ஞாயிறு கொண்டாட்டம்

புதர் மண்டிய நிலையில் டச்சுக் கோட்டை

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய 17-ஆம் நூற்றாண்டில்,  டச்சுக்காரர்கள் ஆட்சியில் உருவான பிரம்மாண்டமான கோட்டை பராமரிப்பின்றி உள்ளது.

ஜெயப்பாண்டி

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய 17-ஆம் நூற்றாண்டில்,  டச்சுக்காரர்கள் ஆட்சியில் உருவான பிரம்மாண்டமான கோட்டை பராமரிப்பின்றி உள்ளது.  

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோட்டை தற்போது தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.  இதை மீட்டு பழைமை மாறாமல் சீரமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும்  எதிர்பார்க்கின்றனர்.

ஐரோப்பிய கம்பெனிகளின் ஆரம்பகால வர்த்தக மையங்களில் கடலூர் முக்கிய இடமாக விளங்கியது. செஞ்சி நாயக்க மன்னரின் ஆட்சிக்கு உள்பட்ட கடலூரை மையமாகக் கொண்டு, டச்சுக்காரர்கள் தங்கள் வர்த்தக கேந்திரத்தை வங்காள விரிகுடா பகுதியில் விரிவுபடுத்தத் திட்டமிட்டனர்.

டச்சுக் கோட்டை

இதற்காக, கடலூர் கெடிலம் ஆற்றங்கரையில் தேவனாம்பட்டினத்தில் கி.பி.1608-ஆம் ஆண்டு வர்த்தக நிர்வாக கோட்டையைக் கட்டுவதற்கு அப்போதைய செஞ்சி மன்னரான இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரிடம் அனுமதி பெற்று, பிரம்மாண்டமான கோட்டை டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது.

இதில், அதிகாரிகள் தங்குமிடம், ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையம், பொருள்கள் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டன. கோட்டையிலிருந்து கடலூருக்குச் செல்ல சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டன.

வியாபாரப் போட்டி காரணமாக விஜயநகரப் பேரரசின் தலையீட்டால், டச்சுக்காரர்களிடமிருந்த அந்தக் கோட்டை செஞ்சி நாயக்கர் மன்னரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. செஞ்சி பகுதியானது மராட்டிய மன்னரால் ஆக்கிரமிக்கப்பட்டபோது, இந்தக் கோட்டையையும் அவர் 
கைப்பற்றினார்.

ஏலத்தில் எடுத்த ஆங்கிலேயர் 

பின்னர், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு மராட்டிய மன்னரால் இந்தக் கோட்டை ஏலத்தில் அளிக்கப்பட்டது. அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் எலிஹுயேல் இந்தக் கோட்டையை தன்வசப்படுத்திய பிறகு, 'புனித டேவிட் கோட்டை' எனப் பெயரிடப்பட்டது. ஆங்கிலேயரின் முதல் கோட்டை இதுதான்.

கி.பி.1746-ஆம் ஆண்டு முதல் 1752-ஆம் ஆண்டு வரை இந்தக் கோட்டை கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகத் தலைமை நிர்வாக அலுவலகமாக திகழ்ந்தது. இதன் மீது பிரான்ஸ் அதிகாரி டூப்ளே படையெடுத்து வர, ஆங்கிலேயர்கள் எதிர்த்துப் போரிட்டு முறியடித்தனர். 2 முறை பிரான்ஸ் நாட்டவரால் கைப்பற்றப்பட்ட இந்தக் கோட்டையானது கி.பி. 1785-ஆம் ஆண்டு மீண்டும் ஆங்கிலேயர் வசமானது.

இந்தியா சுதந்திரமடையும் வரை இந்தக் கோட்டை தொடர்ந்து ஆங்கிலேயரிடம் இருந்தது. கோட்டையின் முன்பகுதி அலுவலகத்தை, ராபர்ட் கிளைவ்வின் செயலரான தாமஸ் ஜெபர்சன் தனது குடியிருப்பாகப் பயன்படுத்தி வந்தார்.

பராமரிப்பின்றி புதர் மண்டியது 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோட்டையானது தற்போது கிறிஸ்தவ சபையின்  பராமரிப்பில் உள்ளது. சுமார் ஆறே முக்கால் ஏக்கர் பரப்பிலான இந்தக் கோட்டையில் உள்ள முன்புற அறைகள், பின்புற கோட்டைச் சுவர், சுற்றுப்புறம் என அனைத்து இடங்களும் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கின்றன.

கோட்டையின் வளாகத்துக்குள் கிறிஸ்தவ மத சின்னத்துடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கோட்டை முன்பகுதி அறையில் தனியார் கட்டடப் பணிகளுக்கான ஜன்னல், கதவுகள் தயாரிக்கும் தச்சுப் பணிக்கூடம் உள்ளது. இதன் அருகிலுள்ள அறை கிறிஸ்தவ வழிபாட்டுக் கூடமாக்கப்பட்டுள்ளது. கோட்டையின் பின்பகுதியிலுள்ள ரகசிய சுரங்கப் பாதைகள், கிணறு உள்ளிட்டவை புதர்மண்டிக் கிடக்கின்றன.

கடலூரில் உள்ள இதுபோன்ற பழைமையான கட்டடங்கள் அரசு அலுவலகங்களாகவும், ஆட்சியர் அலுவலகங்களாகவும், கருவூலமாகவும் மாற்றப்பட்டுள்ளன. ஆனால், புனித டேவிட் கோட்டை மட்டும் மத அமைப்பு, தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. 

கடலூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக் கடற்கரைக்கு (சில்வர் பீச்) செல்லும்போது இந்தக் கோட்டையையும் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தனியார் கட்டுப்பாட்டில் உள்ளதால், இதன் வாயில் எப்போதும் பூட்டப்பட்டிருப்பதால் உள்ளே சென்று பார்க்க முடிவதில்லை.

தொல்லியல் துறை முன்வர வேண்டும் 

கோட்டையைப் பராமரித்து வருவதாகக் கூறும் தேவனாம்பட்டினம் அன்னை தெரசா தொண்டு நிறுவன அமைப்பைச் சேர்ந்த சா.அகஸ்டின் பிரபாகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

'எங்களின் கொள்ளு தாத்தா ஆங்கிலேய அதிகாரி வீட்டில் சமையலராக கோட்டை வளாகத்திலேயே பணியாற்றி வந்தார். கோட்டையின் முன்பக்க அறைகள் ஆளுநர் ராபர்ட் கிளைவ்-வின் செயலரான தாமஸ் ஜெபர்சனின் தனி வீடாக இருந்தது.

இப்படி தனிநபர் சொத்தாகிவிட்டதால் தொல்லியல் துறையினர் பராமரிக்க முன்வரவில்லை. அதேநேரத்தில் கோட்டைப் பகுதியையாவது தொல்லியல் துறையினர் பராமரிக்க முன்வரவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் கோட்டை சிதைந்து அழிந்து விடாமல் பாதுகாக்க முடியும்.

கோட்டையின் முன்பகுதி அறைகள் அனைத்தும் தற்போது ஆற்காடு லூத்தரன் கிறிஸ்தவ திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான மின் கட்டணத்தை 2011-ஆம் ஆண்டு முதல் செலுத்தி வருகிறேன். 'தானே' புயலால் கோட்டைப் பகுதியானது பெரியளவில் பாதிக்கப்பட்டது.

ஆனாலும், கடலூரின் சரித்திர சான்றின் அடையாளச் சின்னமான இதை எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ள இந்தக் கோட்டையை தொல்லியல் துறையினர் முன்வந்து பராமரிக்க வேண்டும். இதற்காக, தொல்லியல் துறைக்கு நாங்கள் ஒத்துழைப்புத் தர தயார்''  என்றார்.



படங்கள்: கி.ரமேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT