"தான் உண்டு; தன் வேலை உண்டு' என்று கடந்துபோகும் காலமாக மாறிவிட்ட சூழ்நிலையிலும்கூட ஏராளமானோர் தங்களால் முடிந்த உதவிகளை எப்போதும் செய்து வருகின்றனர். அதுபோல், தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட கடையநல்லூர் அருகேயுள்ள நெடுவயலைச் சேர்ந்த ஆடிட்டர் நாராயணன், அவரது மனைவி சுதா, மகன்கள் ஸ்ரீராம், உதயகுமார் ஆகியோர் தங்களது வருமானத்தில் 22 சதவீதத்தை ஒதுக்கி, பதினெட்டு ஆண்டுகளாக ஏழைகளுக்காகச் சேவைத் திட்டங்களைக் கண்காணித்து செயல்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஆடிட்டர் நாராயணனிடம் பேசியபோது;
"எனது பெற்றோர் ராமையா- கோமதி விவசாயிகள். எனது தந்தை மிகவும் சிரமப்பட்டே என்னை படிக்க வைத்தார். பல சமயங்களில் கல்லூரிக்கு பணம் கட்டுவதில் பிரச்னை ஏற்படும். எனது நண்பனுக்கு பணம் இல்லாத காரணத்தால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த நான் சில நண்பர்களுடன் சேர்ந்து பலரிடம் பணம் சேகரித்துப் பணம் கட்டினோம். பலர் கொடுத்த பணத்தால் அவன் தனது படிப்பை முடித்தான். இந்த சூழ்நிலைதான், என்னுள் கல்வி கற்க விரும்பும் மாணவ,மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
நான் படித்து முடித்து ஆடிட்டராக பணியாற்ற தொடங்கியது முதல் பொருளாதாரத்தில் பின்தங்கிய, நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி செய்ய தொடங்கினேன். ஆனால், அந்தப் பணத்தை நேரடியாகக் கல்லூரியில் நானே கட்டுவேன். கல்லூரியில் படிக்கும்பொழுது தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நான் உதவி செய்வது கிடையாது.
தற்போது "சன் சேரிட்டபிள் டிரஸ்ட்'-ஐ தொடங்கி அதன் மூலம் உதவிகளைத் தொடர்கிறோம். தேவையானவர்களுக்கு தேவையான சமயத்தில் உதவி கிடைத்தால் அவர்களால் சாதிக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு, சரியான நபர்களை தேர்வு செய்து உதவி செய்து வருகிறோம்.
2006- ஆம் ஆண்டு முதல் எனது வருமானத்தில் 22 சதவீதத்தைச் சேவை திட்டங்களுக்காகச் செலவிட்டு வருகிறேன். 18 ஆண்டுகளாக இடைவிடாமல் செய்து வருகிறேன். இதில்,60 சதவீதம் கல்விக்காகவும், 40 சதவீதம் ஏழை மக்களின் வாழ்வாதாரம், பெண்களின் திருமணம் போன்றவற்றுக்கும் ஒதுக்கி செயல்படுத்தி வருகிறேன். பல சமயங்களில் அதையும் தாண்டி கல்விக்காக கூடுதல் உதவியையும் செய்து வருகிறேன்.
கரோனா காலத்தில் அரிமா சங்கத்துடன் இணைந்து பல கட்ட உதவிகளையும்,உணவுப் பொருள்களையும் வீடுகள்தோறும் சென்று வழங்கினேன்.
மாதம்தோறும் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கி வருகிறோம். எனது மனைவியின் உறுதுணையுடன் ஜாதி, மதம் பேதமின்றி, 60 ஏழைப் பெண்களுக்கு தங்கத்தாலி, சீர்வரிசைகளை வழங்கி திருமணங்களையும் நடத்தியுள்ளோம்.
நாம் செய்யும் உதவி வெறும் பணமாக இருக்கக் கூடாது. உதவி கேட்பவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த உதவியால் பயன் பெற வேண்டும் என நினைத்து செயல்படுகிறேன். அதனால், தையல் இயந்திரங்கள், மாவு ஆட்டும் கிரைண்டர், தேய்ப்பு எந்திரம் என்பன போன்ற உபகரணங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வாய்ப்பு ஏற்படும்.
பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள், இருக்கைகளையும் வழங்கி வருகிறோம். எங்கள் வாயிலாக, படித்த மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் என்னிடம் நன்றி தெரிவிக்கும்போது நான் சொல்வது ஒன்றே ,ஒன்றுதான். "நீங்களும் உங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கல்விக்காக கொடுங்கள்' என்பதுதான்.
கல்வி நெறி செம்மல், மாமனிதர், வ.உ.சி. விருது, சேவை செம்மல், சீர்வரிசை நாயகன், மனிதநேய பண்பாளர் உள்பட எண்ணற்ற விருதுகளைப் பல்வேறு சமூக நல அமைப்புகள் எனக்கு வழங்கியுள்ளன.
விருதுகளைவிட உதவி பெற்றவர்கள் வாழ்வில் உயர்வு பெறுவதும், உயர்வு பெற்றவுடன் பிறருக்கு உதவி செய்வதும் மட்டுமே சிறந்த விருதாக எனக்கு தெரிகிறது. நிகழாண்டும், ஜூன் மாதத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்படுகின்றன'' என்றார் ஆடிட்டர் நாராயணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.