சாக்ஷி அகர்வால்.... பெயர்தான் வட இந்திய சாயல். ஆனால் பக்கா சென்னை பொண்ணு. கெஸ்ட் 2, ரிங் ரிங் என இரு படங்கள், மூன்று வெப் சீரிஸ் என வரிசைக் கட்டி ஹீரோயின், கேரக்டர் ரோல் என கலந்து கட்டி நடிக்கிறார். எதார்த்தம், மார்டன் என பிரதிபலித்துக்கொண்டிருப்பவர்.
தமிழ் பெண்களுக்கு நம் சினிமாவில் அதிகம் வாய்ப்பில்லை என்பதால்தான், சாக்ஷி அகர்வால் என வைத்துக் கொண்டீர்களா....
இல்லை. என இயல்பாகவே வைக்கப்பட்ட பெயர்தான் சாக்ஷி அகர்வால். நான் பக்கா சென்னை பொண்ணு. குட் ஷெப்பர்டு, அண்ணா பல்கலைகழகம் இதில்தான் படித்தேன். அதன் பின்னர் மாடலிங், சினிமா இதுதான் என் வரலாறு. மறைப்பதற்கு இங்கே எதுவும் இல்லை. மற்ற மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஹிந்தியில் ஹிந்திப் பொண்ணுங்க நடிக்கிறார்கள், மலையாளத்துல கேரளப் பொண்ணுங்க நடிக்கிறார்கள், ஆனால், தமிழில் மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை. ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நன்றாக தமிழ் பேசுவார்கள. ஆனால், ஆரம்பத்தில் அவர்களுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் மாஸ் ஹீரோயினாக ஆனதற்கு பின்புதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரித்து அவர்களை வரவேற்றது. தன்ஷிகாவும் அது மாதிரிதான். ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் இவர்கள் எல்லாரும் தமிழ் பேசுறவங்களா இருந்தும் பெரிய படங்களில் நடிக்கவில்லை. இதுமாதிரி நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறோம். வடநாட்டுப் பொண்ணுங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிற சினிமா துறையினருக்கு, ஏன் நம்ம ஊர் பொண்ணுங்களை சரியாப் பார்த்துக்கத் தெரியலை என்கிற வருத்தம் எனக்குள் நிறையவே இருக்கிறது. தமிழ் நடிகைகள் எல்லாருக்குமே இதே நிலைமைதான். கதை சார்ந்த படங்களுக்கு நாம் எதார்த்தமா இருந்தால் போதும். அழகு முக்கியமில்லை. அதுவே கமர்ஷியல் படங்களுக்கு அழகாக இருக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோயின்கள் உங்கள் படத்தில் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது இல்லை. ஏன்... அந்த மாதிரியான ரோல் மட்டும்தான் உங்களுக்கு வருகிறதா...?"
அச்சோ... நாம் சின்ன ரோலில் நடிக்கிறோமே' என்கிற மனப்போக்கு இருக்கக் கூடாது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் திறம்பட நடித்துக் காட்ட வேண்டும். இதை நாம் புரிந்துக் கொண்டால் எத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும் சமாளித்து விடலாம். தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. முன்னணி கதாபாத்திரங்களில் நாம சரியாக நடிக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதில் நம் முகம் பதியாது. அதுவே சின்ன ரோலில் திறம்பட நடித்தோம் என்றார் நல்ல பெயர் கிடைக்கும். அவ்வளவுதான்.
மற்ற மொழிப் படங்களில் நடித்த அனுபவம்...
சினிமாவில் எனக்குத் தைரியத்தைக் கொடுத்ததே மற்ற மொழிப்படங்கள்தாம். இதுவரை ஒரு கன்னட படம். ஒரு மலையாளப் படம். இரண்டு படங்கள்தான். எனக்கு மொழி ஒரு பெரிய பிரச்னை இல்லை. டயலாக் மனப்பாடம் செய்வதில் இருந்து, டப்பிங் வரை எல்லாமே பிரச்னை. நல்ல அனுபவத்தையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனால், மலையாளப் படங்களும் கிட்டத்தட்ட தமிழ்ப் படங்கள் மாதிரிதான். என்னால் மலையாளம் புரிந்துக் கொள்ள முடியும். எனக்கு நிறைய மலையாளப் பட வாய்ப்புகள் வந்தது. பிற மொழிப் படங்களில் நடிக்க முடியும் எனற நம்பிக்கை கொடுத்ததே இந்தப் படங்கள்தாம்.
பிக்பாஸ் கமல், காலா ரஜினி.... என பெரிய கேன்வாஸ் இருந்து சரியான வெளிச்சம் இல்லையே...
காலா படத்தில் சில காட்சிகள் வந்து விட்டுப் போகிற பெண் கதாபாத்திரங்களுக்குக்கூட அதிக முக்கியத்துவம் இருக்கும். அதனால் நானும் வெளியே தெரிந்தேன். ரஜினி சாருடன் நடித்தது பெரும் அனுபவம். சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத வாய்ப்பு. ரஞ்சித் சாருக்கு நன்றி. எதுவுமே பெரிதாக சொல்லிக் கொடுக்கவில்லை. என் ஸ்டைலில்தான் நான் நடித்தேன். பிக் பாஸ் கமல் மறகக முடியாதவர். என்னால் தனியாக வாழ முடியும். மற்றவரை சார்ந்தும் வாழ முடியும். ஆனால், பிக் பாஸ் வாழ்க்கை தனி. எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். எனென்றால் அந்த வீட்டில் இவ்வளவு நாள்கள் தாக்கு பிடிக்க முடிந்ததே பெரும் சவால். அது எனக்கு புதிது. நான் எந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
யார் இயக்கத்தில் நடிக்க ஆசை....
எல்லோரும்தான். கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் என நிறைய பேரை பிடிக்கும். சிக்கலான கதைகளில் தனித்துவத்தை பலர் காட்டி வருகின்றனர். அதாவது, ஒரு ஹீரோயினை நல்ல பெர்ஃபாமராக பார்க்கிற இயக்குநர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுப்பார்கள். சில இயக்குநர்கள் ஒரு கிராமத்துக் கதாபாத்திரத்துக்குச் சிவப்பாக இருக்கிற ஹீரோயினைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். அது அவர்களுக்கு செட்டாகவே ஆகாது. சில சமயங்களில் வெளிநாட்டு ஹீரோயின்களைக்கூட தேர்ந்தெடுப்பார்கள். காரணம், நம் மனசுல வெள்ளை நிறம்தான் அழகு என்று பதிவாகியிருக்கிறது. ஒரு கதாபாத்திரத்தின் சாயலை புரிந்துக் கொண்டு என்னை அணுகினால், உழைக்கத் தயார்.
தொடர்ச்சியாக பெண்கள் சார்ந்த படங்கள் தமிழில் இல்லையே என்கிற வருத்தம் பரவலாக இருக்கிறது....
ஆமாம்... ஏனென்றால் தமிழ் சினிமாவில் பெண்களுக்குக் கொடுக்கப்படுற இடம் மிகக் குறைவு. 10 வருஷத்துக்கு ஒருதடவைதான் "அருவி', "அறம்', "காக்கா முட்டை' மாதிரியான படங்கள் வருகின்றன. நயன்தாரா நடித்ததால் "அறம்' படம் மக்கள் மத்தியிலயும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நயன்தாரா அப்படியான கதாபாத்திரங்களில் நடித்தால் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் பத்து வருடங்களால் அவர் மக்கள் பார்வையில் இருக்கிறார். மக்கள் பார்வையில் இருக்கிற நடிகை நடித்தால்தான் அது பெண் சார்ந்த படமாக இருக்கும். அப்போதுதான் பெரிய ஒப்பனிங் கிடைக்கும். நயன்தாராவுக்கு கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அடுத்து நான் நடிக்கிற "கெஸ்ட் 2' அப்படியான படம்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.