காதலை உணரும் தருணம்
அருள்நிதி நடிப்பில் வெளிவந்த "தேஜாவு' படத்தின் மூலம் நம்பிக்கை மிகுந்த இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.
அருள்நிதி நடிப்பில் வெளிவந்த "தேஜாவு' படத்தின் மூலம் நம்பிக்கை மிகுந்த இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் அரவிந்த் ஸ்ரீனிவாசன். இப்போது இவர் எழுதி இயக்கி வரும் படத்துக்கு "தருணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் படத்தின் துவக்க விழா நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
கிஷன்தாஸ், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். தர்புகா சிவா இசையமைக்கிறார். அருள் சித்தார்த் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக வர்ணாலயா ஜெகதீசன் பணியாற்றுகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""காதல் என்கிற அற்பமான, அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது. படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இது கூட சென்டிமென்ட் சினிமாவிற்கான வார்த்தையாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால் இது கூட சென்டிமென்ட்தான். இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான்.
ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு போக கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலை சொல்லலாம். சொல்லாமல் கூட இருக்கலாம். காதல், பேசுகிற விஷயமில்லை. தயவு செய்து அதை உணருங்கள் தோழர்களே... அதை உணரக்கூடிய தருணம்தான் இது'' என்றார்.