முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விடாமுயற்சியே வெற்றி...!

தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பத்தில் மட்டும் தேசியப் போட்டிகளில் ஐந்து முறை தங்கப் பதக்கத்தை வென்றவர் காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் ச.சதீஷ்குமார்.

Updated On : 7 டிசம்பர், 2024 at 6:30 PM
பகிர்:

தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பத்தில் மட்டும் தேசியப் போட்டிகளில் ஐந்து முறை தங்கப் பதக்கத்தை வென்றவர் காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் ச.சதீஷ்குமார். 'விடாமுயற்சியே வெற்றிக்கு காரணம்'' என்கிறார் அவர்.

அவருடன் ஒரு சந்திப்பு.

'என் தந்தை சிறு வயதிலேயே காலமாகிவிட்டதால், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் என் மாமா குமரனால் வளர்க்கப்பட்டேன். என்னைப் படிக்க வைத்து, பல தற்காப்புக் கலைகளைக் கற்றுகொள்ளவும் காரணமாக இருந்தார்.

18 ஆண்டுகள் சிலம்பக் கலைஞராக இருந்து வருகிறேன். இடைவிடாது தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி இருமுறை தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்று, சிலம்பத்தில் மட்டும் ஐந்து முறை தங்கப் பதக்கமும் வென்றேன். மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளிலும் நடுவராக இருப்பதற்கான பயிற்சியையும் நிறைவு செய்திருக்கிறேன்.

"சிறந்த சிலம்பாட்டக் கலைஞர்' என்று கலைப் பண்பாட்டுத் துறையால், "கலைவளர்மணி' விருதை காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் அண்மையில் தொடங்கப்பட்ட சிலம்பக்கலை பட்டப்படிப்பையும், திருப்பதி அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலும் சட்டப்படிப்பையும் பயின்றுவருகிறேன்.

ஒரு நிமிடம் கூட நிற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சிலம்பம் சுழற்றுவேன், கராத்தே ,ஜூடோ, குரோஷ் போன்றவற்றிலும் பயிற்சி பெற்று அவற்றிலும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். இதுவரை மொத்தம் பல்வேறு போட்டிகளில் பல்வேறு கலைகளையும் சேர்த்து மொத்தம் 28 தங்கப்பதக்கங்கள் வாங்கியிருக்கிறேன். இதற்கு எனது விடா முயற்சியும் தன்னம்பிக்கையுமே காரணங்கள். விடாமுயற்சியே வெற்றிக்கு காரணம்.

சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடை அரசு வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இந்த சலுகை மூலம் காவல்துறையில் அதிகாரியாக பணியில் சேர்ந்து என்னால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்ய வேண்டும் என்பதே எனது ஆவல்.

கம்பை கைகளால் பிடித்து நம்மை சுற்றி சுழட்டும்போது நம் உடலை சுற்றி ஒரு வேலி போன்று உருவாக்கிவிட முடியும். இந்த வேலிக்குள் வேறு எந்த ஆயுதங்களைக் கொண்டு, தாக்க முற்பட்டாலும் அதை கம்பால் தடுத்து விடும் அளவுக்கு ஒரு சிறந்த வீர விளையாட்டு சிலம்பம்.

கம்பெடுத்து சுழற்றும்போது உடலில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும்,தசைகளும் இயக்கப்பட்டு உடலுக்கு வலிமை தரக்கூடிய ஒரு சிறந்த உடற்பயிற்சியே சிலம்பக்கலை. கால் அசைவுகளாலும்,உடல் அசைவுகளாலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் மிகச்சிறந்த தற்காப்புக்கலைகளில் ஒன்றே சிலம்பாட்டம். இந்தக் கலையை நம் அனைவரும் கற்பது அவசியம்.

பள்ளியில் தேசிய மாணவர் படை,சாரணர் இயக்கம் போன்றவற்றிலும் இணைந்து சமூகப்பணி செய்ததால் மேலும் மக்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் விதையாகி வளர்ந்து கொண்டிருக்கிறது'' என்கிறார் சதீஷ்குமார். குமரன் கூறுகையில், 'சதீஷ்குமாரின் தந்தை என்னை வளர்த்து படிக்க வைத்தார்.அவருக்கு செய்யும் நன்றிக்கடனாக நான் சதீஷ்குமாரை படிக்க வைத்து,பல தற்காப்புக் கலைகளையும் கற்க காரணமாக இருக்கிறேன்'' என்கிறார் குமரன்.

முழு கட்டுரையைப் படிக்க →