வானுயர்ந்த கண்ணாடிக் கட்டடங்கள், நவீன வாழ்க்கை முறைகள், பசுமையான தோட்டங்கள்... என நிறைந்து சர்வதேச அளவில் தொழில்நுட்ப நகரமாக அறியப்படும் பெங்களூரில் சோழர் ஆட்சியின் சாதனைகளாக விளங்கும் கோயில்களும், அங்குள்ள கல்வெட்டுகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை தாங்கிக் கொண்டுள்ளன.
கங்கர்களை முதலாம் ராஜராஜ சோழன் தோற்கடித்து 1004இல் பெங்களூரை கைப்பற்றினார். அதன்பிறகு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த சோழர்கள் ஏராளமான சிவன், விஷ்ணு கோயில்களைக் கட்டினர். அவை இன்றைக்கும் சோழர்களின் கட்டடக்கலை, கலை நுணுக்கம், பக்தி, கொடைகளைப் பறைசாற்றுகின்றன. இந்தக் கல்வெட்டுகளைத் தேடி கண்டுபிடித்து, அவற்றை ஆவணப்படுத்தும் பணியை கன்னடமொழி பேராசிரியர் கே.ஆர்.நரசிம்மன், வரலாற்று ஆர்வலர் கே.தனபால் ஆகியோர் மேற்கொண்டுவருகின்றனர்.
இதுகுறித்து கே.தனபாலிடம் பேசியபோது:
""கோலார் மாவட்டத்துக்கு உள்பட்ட கெளரிபிதனூரை அடுத்த மஞ்சேனஹள்ளி கிராமம்தான் எனது சொந்த ஊராகும். 1987இல் பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தேன்.
2006இல் தொடங்கப்பட்ட ""பெங்களூரு தரிசனம்'' பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றியபோது, சுற்றுலாப் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடைத் தேட முயன்றபோது, வரலாறு, கல்வெட்டு, கல்லறைகளின் மீது ஈடுபாடு அதிகரித்தது. வரலாற்று அறிஞர்கள் சுரேஷ்மூனா, வேம்கல் சோமசேகர், எஸ்.கே.அருணி, கே.ஆர்.நரசிம்மன் உள்ளிட்டோர் வழிகாட்டினர்.
அப்போதுதான் "பி.எல்.ரைஸ்' என்ற ஆங்கிலேய வரலாற்று அறிஞர் 1894 முதல் 1905ஆம் ஆண்டுவரை கல்வெட்டுகளை ஆராய்ந்து "எபிகிராஃபியா கர்நாடகா'(கர்நாடக கல்வெட்டுகள்) என்ற பெயரில் 10 தொகுப்புகளாக ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது தெரியவந்தது.
கர்நாடக தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநராக இருந்த ஆர்.கோபால் வழிகாட்டு தலின்பேரில், பேராசிரியர் கே.ஆர்.நரசிம்மனுடன் இணைந்து கல்வெட்டுகளைக் கண்டுபிடிப்பது, மீட்டெடுப்பது, பாதுகாப்பது போன்ற பணிகளில் ஈடுபட தொடங்கினேன்.
எலஹங்காவில் 30 கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தோம். அவற்றில் 9 கல்வெட்டுகள் பி.எல்.ரைஸ் தனது நூலில் குறிப்பிடவில்லை. பெங்களூரில் தமிழ், கன்னடம், தெலுங்கு கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. இதுவரை 140 கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து, ஆவணப்படுத்தியுள்ளோம்.
தற்போது பணி ஓய்வுபெற்றுவிட்டதால், புதிய கல்வெட்டுகளைத் தேடுவதே முழு நேரப் பணியாகும்.
மைசூரு திவானாகப் பணியாற்றியவரும், நவீன கர்நாடகத்தைக் கட்டமைக்க முக்கிய பங்காற்றியவருமான சர்.மிர்ஜா இஸ்மாயில் கல்லறையை சூளை சதுக்கத்தில் புனித ஜான் சந்தையின் பின்புறத்தில் உள்ள மசூதி வளாகத்தில் உள்ளதை கண்டுபிடித்து, சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்தேன்.
இதேபோல், சர்.சி.வி.ராமன், நடிகர்கள் டைகர் பிரபாகர், ஃபெரோஸ்கான், தோட்டக்கலை நிபுணர் கிரீம்கல், சமூக ஆர்வலர் சஜ்ஜன்ராவ், நடிகை
கல்பனா, படத் தயாரிப்பாளர் சுப்பையா நாயுடு, இரண்டாம் கெம்பே கெளடா உள்ளிட்ட 20 பேரின் கல்லறைகளைக் கண்டுபிடித்து, பராமரிப்பின்றி இருந்த கல்லறைகளைச் சீரமைக்க உதவியாக இருந்துள்ளேன்.
"பெங்களூரு வரலாறு' எனும் நூலை எழுதியிருக்கிறேன். அடுத்ததாக கெம்பேகெளடா குறித்தும் தகவல்களை திரட்டி நூல் வெளியிட இருக்கிறேன்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிராமமாக இருந்த பெங்களூரின் முழு வரலாற்றை ஆராய்ந்து வருகிறேன். பேகூர் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 890ஆம் ஆண்டுக்கான கல்வெட்டே பழமையானதாகும்.
சோழர் காலத்தில் பெங்களூருக்கு "எவண்களூர்' என்று பெயர் சூட்டியிருந்தனர். 1537இல் திட்டமிட்டு விரிவுப்படுத்தியவர் கெம்பே கெளடா. ஆனால் பெங்களூரை இவர்தான் நிறுவினார் என்று பலரும் கூறுகின்றனர். இது சரியல்ல.
தொட்டநெக்குந்தி (1304), விபூதிபுரம் (1307), சதரமங்களா (1346), பேளூர் (1350), அல்லாலசந்திரா (1544) உள்ளிட்ட பெரும்பாலான இடங்களிலும், பெங்களூரு, மைசூரு, கோலார், மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரை ராஜராஜசோழன் கைப்பற்றிய பிறகு, 1004ஆம் ஆண்டுக்கு பிந்தைய தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சோழர்கள் விலகியபிறகு, ஹொய்சாளர்கள், விஜயநகர பேரரசு காலத்திலும் தமிழ்க் கல்வெட்டுகள் எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
பெங்களூருமைசூரு இடையே தென்மேற்கு பகுதியில் உள்ள தென்பெண்ணையாறு ஆற்றுப்படுகையிலும், ஹொஸ்கோடே, நெலமங்களா பகுதிகளிலும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகள், கல்லறைகளைப் பாதுகாக்க வரலாற்று அகாதெமியையும் தொடங்க ஆர்வமாக இருக்கிறேன்'' என்கிறார் தனபால்.
கன்னடப் பேராசிரியர் கே.ஆர்.நரசிம்மன்:
கோலார் மாவட்டத்தின் முல்பாகல் அருகேயுள்ள குருடுமலையே எனது சொந்த ஊர். 35 ஆண்டுகள் கன்னடப் பேராசிரியராகப் பணியாற்றி, உயர்கல்வித் துறை இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். அப்போது, கன்னடம், தமிழ்க் கல்வெட்டுகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. தமிழும் கற்றேன்.
தொம்ளூரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயில், அல்சூர் சோமேஸ்வரா கோயில், கெங்கேரி ஈஸ்வரா கோயில், கொந்தரஹள்ளி தர்மேஸ்வராகோயில், ஹுஸ்கூர் மத்தூரம்மா கோயில், பழைய மடிவாளா சோமேஸ்வரா கோயில், நாகரத்பேட் காளிகாம்பா காமதீஸ்வரா கோயில், மாரத்தஹள்ளி சோமேஸ்வாரா கோயில், பேகூர் பஞ்சலிங்கேஸ்வரா கோயில், நந்திமலை போகிநந்தீஸ்வரா கோயில், கோலார் கோலாரம்மா கோயில் போன்றவை இன்றைக்கும் சோழர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன.
சோழர்களின் தமிழ்க் கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். நூல்களையும் தொகுத்திருக்கிறேன். கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன்.
தொடர்ச்சியாக, வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லவும், ஆர்வத்தைத் தூண்டவும் கடந்த மார்ச் மாதத்தில் முதல்முறையாக பெங்களூரில் தமிழ்க் கல்வெட்டுச் சுற்றுலாவை நடத்தினோம். ஜூலை28இல் இரண்டாவது முறையாக பெங்களூரில் தமிழ்க் கல்வெட்டுச் சுற்றுலாவை நடத்தினோம். இதுபோன்று தொடர்ந்து நடத்தப்படும்'' என்கிறார் நரசிம்மன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.