முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

குமரி மாவட்ட வாழ்க்கையின் பதிவு!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழி படங்களில் இவரது பங்கு இருக்கும். இவரது வருகை அந்தப் படத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
பகிர்:

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழி படங்களில் இவரது பங்கு இருக்கும். இவரது வருகை அந்தப் படத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். எல்லா நடிகர், நடிகைகளுக்கும் பிருந்தா என்றால் அவ்வளவு மரியாதை; அவ்வளவு பிரியம். நடன இயக்குநராக பல சாதனைகள் படைத்துவிட்டு, இப்போது இயக்குநராகவும் வலம் வருகிறார். "ஹே சினாமிகா' படத்தைத் தொடர்ந்து "குமரி மாவட்டத்தின் தக்ஸ்' என்ற ஆக்ஷன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 

நடன இயக்குநர் சரி... இயக்குநராக உங்களுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி... 

"ஹே சினாமிகா' படத்தை சின்ன அளவில்தான் ஆரம்பித்தேன். ஆனால், அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை இன்னும் ஓட வைத்தது. இன்னும் உழைக்க வைத்தது. சினிமாதான் எனக்கு எல்லாம். சின்ன வயதில் இருந்தே இங்குதான் இருக்கிறேன். இதை விட்டால் எனக்கு எதுவும் தெரியாது. வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட் ஃபிரெண்ட்ஸ்தான். நான் சோர்ந்து விடுகிற நேரங்களில் எல்லாம் என் மனசுக்குள்ள நம்பிக்கையை விதைத்து, என்னைப் புதிதாக  உணர வைத்து விடுவார்கள். என்னுடைய வாழ்க்கையில், என் கேரியர் எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு என் நண்பர்களும்  முக்கியம். நிறைய நடிகர்களுடன்  வேலை பார்த்திருக்கேன். அதனால் சினிமா துறையில், எனக்கு நண்பர்கள் அதிகம். அவர்கள் கொடுத்த ஊக்கமும் நான் இயக்குநராக பரிணமிக்க காரணம்.  

ஒரு ஆக்ஷன் படம்.... எந்தளவுக்கு மெனக்கெடல்....

குமரி மாவட்ட பின்னணியில் ஒரு கதை என முடிவானதும், அதற்கு எல்லா விதத்திலும் தயாராக இருந்தோம். கதை தன்னைத்தானே வடிவமைத்துக் கொள்ளும் என்பார்கள். இது அப்படித்தான் முழுக்க முழுக்க ஆக்ஷன் களம். ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா? என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள்  ரஜினிகாந்த் சார் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர், அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இப்படத்தில் மிகச்சிறந்த பாடலையும், அட்டகாசமான பின்னணி இசையையும் தந்த சாம் சிஎஸ்க்கு நன்றி. படத்தின் மிகப்பெரும் பலமாக இருந்த எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் பிரியேஷ் படத்திற்கு அற்புதமான விஷுவல்ஸ் கொடுத்துள்ளார். பாபி சிம்ஹா முக்கிய பாத்திரத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஓய்வு நேரத்தில் கூட அவர் கேரவனுக்குள் நுழைய மாட்டார், மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தான் எப்போதும் இருப்பார் அவரது ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. ஆர்.கே. சுரேஷ் மற்றும் முனிஷ்காந்த் இருவரும் படத்திற்கு பெரும் பலமாக இருந்தனர். 

ஒரு படத்தில் நடன கலைஞர்களின் உழைப்பு அபாரமானது ஆனால் அதற்குரிய அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்கிறதா?

அது குறைவாகதான் இருக்கிறது. ஒரு படத்தில் ஹீரோ, ஹீரோயின் நன்றாக நடனம் ஆடியிருந்தால் அதற்கு பின்னால் ஒரு நடன இயக்குநரின் உழைப்பு இருக்கிறது. இது அந்த நடிகர்,நடிகைகளுக்கும் தெரியும். ஆனால் ரசிகர்கள் சொல்லும் போது குறிப்பிட்ட நடிகர் நடிகைகளின் பெயரைச்சொல்லி சூப்பராக நடனம் ஆடினார்கள் என்றுதான் சொல்லுவார்கள். அது இயல்பான ஒன்றுதான். ஆனால் சம்மந்தப்பட்ட ஹிரோவோ ஹீரோயினோ எங்களை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பாராட்டுவார்கள். இதுதான் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்.  சினிமாவிலேயே எனக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள். அதனால் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்வேன். மற்றவர்களுக்கு அது கிடைத்திருக்கிறதா என்றால் அது குறைவே.

குழு நடனங்கள் குறைந்த வருகிற காலம் இது...

ரொம்பவும் பரிதாபமாக இருக்கிறது. இன்றைக்கு நிறைய படங்களில் பாடல்களே வைப்பதில்லை. அப்படி வைத்தாலும் அதை கதைக்களத்தோடு இருக்கும் பாடலாக வந்து விடுகிறது. படத்தின் பட்ஜெட்டை காரணமாக வைத்து பாடல்களைதான் நீக்குகிறார்கள். இதனால் நடனக்கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கு வேலையும் கிடைப்பதில்லை. அந்தக் காலத்தில் ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் என்றால் அதில் நான்கு பாடல்கள் நடன பாடல்களாக இருக்கும். ஆனால் இன்று அப்படியில்லை. அதிலும் நன்றாக நடனம் ஆடும் நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு படம் இரண்டு படமோதான் நடிக்கிறார்கள். இதனால் படங்கள் குறைகிறது. இன்னொரு பக்கம் எதார்த்த சினிமா என்கிற பெயரால் பாடல்களை யாரும் படத்தில் வைப்பதில்லை. சினிமாவில் அவர்கள் எடுக்கும் படங்களும் வெற்றி பெறுகின்றன. இதனால் பாடல்கள் இல்லாமலேயே படம் எடுத்தால் என்ன என்கிற சிந்தனை மற்றவர்க்ளுக்கும் வந்து விட்டது. இயக்குநர்  ஷங்கர் போன்றவர்கள்  பாடல்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள். இன்றைக்கும் புத்தாண்டு பிறந்தால் ஹேப்பி நியூ இயர் என்று சகலகலா வல்லவன் படத்தின் பாடலைதான் ஒளிபரப்புகிறார்கள். பொங்கல் வந்தால் மகாநதி பாடல், தீபாவளி வந்தால் நாயகன் படத்தின் பாடல் என்று பாடல்கள் பெரிய அடையாளமாக இருக்கிறது. இந்தப் பாடல்களுக்கு பின்னால் பல நடனக்கலைஞர்களின் குடும்பங்கள் வாழ்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. 

குஷ்பு உங்களுக்கு எப்போதும் ஸ்பெஷல்தானே....

என்னுடைய கேரியரில் எனக்கு மிகப்பெரிய ஆரம்பத்தைக் கொடுத்தது குஷ்புதான். அசிஸ்டென்ட் மாஸ்டராக வேலைபார்த்துட்டு இருந்த எனக்கு சுந்தர்.சி சார் இயக்கிய "உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் டான்ஸ் மாஸ்டராகப் பணிபுரியும் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தாங்க. அது என்னோட திறமைக்கான வாய்ப்புனு குஷ்பு சொன்னாலும், அதில் நட்பைத்தான் நான் அதிகமா உணர்ந்தேன். அந்த நட்பு இன்னும் தொடர்கிறது. 

ஜி.அசோக்

முழு கட்டுரையைப் படிக்க →