பாறைச் சித்திரங்களை நவீன ஓவியத்தோடு இணைத்து புதிய வகை ஓவிய முறையை செயல்படுத்திவருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர் கே.முனுசாமி.
பத்தாம் வகுப்பு வரையிலே படித்துள்ள இவருக்கு, நாற்பத்து எட்டு வயதாகிறது. சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வம் இருந்துள்ளது.
தனது நூதன முறையிலான ஓவிய ஆர்வம் குறித்து, முனுசாமி கூறியதாவது:
வறுமையான குடும்பத்தில் பிறந்தேன். பள்ளிக்குச் செல்லும் வழியில் சுவர்களில் உள்ள ஓவியங்களைப் பார்த்து, வரைய வேண்டும் என ஆசை ஏற்பட்டது. நானாகவே படங்களை வரையத் தொடங்கினேன். அமிர்தம் என்ற சகோதரி எனது ஓவியத் திறமையை பார்த்து முறைப்படி ஓவியப் பள்ளியில் சேர உதவினார். பின்னர், தனியார் ஓவியப் பள்ளியில் 11 ஆண்டுகள் பணிபுரிந்தேன்.
கம்பளி வகை துணிகளில் ஓவியத்தை நூலால் எம்ப்ராய்டரிங் செய்து, வெளிநாட்டுப் பயணிகளுக்கும் விற்பனை செய்தோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
துணி ஓவியம் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஓவிய வகுப்புக்கு மாலை நேர பயிற்சியாளராகச் சென்றுவந்தேன். அப்போதுதான் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட கீழ்வளை எனும் பகுதிக்குச் சென்றேன். அங்கு பாறைகளில் பழங்கால சித்திரங்கள் இருந்தன. அவை அழிக்கப்பட்டும் இருந்தன. அதைப் பார்த்ததும் நமது முன்னோர் பாறைச் சித்திரங்கள் மூலம் நமக்கு அவர்களது வரலாறை விட்டுச்சென்ற நிலையில், அதை பாதுகாக்க முன்வராமலிருப்பது வேதனையை அளித்தது. அன்றிலிருந்து எனது நவீன ஓவியங்களில் ஊடுஓவியமாக பாறைச் சித்திரக் காட்சிகளை வரையத் தொடங்கினேன்.
மனிதன் நாகரிகத்தை நுகரும்போது அவனுக்கான தொடர்பியல் வழியாக இருந்தவை பாறை சித்திரங்கள். ஆதிகாலத்தில் குழுக்களாக வாழ்ந்த மனிதர்களிடையே கருத்துப் பரிமாற்றம், தகவல் தொடர்புக்கான வழிகளாகவே பாறைகளில் சித்திரத்தை தீட்டுவது நடைபெற்றுள்ளன.
மனிதர்களை அச்சுறுத்திய, அதிசயத்தக்க விலங்குகளும், அவர்களிடமிருந்த வாழ்க்கை முறையை மற்ற குழுக்கள் அறியும் வகையிலான நடைமுறைகளும் பாறைச் சித்திரங்களில் இடம்பெற்றுள்ளன. வரி வடிவ எழுத்துகளாகவும், குறியீடுகளாகவும் பாறை சித்திரங்கள் இன்றும் பல குன்றுகளிலும், மலைக்குகைகளிலும் காணப்படுகின்றன. இத்தகைய பாறை ஓவியங்கள் மீது எனக்கு அலாதி ஆர்வம் அதிகரித்தது.
பாறைச் சித்திரங்கள் கிறுக்கல்களாகவும், வரிகளை இணைத்து உருவங்களை உருவாக்கும் வகையிலும் காணப்படும். அவை மூலிகை, ரத்தம் உள்ளிட்டவை மூலம் வரையப்பட்டுள்ளன. அவற்றில் பெண், ஆண், திருவிழா, திருவிழா, கருத்துக் குறியீடுகள் என 50-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. குறிப்பிட்ட இடத்தில் உள்ள விலங்கினங்களது வரிவடிவ உருவமானது, அங்கு வந்து தங்குவோரை எச்சரிக்கும் வகையில் வரையப்பட்டும் உள்ளன.
கீழ்வளை மலையில் ஆடு, குதிரை, ஒட்டகச்சிவிங்கி, பெண்கள் நடந்து வேலைக்குப் போவது என பல பாறைச் சித்திரங்கள் உள்ளன. அவை அனைத்துமே அரை செ. மீ. முதல் 1 செ.மீ.க்குள்ளேயே வரையப்பட்டுள்ளது.
பாறைச் சித்திரங்கள் அடிப்படையில் நவீன ஓவியமாக தவமிருக்கும் முனிவர், மீனவப் பெண்ணை வரைந்துள்ளேன். பாறை சித்திரங்கள் இணைந்த நவீன ஓவியக் கலைக்காகவே பல்வேறு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் பல பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும், 20-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளேன்.
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளேன். அந்த ஓவியத்தை பிரிட்டன், பிரான்ஸ் நாட்டவர்கள் வாங்கிச்சென்றுள்ளனர்.
புதுச்சேரி தமிழுக்கும், தேசியத்துக்கும், தெய்வீகத்துக்கும் பெயர்போன ஊர். கால மாற்றத்துக்கேற்ப ஓவியக் கலையும் மாற்றம் பெறுவது அவசியம். இதன்படி, பாறைச் சித்திரக் கலையையும் பாதுகாப்பது முக்கியமாகும்'' என்றார் முனுசாமி.
படங்கள்- கி.ரமேஷ் (எ) ஜெயராமன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.