முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பயணம் தொடரும்...

அண்மையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஏழாவது இறகுப்பந்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், ஒற்றையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளின் சாம்பியன் பட்டத்தை கேரளத்தைச் சேர்ந்த அல்பியா ஜேம்ஸ் வென்றுள்ளார்.

Updated On : 26 ஏப்ரல் 2026, 4:21 am IST
பகிர்:

ஹைதராபாத் கோபிசந்த் இறகுப் பந்து அகாதெமியில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஏழாவது இறகுப்பந்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், ஒற்றையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளின் சாம்பியன் பட்டத்தை கேரளத்தைச் சேர்ந்த அல்பியா ஜேம்ஸ் வென்றுள்ளார்.

'போட்டிகளில் வெற்றி பெறுவது மகிழ்ச்சியான விஷயம்தான். எனது பயிற்சியாளர் ஆதித்யா சிங்கின் பயிற்சியும், மற்றவர்களின் ஆதரவும் என்னைத் தொடர்ந்து முன்னேறச் செய்கிறது. தற்போது மணிக்கட்டு சிகிச்சைக்கான நேரம் வந்துவிட்டது. எனது முழுத் திறனையும் மீட்டெடுக்கும் பொருட்டு, அறுவைச் சிகிச்சையை கையில் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் சிறிய இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பயணம் தொடரும்...' ” என்கிறார் அல்பியா ஜேம்ஸ்.

இந்தச் சாதனை குறித்து அவர் மேலும் கூறியது:

Advertisement

Advertisement

'எனக்கு தந்தை இல்லை. தாயும் தம்பியும் மட்டுமே. தொடுபுழா அருகே உள்ள முட்டம் சாந்தல் ஜோதி பொதுப் பள்ளியில் படித்தேன். கனவுகள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கும் பதினேழாம் வயது. தாய் படும் கஷ்டங்களைப் பார்த்து அவருக்கு உதவ வேலையில் சேரவேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. முதல் தர கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்தேன்.

விதியின் திட்டம் வேறாகயிருந்தது. பள்ளி விடுதியின் நான்காம் மாடியில் இருந்து வழுக்கி விழுந்து அடிபட்டதில், மார்புக்குக் கீழ் பக்கவாதம் ஏற்பட்டது. வாழ்க்கை முழுவதும், சக்கர நாற்காலியிலும் படுக்கையிலும் இருக்க வேண்டியதாகிவிட்டது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவுடன், பல லட்சம் ரூபாய் கடன் பயமுறுத்தியது.

கொச்சியில் ஜெயின் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தேன். அப்போது உடல் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். பளுதூக்குதலில் ஈர்ப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் பாரா-பவர்லிஃப்டிங்கில் கவனம் செலுத்திய நான், தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்று, எனக்குள் நம்பிக்கைத் தீயை மூட்டிக் கொண்டேன். போட்டிகளில் மாநில அளவில் தங்கப் பதக்கத்தையும், தேசிய அளவில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றேன்.

தனிநபர் விளையாட்டைக் கற்க முடிவு செய்து, பேட்மிண்டனைத் தேர்ந்தெடுத்தேன். பட்டப்படிப்பை முடித்ததும், துபை நிறுவனமான 'எலைட் குரூப்' எனக்கு நிதி, அலுவலக வேலையையும் அளித்தது. நான் கேரளத்திலிருந்து துபைக்கு மாறினேன். அதிர்ஷ்டவசமாக என் வாழ்க்கை முழுவதும் தொடக்க கால சோகத்துக்குப் பின்னர், வெற்றிகளின் ஊர்வலமாக அமைந்தது. முதல் போட்டியிலேயே இரட்டைத் தங்கப் பதக்கம் வென்று, இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்தேன்.

2025 உலகத் தரவரிசையில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும், 2026 எகிப்து பாரா பேட்மிண்டன் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றேன். 7-வது பாரா பேட்மிண்டன் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர், கலப்பு இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றேன்.

போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது நான் நினைத்துப் பார்க்காததாகும். இன்று தொழில்முறை பாரா பேட்மிண்டன் வீராங்கனையாகவும், தேசிய சாம்பியனாகவும் இருப்பது பெருமையைத் தருகிறது. விமானத்திலிருந்து குதித்து சாதனை விளையாட்டை முடித்துள்ளேன். கடலில் வாட்டர் ஸ்கூட்டர் ஓட்டுவேன். இன்னும் பல சாதனை சவால் விளையாட்டுகளை மாற்றுத் திறனாளியாலும் விளையாட முடியும் என்பதை நிரூபிக்கப் போகிறேன்' என்கிறார் அல்பியா ஜேம்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.