குழந்தைகளை மையப்படுத்திய கதை
டிராபிக் ராமசாமி'யின் வாழ்க்கையை அப்படியே சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குநர் விக்கி. எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த "டிராபிக் ராமசாமி' படத்துக்கு பரவலான வரவேற்புகள் இருந்தன.
"டிராபிக் ராமசாமி'யின் வாழ்க்கையை அப்படியே சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குநர் விக்கி. எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த "டிராபிக் ராமசாமி' படத்துக்கு பரவலான வரவேற்புகள் இருந்தன. இந்த நிலையில் தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை செய்து இருக்கிறார் விக்கி. இது குறித்து அவர் பேசும் போது.... " உலகம் முழுவதும் குழந்தைகள் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் "அஞ்சலி', "பசங்க', "காக்கா முட்டை' என குழந்தை மற்றும் சிறுவர்களை மையப்படுத்திய கதைகளுக்கு தனி இடம் உண்டு.
இந்த வரிசையில் இடம் பிடிக்கும் அளவுக்கு ஒரு திரைக்கதை அமைத்துள்ளேன். கேள்விகளால் உலகை அழகாக்கியவர்கள் குழந்தைகள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கும் போது அவர்களின் அறிவு விரிவடைகிறது. தொலைக்காட்சிகள் 90 -களின் துவக்கத்திலும், இணையதளம் 90- களின் இறுதியிலும் தமிழகத்தில் பரவலாகத் தொடங்கின. இவை வீடு புகுந்து தமிழ்க் குடும்பங்களுக்குள் நுழைந்ததிலிருந்து புழுதியில் மண்ணுடன் மண்ணாக விளையாடிய குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. அதன் விளைவாக இப்போதுள்ள குழந்தைகளிடம் கேள்விகள் குறைந்து போய் பதில்களாகவே நிறைந்து இருக்கிறது. இவர்களுக்கு உலகைப் பற்றி அனைத்துமே தெரிந்திருக்கிறது.
இப்படம் கூகுளும், யூடியூபும் தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்பு குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்த பொற்காலத்தையும், அவர்களின் உலகத்தையும் நகைச்சுவையாகச் சொல்லும் கிராமத்துப் பின்னணியில் அமைந்ததாக இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு சென்னையிலும், நடிகர்கள் தேர்வு மதுரை, சிவகங்கை வட்டாரங்களிலும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்படத்தை கனா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. விரைவில் படத்துவக்க விழாவுடன் படப்பிடிப்பு பணிகள் நடைபெறும்''. என்றார் இயக்குநர் விக்கி.
Advertisement