"எனக்கு சுதந்திரமான சினிமா இது. சின்ன வயதில் கூட்டாஞ்சோறு ஆக்குகிற மாதிரி ஒரு சினிமா எடுப்பது. கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேசத் தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான ஃபார்முலா இருக்காது. ஆனால், சுவாரஸ்மான சினிமா. சுவாரஸ்யம் என்பது பாட்டு, சண்டை, குரூப் டான்ஸில் மட்டும் இல்லை; இயல்பான வாழ்க்கையிலும் இருக்கிறதென சொல்கிற சினிமா.'' கைகள் பற்றிக் கொண்டு பேசத் தொடங்குகிறார் இயக்குநர் அருண் கே. பிரசாத். குறும்பட உலகத்தில் இருந்து வரும் படைப்பாளி. இப்போது " அக்கரன் படத்தின்' படத்தின் இயக்குநர்.
குறும்பட உலகத்தில் இருந்து வருகிறீர்கள்....
வாழ்த்துகள்....
நன்றி. மதுரைப் பக்கம் திருப்பரங்குன்றம். அங்கிருந்து புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்தது பெரும் பயணம். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேங்காய், பழக்கடைதான் நம்மத் தொழில். அது தொடர்பாக ஏதேதோ வேலைகள். அப்பாவுக்கு சினிமா அதிகம் பிடிக்கும். வேலை இல்லா இரவுகளில் சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். அந்த ரசனை அப்படியே கூடவே ஒட்டிக் கொண்டது. அது அப்படியே ஹாலிவுட் சினிமாக்கள் பக்கம் இழுத்துப் போனது. நான் பார்த்த தமிழ் சினிமாக்களுக்கும், ஹாலிவுட் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் என்பதை உணரும் அளவுக்கு ரசனை கூடியது. அதே நேரத்தில் கதைகள், புத்தகம், சினிமா என தனி உலகம் விரிந்தது. அப்போதுதான் குறும்படங்களுக்கான உலகம் தமிழ் சினிமாவில் திறந்தது. படப்பிடிப்பு பார்க்க போகிற கதைகள் தனி. அதன் பின் சென்னைக்கு வந்து சினிமா அனுபவங்களை பெற முயற்சித்தேன். எல்லாமே தோல்வி. நாமும் படம் எடுத்து பார்ப்போமே என்று அந்திரன், ஆண்டான் என்ற இரு குறும்படங்கள் எடுத்தேன். நண்பர்கள் வட்டாரத்தில் நல்ல வரவேற்பு. ஒரு நல்ல முழு நீள சினிமா எடுக்க வேண்டும் என்கிற நினைப்பு மனசுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டே இருந்தேன். அதுதான் இந்தப் படம். சினிமாவுக்கான ஸ்க்ரிப்ட்டுக்கு, எதையும் கொஞ்சம் மேலே இருந்து பார்க்க வேண்டும் என சொல்லுவார்கள். அந்தக் கதைக்காக வாழ்க்கையையும் மேலே இருந்து பார்த்தேன். இப்போது ஆல் இஸ் வெல்.
நினைத்த கதையை எடுப்பது பெரும் கலை....
முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாம பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாக பதிய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது விறுவிறுப்பான செய்தி ஒன்று ஊடகங்களில் தந்தியடித்தன. அரசியல், அதிகாரம் என பெரும் பொறுப்புகளில் இருந்தவர்கள் எல்லோருக்கும் அதில் சம பங்கு. அம்பேத்கர், பெரியார், கக்கன், காமராஜர் போன்று தெய்வமாக வணங்க வேண்டியவர்களை, காவல் துறை விசாரணையில் பார்த்த போது வெவ்வேறு உணர்வுகள்.
அதை மையமாக கொண்டு ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தேன். அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அப்படித்தான் இந்த கதையின் ஓட்டம் இருக்கும். எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம். இந்தக் கதையும் அப்படித்தான். வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். என் முதல் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக்கலாம். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யவோ, குறைகளை சுட்டிக் காட்டவோ, நான் படம் எடுக்கவில்லை. எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அடித்தளம். அவ்வளவுதான்.
இன்னுமொரு அரசியல் விமர்சன படமா....
இருக்கலாம். ஆனால், இது வேறு உணர்வு தரும். தொண்டர்களின் உயிரிழைகளை இழுத்து இழுத்துத்தான் இத்தனை சிலந்திகளும் உருவாகின. காமெடியாக, கலாட்டாவாக உணர்ச்சிப்பூர்வமாக கடந்துப் போய் விடுகிற தொண்டர்களைப் பற்றி யாருக்கும் எப்போதும் கவலை இல்லை. கட்சிகள் கம்பெனிகளாகி, தலைவர்கள் அதன் எம்.டி.களாகிவிட்ட பிறகு, தொண்டர்களாவது குண்டர்களாவது? இப்போது உணர்ச்சிகளில் சிக்கிக் கிடக்கிற தொண்டர்களை பாவமாக நினைத்துக் கொள்கிறேன். தொண்டர்களின் ரத்தமும், உயிரும், கண்ணீரும்தான் ஒவ்வொரு கட்சிக்கும் கொடி மரத்து வேர்கள் இல்லையா? கலவரத்தில், போராட்டத்தில், அடிதடியில், தீக்குளிப்பில் உருவான கல்லறைகளின் மேல் எத்தனை சபதங்களும் வெற்றிகளும் கட்டப்பட்டன? இவ்வளவு நீளமான ஐ.பி.எல். நடத்தி கல்லா கட்டுபவர்களை, பெட்ரோல், கேஸ் விலையை ஏற்றி விட்டு பி.எம்.டபிள்யூ காருக்கு வரி குறைப்பவர்களை, தேங்காய்பத்தைகளோடு இலவச மிக்ஸிக்கு காத்திருப்பவர்களை, இன்னும் ஐ.சி.யூ. காட்சிகளை வைக்கும் சீரியல்காரர்களை, தமிழ்நாட்டில் வறுமைக்கோடே இல்லை என்று அறிவிக்கும் அதிகாரத்தை, அத்தனை நாயர்களும் டீக்கடை போட்டு திரியும் போது, 1 லட்சம் கோடி நகைகளைக் கோயிலுக்குள் பதிக்கி வைத்த மன்னர்கள், சேனல் 4 காட்சிகளை தாண்டி வந்த அரசியல்வாதிகளை... கடந்துதான் இந்த வாழ்க்கை.
அவர்கள் எல்லாம் காரியவாதிகள். சமூகம்தான் அவர்களை தவறாக புரிந்து வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட திருடுகிறவர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம். இன்னும் ஒரு விஷயம்... "அக்கரன்' என்றால் அழிவில்லாதன் என்று பொருள்.
ஒரு காட்சியில் வந்தாலே எம்.எஸ். பாஸ்கர் அசத்துவார்... படம் முழுக்க அவர்... எப்படி எதிர்பார்க்கலாம்.
சிலர் உயரங்களைத் தொடும்போது இழப்பதும் அதிகமாக இருக்கும். ஆனால் தன் இடத்தை என்றைக்கும் இழக்காத நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். நடிகன் என்பதை விட, இந்த இடத்தில் இருக்கும் நடிகன் என்ற பெயரே முக்கியமானது என்று அடிக்கடி சொல்லுவார். "நல்ல கேரக்டர் என்றால் நான் நடித்து தருகிறேன் என்று நான் கத்திச் சொல்ல கூடிய நடிகர். இந்தக் கதையை அவருக்காகவே எழுதினேன். அவருக்காகவே காத்திருந்தேன். கதையை கேட்டு விட்டு யார் ஹீரோ என்று கேட்டார். நீங்கள்தான் சார். எப்போது கால்ஷீட் வேண்டும் என்று முன் வந்து நின்றார். இதுதான் அவர். அந்த மனநிலைதான் ஒரு நடிகனுக்கு முக்கியம் என்று நினைப்பேன். அதை எனக்கு முழுமையாக கொடுத்தார்.அவருக்கு இந்த நேரத்தில் நன்றி. நமோ நாராயணன், வெண்பா என சில நடிகர்கள் இன்னும் பக்க பலம். பார்த்து விட்டு சொல்லுங்கள்.
-ஜி.அசோக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.