங்கம் 2023- ஆம் ஆண்டில் நடத்திய வனவிலங்கு புகைப்படம் எடுத்தல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற இவர், 2022- ஆம் ஆண்டில் வால்பாறையில் உள்ள புதுத்தோட்டத்தில் எடுத்த பழுப்புநிற கோடு கழுத்து கொண்ட கீரியின் புகைப்படத்துக்கு சிறப்புப் பரிசையும் வென்றார். இதோடு, ராமேசுவரத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் எடுக்கப்பட்ட பெரிய ஃபிளெமிங்கோக்களின் "கிளிக்'குகள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து வெங்கடேஷ் கூறியதாவது:

"கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியே எனது சொந்த ஊர். சுற்றுச்சூழல் மீதான காதல் எனது குழந்தைப் பருவத்திலேயே விதைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பயின்ற போதும், தெலங்கானாவில் நடைபெற்ற பயிற்சிக் காலத்திலும் அது மரமானது.

2016-ஆம் ஆண்டு ராமேசுவரத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவில் பணியில் சேர்ந்ததில் இருந்து வனப் பகுதிக்குள் இருக்கும் பறவைகள், விலங்குகள், மர இனங்களை புகைப்படம் எடுத்து பல்லுயிர் தன்மையை மதிப்பீடு செய்து வருகிறேன்.

இந்தப் பணி அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், எந்தெந்த புலம்பெயர் பறவைகள் வனப் பகுதிக்கு வந்து செல்கின்றன. எந்த இனங்கள் பாதிக்கப்படக் கூடியவை என்பதை நான் எடுத்து சேகரித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் மூலமாக நமக்குத் தெரியப்படுத்த உதவும்.

உதாரணமாக, இமயமலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வால்பாறைக்கு "கிரே வாக்டெயில்' என்ற பறவை வலசை வந்து செல்கிறது. இந்தப் பறவையைக் கண்டதால், மாணவர்களும் பறவை ஆர்வலர்களும் வேட்டையாடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கின்றனர். இது ஒரு விழிப்புணர்வாகவும் மாறியுள்ளது.

வனவிலங்குகளைப் பதிவு செய்வதோடு, பறவைகளின் நடத்தையையும் பதிவு செய்கிறேன்.

"பறவைகள் ஏன் வந்து ஜன்னல் கண்ணாடிகளின் மீது கொத்துகின்றன?' என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒன்று அவை கண்ணாடி பிரதிபலிப்புகளை தாவரமாக உணர்கின்றன. இரண்டாவதாக அவை கண்ணாடி மேற்பரப்புகள் வழியாக திறந்தவெளி வாழ்விடத்தை அடைய முயற்சிக்கின்றன. காமிராவுக்குப் பின்னால் உள்ள ஆர்வத்தின் காரணமாக, எனது அதிகாரப்பூர்வப் பணி எந்த வகையிலும் பாதிக்கப்படாமலும் இருக்கிறேன்.

பறவைகள் தங்கள் இரைக்காக வேட்டையாடுவதையும், அவை உணவளிப்பதையும் காட்டும் புகைப்படங்களையே எடுக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் அனைத்து உயிரினங்களையும் பதிவு செய்து புத்தகமாக வெளியிடுவதே தனது நோக்கம்'' என்கிறார் வெங்கடேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்

மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு

SCROLL FOR NEXT