சர்வதேச அளவில் 'விக்' ஏற்றுமதிக்கான மொத்த மதிப்பு 1,325 கோடி ரூபாய்க்கு நடைபெறுகிறது. இதில், இந்திய விக் ஏற்றுமதி 1,160 கோடி ரூபாய். இதன்படி, உலக மக்களின் தலையைக் காக்கும் இந்திய 'விக் சந்தை.
இந்தியாவில் இருந்து விக், அதுதொடர்புடைய பொருள்களைக் கிட்டத்தட்ட 120 நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன. இதில், ஆன்லைன் வணிக கொள்முதல் ஆண்டுக்கு 20 % அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இத்துறையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
உலகம் முழுதும் சுமார் 200 கோடி பேர், முடி உதிர்தல் பிரச்னையைச் சந்தித்து வருகின்றனர். உலகின் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் தொகையில் இது 25 %. அதாவது, உலகின் நான்கில் ஒருவரின் கவலையாக முடி உதிர்தல் மற்றும் வழுக்கை பிரச்னை உள்ளது. இவர்களில் ஏறக்குறைய பாதி பேர் 25 வயதுக்கு உள்பட்டவர்கள் என்ற புள்ளிவிவரம் ஆச்சரியமானது.
ஒழுங்கற்ற தூக்கம், குறைவான நேரம் தூங்குதல் ஆகியன முடி உதிர்தலில் 30% பங்கும், குடல், ஜீரணக் கோளாறு 30 % முக்கிய பங்கு வகிக்கின்றன.
சீரற்ற உடல் எடை உள்ளிட்ட வாழ்க்கை முறை பிரச்னைகள், முடி உதிர்தலில் 13 % இடம் வகிக்கின்றன. முடி உதிர்தல் பிரச்னையைச் சந்திக்கும் 60 % இளைய தலைமுறையினருக்கு மரபணு வழி காரணமாகிறது. தலைமுடி விதைத்தல், மருந்து சிகிச்சைகளால் பக்கவிளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், விக் வைத்துக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தடிமன், கருமை நிறம், அலை அலையான வடிவம், மிருதுவான தன்மை ஆகியன, உலக நாடுகளில் இந்திய விக் மற்றும் தொடர்புடைய பொருட்கள் வரவேற்பு பெறக் காரணமாக உள்ளன. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் தலைமுடியைவிட, இந்தியர்களின் தலைமுடியில் தயாரான பொருட்களையே அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் விரும்புகின்றனர்.
எளிதாகத் தேவைப்படும் நேரத்தில் கிடைப்பது, மற்ற நாட்டினரின் விக் விலையைவிட குறைவாக இருப்பது ஆகியவையும் இந்திய விக் பெற்றுள்ள அதிக வரவேற்புக்கு காரணமாக இருக்கிறது.
ஒரு கிலோ முடிக்கு 33 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் நிலையில், ஒரு விக் 85 ஆயிரம் ரூபாய் முதல் 2.50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. உலக அளவில் ':விக்' சந்தை மதிப்பு ரூ.33,600 கோடியாகும். ஆண்டுக்கு விக் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 7.90% ஆகும். உலக விக் சந்தையில் இந்தியாவின் பங்கு 88% ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.