ஜர்கான்..!
சென்னையை அடுத்த செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இருபத்து ஐந்து பேர் ஒன்றுசேர்ந்து, இரு சக்கர மின் வாகனத்தை (இ. பைக்) உருவாக்கி, சாதனையைப் படைத்துள்ளனர்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இருபத்து ஐந்து பேர் ஒன்றுசேர்ந்து, இரு சக்கர மின் வாகனத்தை (இ. பைக்) உருவாக்கி, சாதனையைப் படைத்துள்ளனர். இந்த வாகனத்துக்கு விலைமதிப்பில்லாத வைரமான 'ஜர்கான்' என்றும் அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
'மின்சக்தி மூலம் இயங்கும் இ-பைக் உருவாக்கும் எண்ணம் எப்படி தோன்றியது?' என்பது குறித்து, குழுவுக்குத் தலைமை வகித்த மின், மின்னணுவியல் துறை மாணவி பி.செல்வியிடம் பேசியபோது:
'எங்கள் கல்லூரியில் இயந்திரவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை உருவாக்கியிருந்தனர். அவற்றைப் பார்த்த எங்களுக்கு, 'நம்மால் ஏன் மின் வாகனத்தை செய்ய முடியாது?' என்ற எண்ணம் தோன்றியது.
எங்கள் துறையின் மூன்றாவது, நான்காம் ஆண்டுகளில் பயிலும் 25 பேர் ஒருங்கிணைந்துச் செயல்பட்டு, இருசக்கர மின் வாகனம் உருவாக்க முடிவு செய்தோம். துறைத் தலைவர் ஜெயராமா பிரதீப், பேராசிரியர் இளந்திரையன், மூத்த மாணவர்கள், வடிவமைப்புப் பணிக்கு இயந்திரவியல் துறை ஆய்வக உதவியாளர்கள் என பலரும் உதவி செய்தனர்.
எப்படி வடிவமைப்பது?, என்னென்ன உதிரி பாகங்கள் எங்கு வாங்குவது?, வாங்கும் பொருள்கள் சரியாக பொருந்துமா? என்று ஆய்வு செய்து முடிவு செய்வதற்கு இரு மாதங்கள் ஆகிவிட்டன. இவற்றை பொருத்தி முழுமையான இ-பைக் செய்து முடித்து சோதனை ஓட்டத்தை நிறைவு செய்ய நான்கு மாதங்களாகின.
இந்த வாகனம் உருவாக்க ரூ.1.35 லட்சம் செலவானது. முழுத் தொகையையும் கல்லூரித் தலைவர் பாபு மனோகரனே ஏற்றுக்கொண்டார். தற்போது உருவாகியுள்ள வாகனத்தை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தி, உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த வாகனத்தில் புதியதாகச் செயலியை உருவாக்கி, அதன் மூலம் வாகனத்தின் முழு தகவல்களையும் கைப்பேசி மூலமாக வாகன உபயோகிப்பாளர்கள் அறிய வசதியை ஏற்படுத்த உள்ளோம். வாகனத்தை உரிமையாளர் அனுமதி இல்லாமல் ஓட்ட முடியாது.
இதுபோன்று புதிதாக வசதிகளை வாகனத்தில் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்' என்கிறார் செல்வி.