ஞாயிறு கொண்டாட்டம்

கோடிப் பூக்கள் கூடி நின்ற அதிசயம்..!

எங்கெங்கு காணினும் பூக்கள், காய்கறிகள், தாவரச் செடி வகைகள்... என முழுக்க முழுக்க ஏதோ விவசாய விநோத உலகத்தில் நுழைந்த வியப்பை ஏற்படுத்தியது.

ஜெயப்பாண்டி

எங்கெங்கு காணினும் பூக்கள்,  காய்கறிகள்,  தாவரச் செடி வகைகள்... என முழுக்க முழுக்க ஏதோ விவசாய விநோத உலகத்தில் நுழைந்த வியப்பை ஏற்படுத்தியது புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற வேளாண் விழாவான 33-ஆவது மலர், காய்கனி கண்காட்சி. 

வழக்கமாகத் தாவரவியல் பூங்கா வளாகத்தில் இந்த விழா நடக்கும்.  கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதால் கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஏ.எஃப்.டி. மைதானத்தில் நடைபெற்றது.

கண்காட்சியில் முதல் பகுதியில் மணக்குள விநாயகர் கோயிலின் யானையும் அண்மையில் மறைந்து பக்தர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய  லட்சுமியின் உருவம் லட்சம் ரோஜா மலர்களால் அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. லட்சுமிக்கு முன்பாக நவதானியங்களாலான புதுவையின் அடையாளமான ஆயி அலங்கார வளைவு இருந்தது.

அதையடுத்து, அன்னப்பறவைகள்,  மயில்கள்,  குடத்திலிருந்து நீர் போல விழும் மலர்கள், மாட்டு வண்டிகள், மீன்கள் என வியக்க வைக்கும் கோடிக்கணக்கான மலர்களால் வடிவமைத்த உருவங்களும் மனதை மயக்கும் வகையில், மணத்துடன் வசீகரித்தன.

பூக்களை ரசித்தபடியே சென்றவர்களுக்கு அடுத்த பகுதியில் காத்திருந்தது அசரவைக்கும் பழங்களாலான பல்வேறு வகை உருவங்கள்!  கருப்பு, பச்சைத் திராட்சைகளாலான இரு காளைகள் கம்பீரமாக நின்றன. அவை இழுக்கும் பல்வகைக் கனிகளாலான மாட்டு வண்டி, பாகற்காய்களாலான டைனோசர்கள், சட்டென பார்வையாளர்களைப் பயமுறுத்தும் அன்னாசிப்பழ முதலை, ஆச்சரியப்படுத்தும் வகையிலான கத்தரிக்காய் கழுத்தும்,  பூசணிக்காய் தோகையும் உள்ள மயில் உருவம் என அனைவரையும் வியக்க வைத்த காய்கனி உருவங்கள் ஏராளம்.

திராட்சைக் காளைகளுக்கு முன்பாக கோடை வெப்பம் தணிக்கும் தர்ப்பூசணியில் பாரதியார்,  அப்துல் கலாம்.. எனத் தொடங்கி பல தலைவர்களது உருவம் அமைத்திருந்தது வியக்கவைத்தது. 

பழங்களில் இத்தனை வடிவங்களா என பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.  மூல முதல்வர் விநாயகர் உருவம் சுரைக்கூட்டில் அமைக்கப்பட்டிருந்ததும் ஆச்சரியப்படுத்தியது.  அத்துடன், போர்வீரர்கள், சுமை தூக்கும் பெண் என சுரைக்கூட்டில் பலவகை உருவங்கள் செதுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 

மலர்கள், காய்கறிகள், கனிகள் ஆகியவற்றால் அமைந்த உருவங்கள் நம்மை விவசாய உலகத்தில் உலாவவிட்ட நிலையில், காகித உருவங்கள் நம்மை யதார்த்தத்துக்கு அழைத்தும் வந்தன. அத்துடன் தமிழ் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான குடும்பக் கட்டமைப்பு அரங்கில் நெல் விளைவித்தல், அதை கல் உரலில் குத்தி அரிசியாக்குதல், முறத்தால் அரிசியில் கல் உள்ளிட்டவற்றை நீக்குதல், வீட்டில் உணவுக்கான குழம்புக்கான மசாலாவை அம்மியில் அரைத்தல், பூக்கட்டுதல், பல்லாங்குழி, சொக்கட்டான் விளையாடுதல் என கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாரம்பரிய வீட்டு உபயோகப் பொருள்களை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் மாதிரியாக அமைத்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.  

அன்றைய வீட்டு உபயோகப் பொருள்கள் தற்போது கிரைண்டர், மிக்ஸி, குக்கர் என இயந்திரமானதையும் நினைத்து ஏக்கப்பெருமூச்சுவிட்டனர் பலர்.

ரசிக்க மட்டுமல்ல; நவீன கால தோட்டக்கலை, கால்நடை ரகங்கள், அவற்றை பராமரிக்க உதவும் தீவனங்கள்,  மருத்துவச் சிகிச்சைக் குரியவை என அனைத்தையும் சாமானியர் முதல் ஆய்வாளர்கள் வரை அறியும் வகையில் அமைந்திருந்தது வேளாண் கண்காட்சி. 

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் அதிசயித்து பார்த்து ரசித்த கண்காட்சியானது 3 நாள்களே நடைபெற்றது.  அதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டது புதுச்சேரியில் புதிய நிகழ்வாகவே கருதப்படுகிறது.

வந்தவர்கள்  ஆளுக்கொரு தாவரத்தையும் வாங்கிச் சென்றனர். அந்த வகையில் புதுச்சேரியை பசுமையாக்கும் வகையில் வேளாண் விழா அமைந்தது.

படங்கள்- கி. ரமேஷ் (எ) ஜெயராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT