""எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மன பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களை பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா...? என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்களும், பகிரப்படாத தனிமையும் இன்னும் ஏராளமாக இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது.'' உள்ளார்ந்து பேசுகிறார் இயக்குநர் மோகன் ஜி. " திரௌபதி', "ருத்ர தாண்டவம்' உள்ளிட்ட இவரது படங்களுக்கு எப்போதும் சர்ச்சை முத்திரை உண்டு. இப்போது "பகாசூரன்' படத்தின் மூலம் வருகிறார்.
அது என்ன "பகாசூரன்'....
மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் பல கதைகள் மறைந்துள்ளன. அதன் உபகதை ஒன்றின் நாயகன் தான் பகாசூரன். இந்த கதைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது மிகவும் சுவாரஸ்யமான கதை. ஒரு ஊரின் அரசன் அரக்கன் ஒருவனிடம் ஓர் ஒப்பந்தம் போட்டிருந்தார். அதன் படி, அந்த அரக்கனுக்கு அந்த கிராமத்தில் இருந்து ஒருவர் மூட்டைக்கணக்கான உணவை கொண்டு செல்ல வேண்டும். அந்த அரக்கன் அந்த உணவுடன் சேர்த்து அந்த கிராமவாசியையும் உண்டு விடுவான். இதே முறையில் பல கிராமவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஒரு நொடிதான் இந்தப் படத்தின் கதை. அந்த பகாசூரனை மையமாக வைத்து எழுதிய கதை இது.
என்ன சொல்ல வருகிறீர்கள்...
இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம் இது. எந்த இமேஜூக்குள் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலை மாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது. அதே நேரத்தில் இன்றைய இணைய தளத்தை பார்த்து கேள்வி கேட்கும் படம்.
பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்ன எதிர்பார்க்கலாம்...
தில்லியில் தன் நண்பனோடு கைகோர்த்துப் போன மருத்துவ பெண் அப்படி ஒரு மூர்க்கமான சூறையாடலுக்கு ஆளாவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ரத்தமும் துடிப்புமாக அல்லாடிய அந்தப் பெண் மனதில் எத்தனை கேள்விகள் ஓடியிருக்கும்? அந்தக் கணத்தை எப்படி கடந்து வந்திருப்பாள் அந்த பெண். நினைத்துப் பார்க்கவே அப்படி ஒரு கூச்சம். ஆணாகப் பிறந்த அத்தனை பேருமே கூனிக்குறுக வேண்டிய சம்பவம் இல்லையா அது? ஆனால், அதற்குக் கூட பெண்களின் உடைதான் காரணம், நடைதான் காரணம் என்று உள்ளர்த்தம் கற்பிக்கிறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? தலைநகரில் நடந்த கொடூரம் தடம் தெரியாத குக் கிராமங்களிலும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கண்டும் காணாமலும் நாம் கடந்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெண்களைக் காட்டிலும் ஆண்களை மனதாலும், உடலாலும் வலிமையாய் படைத்தது யாரையும் பலாத்காரப்படுத்த இல்லை... பத்திரமாய் பாதுகாப்பதற்கு. சாகப்போகிற கடைசி நிமிஷத்துல கூட, மனசுக்கு பிடித்தவனின் மடியில் தலை சாய்க்க நினைக்கிறவர்கள் பெண்கள். அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தி தராத இந்த சமூகத்தின் மீதான அதிரடி பாய்ச்சலாக இருக்கும்.
செல்வராகவன், நட்டி இருவரையும் ஒருங்கிணைத்து இருக்கிறீர்கள்....
இந்தக் கதைக்கு ஒரு தகப்பன் வேண்டும். அதுவும் அவர் சொல்லுவது எல்லோருக்கும் போய் சேர வேண்டும். குறிப்பாக காது கொடுக்க வேண்டும். அந்த இடத்துக்குத்தான் செல்வராகவன் சாரை அழைத்து வந்தேன். இந்தக் கதை எழுதப்பட்டதும், ஒரு தகப்பன் ஸ்தான நடிகரை தேடினேன். அப்போதுதான் செல்வராகவன் சார் நடிக்க விரும்புவதாகவும், சில படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வந்தன. தேடிப் போய் பார்த்தேன். சம்மதம் சொன்னார். இப்படித்தான் இந்தக் கதைக்குள் அவர் வந்தார். தமிழுக்கு புதிதான நடிகர். அவரின் திறமைக்கு இங்கே பெரிய உதாரணங்கள்இல்லை. இந்தக் கதைக்கு பெரும் பொறுப்பு மிகுந்த நடிகர் தேவை என்பது முதல் விதி. நடிப்பை முழுத் தகுதியாக கொண்டவர் ஒருவர் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்த போதுதான், அவர் இதன் உள்ள வந்தார். நட்சடி வந்ததும் படம் இன்னும் அழகானது. எனக்கான வேலை வாங்கும் சிரத்தை குறைந்தது. வடிவாக்கத்தை மட்டுமே நான் பார்த்துக் கொண்டேன். மற்றவற்றை அவராகவே பார்த்துக் கொண்டார். அவருடன் வேலை பார்த்த கணங்கள் அத்தனையும் அற்புதம். வாழ்க்கை மேல் அவர் கொண்டிருக்கிற பற்றும், நடிப்பின் மீது அவருக்கு இருக்கிற வெறியும் ஆச்சரியமாக இருக்கிறது. எல்லோருக்கும் நன்றிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.