25 ஆயிரம் கி.மீ. 28 மாநிலங்கள்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா மால்வியா என்ற பெண், 28 மாநிலங்கள் வழியாக 25 ஆயிரம் கி.மீ. தொலைவு சைக்கிளில் நெடும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா மால்வியா என்ற பெண், 28 மாநிலங்கள் வழியாக 25 ஆயிரம் கி.மீ. தொலைவு சைக்கிளில் நெடும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். "பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நாடு தழுவிய பயணம்' என்கிறார் அவர். தனது பயணத்தின் அங்கமாக தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு, ஆந்திரத்துக்கு அண்மையில் புறப்பட்டுச் சென்றார்.
அவருடனான சந்திப்பு:
உங்களைப் பற்றி...?
மத்தியப் பிரதேசத்த்தில் உள்ள ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள நட்டார் என்ற கிராமத்தில் பிறந்தேன். சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். ஒரு அக்கா. அவருக்குத் திருமணமாகிவிட்டது. நான் என் தாயுடன் வசித்து வருகிறேன். போபாலில் உள்ள ஜவஹர்லால் நேரு பட்ட மேற்படிப்புக் கல்லூரியில் உடற்கல்விப் பிரிவில் பட்ட மேற்படிப்பை படித்தேன்.
தனியார் நிறுவனப் பணியைவிட்டு, சைக்கிள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். என் அம்மாவை அக்காவின் பொறுப்பில் விட்டுவிட்டு பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.
சைக்கிள் பயணம் மேற்கொள்ள உங்களைத் தூண்டியது எது?
மலையேற்றம், நீண்ட தொலைவு சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஓட்டம், குதிரையேற்றம், ஹாக்கி ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உண்டு.
நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறுவது தவறான எண்ணம் என்று எனக்குத் தோன்றியது. எனவே, ஒரு பெண்ணாகத் தனியாக நாடு முழுவதும் சைக்கிள் பயணம் செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்தவே பயணம் மேற்கொண்டுள்ளேன்.
25 ஆயிரம் கி. மீ. சைக்கிள் பயணத் திட்டம் பற்றி எடுத்துக் கூறியபோது, மத்தியப் பிரதேச அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை என்னை ஊக்குவித்து, பயண ஏற்பாடுகளையும் செய்துதந்தது.
உங்கள் பயணத் திட்டம் என்ன?
கடந்த ஆண்டு நவம்பர் 1-இல் போபாலில் இருந்து புறப்பட்டேன். குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் வழியாகப் பயணித்து தமிழ்நாட்டுக்கு வந்தேன். மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளம், கோவா ஆகிய மாநில ஆளுநர்கள், முதல்வர்களைச் சந்தித்துப் பேசினேன்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்னை மிகவும் கவர்ந்தது. அங்கிருந்து தென்காசி, விருதுநகர், மதுரை, சேலம் வழியாக சென்னை வந்தேன்.
தமிழக ஆளுநர், காவல் துறைத் தலைவரைச் சந்தித்தேன். அடுத்து ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸ்ஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்லவிருக்கிறேன். அதன்பிறகு வட கிழக்கு இந்திய மாநிலங்களில் சுமார் ஒரு மாதம் பயணம் செய்வேன். பின்னர், பிகார், உத்தரப் பிரதேசம் வழியாக காஷ்மீர் வரை செல்லவிருக்கிறேன். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஜூலைமாதத்தில் நான் மீண்டும் போபால் செல்வேன்.
தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவது கடினமாக இல்லையா?
ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 150 கி.மீ. தூரம் பயணம் செய்கிறேன். அதிகபட்சமாகப் பயணித்தது 250 கி.மீ. ஆகும். பொதுவாக, ஒவ்வொரு 25 கி.மீ.-கும் 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். மத்தியப் பிரதேசத்தில் பயணித்துள்ளேன். நெடும் பயணத்துக்காக, மூன்று மாதம் பயிற்சியும் செய்தேன்.
வரவேற்பு எப்படி உள்ளது?
எனது வருகை குறித்து முன்னதாகவே ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்குத் தகவல் தெரிவித்து விடுவதால், அவர்கள் அரசு பயணியர் விடுதிகளில் தங்கும் வசதிகளைச் செய்து கொடுக்கின்றனர். இதனால் சிரமம் இல்லாமல் பயணம் தொடர்கிறது.
பொதுமக்களின் அன்பும், ஆதரவும் நெகிழ வைக்கிறது. பல இடங்களில் இளைஞர்கள் சிறிது தூரம் என்னுடன் சைக்கிள் ஓட்டி வந்து உற்சாகமூட்டுகிறார்கள்.
ஊடகங்கள் அளிக்கும் ஆதரவும் சோர்வு இல்லாமல் பயணத்தைத் தொடர உதவுகிறது. சமூக ஊடகங்களின் மூலமாகவும் பயண விவரங்களை நான் புகைப்படங்களோடு பதிவு செய்கிறேன்.
உணவு பிரச்னை உள்ளதா?
திரவ உணவுகள், பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுகிறேன். இரவு நேரங்களில், சப்பாத்தி, சப்ஜி சாப்பிடுகிறேன். இதனால் பிரச்னைகள் இல்லை.