ஞாயிறு கொண்டாட்டம்

டோக்கன் எடு; சாப்பிடு..!

தானத்தில் சிறந்தது அன்னதானம். அதிலும், வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக் கூடாது என்பார்கள்.

ஏ. பேட்ரிக்

தானத்தில் சிறந்தது அன்னதானம். அதிலும், வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக் கூடாது என்பார்கள். அவ்வாறே தங்களுக்கு உதவியர் யார் என்பதை தெரியாமலேயே பலரும் பயனடைந்து வருகின்றனர்.

"மகிழ்வித்து மகிழ்' என்ற சித்தாந்தத்தின்படி, உதவி செய்பவர்களுக்கும், பயனடைவோருக்கும் இடையே பாலமாக இருந்து வருகிறார் "காப்பி 2.0' நிறுவனத்தின் நிறுவனர் பி.சத்யன். இத்தகைய திட்டம் வெளிநாடுகளில் பரவலாகக் காணப்பட்டாலும், கோவைக்கு இது புதிது.

அவரிடம் பேசியபோது:

'நான் உணவக மேலாண்மையில் பட்டப் படிப்பு முடித்துள்ளேன். அதனால், உணவின் அருமை எனக்கு நன்றாகத் தெரியும். பொது முடக்கக் காலத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், உணவுக்கு வழியில்லாமலும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்ட நேரத்தில், தேவையானவர்களுக்கு உதவும் வகையில் உணவளிக்கும் திட்டத்தைத் தொடங்கினேன். அது இப்போதும் தொடர்கிறது.

எனது நிறுவனத்தின் மூலம் கோவையில் மட்டும் 35 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காபிக்காகவோ, சிற்றுண்டிக்காகவோ வருபவர்களிடம் இருந்து வசதியற்றவர்கள், வயதானவர்கள் தங்களுக்காக எதையாவது கேட்டுப் பெறுவர். இது வாடிக்கையாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் தர்மச் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதைத் தவிர்க்கும் வகையில், உணவகத்துக்கு வருபவர்கள் தாங்கள் எவருக்கேனும் ஏதாவது கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதை டோக்கனாக வழங்கி விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். அந்த டோக்கன்கள் உணவகத்தில் உள்ள ஒரு அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும்.

அப்போது அங்கு வரும் முதியவர்கள், வசதியற்றவர்கள் தாங்கள் யாரிடமும் நேரடியாக எதையும் கேட்காமல் அந்த அறிவிப்புப் பலகையில் உள்ள டோக்கனை எடுத்துகொண்டு உணவைப் பெறலாம்.

இது வாடிக்கையாளர்களுக்கும் மன நிறைவைத் தருகிறது. வசதியற்றவர்களும் பயனடைகின்றனர். இவர்களுக்கு இடையே பாலமாக எனது நிறுவனம் செயல்படுவதால், இலவசமாக வழங்கப்படும் டோக்கன்களுக்கு உணவின் விலையில் குறிப்பிட்ட அளவுக்கு கட்டணச் சலுகையையும் வழங்கி வருகிறோம். இதன் மூலம் பெறுபவர் யாரென்றும் தெரியாது. கொடுப்பவர் யாரென்றும் தெரியாது. இருதரப்பினருக்குமே மன நிறைவைத் தரும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

வீட்டுக்கு அழைத்து உணவு கொடுத்தால் அது விருந்து. கேட்ட பின்னர் கொடுத்தால் அது பிச்சை. இருக்கும் இடம் தேடிச் சென்று கொடுத்தால் அது தர்மம். யாரெனத் தெரியாமல் கொடுத்தால் அது தானம். அதனால், இந்தத் திட்டத்தை ஆறு மாதங்களாக செயல்படுத்தி வருகிறோம்.

கோவையில் வடவள்ளி பகுதி கிளையில் தொடங்கப்பட்ட இத்திட்டம் விரைவில் எங்கள் நிறுவனத்தின் இதர கிளைகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது'' என்கிறார் சத்யன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT