Picasa
ஞாயிறு கொண்டாட்டம்

இலக்கியம் பேசும் கட்டடத் தொழிலாளி...

பிஸ்மி பரிணாமன்

இருபது ஆண்டுகளாக, கட்டடப் பணியை மேற்கொண்டு வரும் முகம்மது பைசல் நேரம் கிடைக்கும்போது கவிதை, சிறுகதை, நாவல்களை எழுதுவதுடன் குறும்படங்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில் மணலியைச் சேர்ந்த நாற்பத்து நான்கு வயதாகும் இவர் சிறந்த இலக்கியவாதியாகவும் உயர்ந்துள்ளார். அவருடன் பேசியபோது:

''எனது தந்தை கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர்.

கூலித் தொழிலில் கிடைக்கும் வருமானம் சாப்பாட்டு செலவுக்கே போதாது. அதனால் வறுமைதான். பிளஸ் 2 முடித்ததும் , கட்டட வேலைக்குச் சென்றேன். இருபது ஆண்டுகள் அனுபவத்தில் கட்டட ஒப்பந்ததாரராக மாறியுள்ளேன். கட்டட வேலைகளை மேற்பார்வை செய்தாலும், கொத்தனார் வேலையை தேவை ஏற்படும்போது செய்வேன்.

கட்டட வேலை காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை நடக்கும். கிடைக்கும் நேரத்தில் நூல்களை வாசிப்பேன். கட்டட வேலைகள் செய்யும்போதே மனதுக்குள் வந்து செல்லும் கருத்துகள் மறந்து போகாமல் இருக்க உடனே குறித்துக் கொள்வேன்.

படிக்கும்போதே வாசிப்பு பழக்கம் உண்டு. பத்திரிகைகளில் வெளியாகும் கவிதைகள், சிறுகதைகளை வாசிப்பேன். வயதுக்கு ஏற்றமாதிரி காமிக்ஸ் கதைகளையும் விரும்பி வாசித்தேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, நூலகத்துக்குச் சென்று பிரபல கதாசிரியர்களின் சிறுகதைகள், நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன். தமிழ் மொழிபெயர்ப்புகளையும் நான் வாசிக்கத் தொடங்கினேன். மாக்சிம் கார்க்கி, காண்டேகர், சரத் சந்திரர், வைக்கம் முகமது பஷீர், தகழி, எம்.டி.வாசுதேவன் நாயர், கல்கி, அகிலன், ஜெயகாந்தன் போன்றோருடைய எழுத்துகள் மிகவும் பிடிக்கும்.

தொடக்கத்தில் புதுக் கவிதைகளை எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் தந்த உற்சாகம் மேலும் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 'ராவணன் மீசை', 'வாப்பாவின் மூச்சு', 'பூமியின் அகதி' என்ற நூல்களை எழுதினேன். 'எம் எம். பைசல்' என்ற பெயரில் எழுதுகிறேன்.

பதினைந்து நிமிடங்கள் வரை ஓடும் எட்டு குறும்படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளேன். 'ஆழத் தாக்கம்' என்ற குறும்படத்துக்கு நெய்வேலி புத்தகக் கண்காட்சி , சென்னை ரோட்டரி சங்கம், திருப்பூர் ஆவணப்பட, குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் விருதுகள் கிடைத்துள்ளன.

குறைந்த செலவில் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.எங்கள் பகுதியில் இயங்கும் கலை, இலக்கிய பெருமன்றத்தின் வாரந்திரக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு வருகிறேன்'' என்கிறார் பைசல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயத் தொழிலாளா் சங்கம் மனு கொடுக்கும் போரட்டம்

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திருச்சியில் 14 ஆசிரியா்கள் தோ்வு

சிதம்பரத்தில் டிஎஸ்பி, ஆய்வாளா் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம்

டெல்டா மாவட்டங்களின் 41 தொகுதி திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT