'ஆடுவோமே.. பள்ளுப் பாடுவோமே.. ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே' என மகாகவி பாரதியாரின் பாடலை நாடே பாடியபோது, தங்களது நிலை என்ன? என திகைப்புடன் இருந்தவர்கள் புதுவை பகுதிவாழ் மக்கள்.
ஆங்கிலேயரிடமிருந்து இந்திய தேசத்துக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், புதுவையோ பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது.
ஸ்ரீஅரவிந்தர் உள்பட நாட்டில் நூற்றுக்கணக்கான தியாகிகளை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து காத்ததன் மூலம் சுதந்திரக் கனலை அணையாமல் பாதுகாத்த பெருமை புதுவை மண்ணுக்கே உண்டு. ஆனால், புதுவை மக்களோ 7 ஆண்டுகளுக்குப் பிறகே சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
புதுவை மண்ணுக்கு விடியல் தந்தது எப்படி தெரியுமா? கீழூர் வாக்கெடுப்புதான்.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் பங்கூர் அரியூரிலிருந்து இடதுபுறம் திரும்பினால் சில கிலோ மீட்டர்களில் செம்பிபாளையம் இருக்கிறது. அதிலிருந்து வலதுபுறம் திரும்பினால் சிவராந்தகம் ஆலமரத்தைத் தாண்டியுள்ளது கீழூர். வில்லியனூர் கொம்யூன் நிர்வாகத்துக்கு உள்பட்டது. மங்களம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைந்துள்ளது.கீழூரின் ஒரு பக்கம் பிரெஞ்சு போலீஸாரும், மறுபுறம் தமிழக பகுதியில் ஆங்கில போலீஸராரும் நேருக்கு நேர் நின்று எல்லையைக் காத்துள்ளனர். அப்பகுதியில் தங்கம் கடத்தல் நடந்ததை தடுக்கவே கீழூரில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டதாகவே சொல்லப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்றதும் புதுவையில் காங்கிரஸாரும், இடதுசாரிகளும் ஆங்காங்கே பிரெஞ்சு கொடியை இறக்கிவிட்டு தேசியக் கொடியை ஏற்றினர். அப்படி தேசியக் கொடியை ஏற்றியவர்களை பிரெஞ்சு ராணுவத்தினர் அடக்க முற்பட்டபோது, பிரெஞ்சுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. காரைக்கால், மாஹே, ஏனத்திலும் 1951 ஆம் ஆண்டில் போராட்டங்கள் நடந்துள்ளன.
காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பிரெஞ்சு போலீஸார் தாக்குதல் நடத்தினர். அதைக் கண்டித்து புதுச்சேரியில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு போராட்டம் நடந்துள்ளது.
திருபுவனை, நெட்டப்பாக்கம் ஆகிய பகுதிகள் தனியாக இயங்கப் போவதாக அறிவிக்கப்பட்டதால், திகைத்துப் போன பிரெஞ்சு அரசு புதுவை மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரானது.
பேச்சுவார்த்தை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடத்தப்பட்டால் பிரெஞ்சுக்கு பாதகமான முடிவெடுக்கும்போது, மக்கள் பிரதிநிதிகள் கைது செய்யப்படலாம் என அச்சம் ஏற்பட்டது. ஆனால், கீழூரில் ஓரிரு அடிகளில் இந்திய ராணுவமும், தமிழக போலீஸாரும் நின்றிருந்ததால் பாதுகாப்புக் கருதியே கீழூர் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
அப்போது மெனார் என்பவரே பிரெஞ்சு ஆளுநராக இருந்துள்ளார். அப்படி தேர்வான கீழூரில் 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி கொம்யூன் பஞ்சாயத்து சபை உறுப்பினர்கள் 178 பேர் கூடியுள்ளனர். பிரதிநிதித்துவ சபையின் தலைவர் வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 170 பேர் இந்தியாவுடன் இணைய ஆதரவளித்தனர். அதையடுத்தே இந்திய பிரதிநிதி கேவல்சிங்,, பிரெஞ்சு பிரதிநிதி பியேர்லேந்தி ஆகியோர் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர், புதுதில்லியில் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, பிரெஞ்சு தூதர் தனிஸ்லாஸ் ஆஸ்ட்ரரோக் ஆகியோர் கையெழுத்திட்டனர். 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1ல் புதுவை இணைப்பு செயல்பாட்டுக்கு வந்தது.
புதுவையின் சுதந்திரப் புரட்சி முகமாகவே கீழூர் இளம்தலைமுறையால் பார்க்கப்பட்டுவருகிறது. பிரெஞ்சு குடியுரிமை விரும்புவோருக்கான அனுமதியும் கீழூரில்தான் வழங்கப்பட்டது.இங்கு நிறுவப்பட்டுள்ள வாக்கெடுப்பு நினைவுத் தூண்களில் இந்தியாவுடன் இணைப்புக்கு ஆதரவளித்தோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.