கிஷோர்குமாரின் வாழ்க்கையில் ஆமீர்கான்!
பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தற்போது 'சிதாரே ஜமீன் பர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, அடுத்து 6 படங்கள் அவரது பரிசீலனையில் இருக்கின்றன. அதில் பாடகர் கிஷோர்குமாரின் வாழ்க்கை வரலாற்றுப் படமும் ஒன்றாகும்.
வழக்குரைஞர் உஜ்வல் நிகம் வாழ்க்கை வரலாற்றுப் படம், கஜினி 2, லோகேஷ் கனகராஜ், சோயா அக்தர் ஆகியோர் இயக்கும் படங்கள் இதில் அடங்கும். இதில் முதல் கட்டமாக மூன்று படங்களில் நடிக்க ஆமீர்கான் முடிவு செய்துள்ளார். கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் அனுராக் பாசு இயக்குகிறார். அப்படத்தை பூசன் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தில் கிஷோர் குமார் கதாபாத்திரத்தில் நடிகர் ஆமீர்கான் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இரு தரப்பிலும் நான்கு முறை சந்தித்துப் பேசிவிட்டனர். இப்பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.
கிஷோர்குமாரின் தீவிர ரசிகராகக் கருதப்படும் ஆமீர்கான் அவரது வாழ்க்கையைப் படமாக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். கரோனா காலத்திலும் நடிகர் ஆமீர்கான் மற்றும் ரன்பீர் கபூரை வைத்து ஒரு படம் எடுக்க அனுராக் பாசு முயன்றார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.
கிஷோர் குமாரின் சுயசரிதை படத்தில் ரன்பீர் கபூர் நடிப்பதாக இருந்தது. அதுவும் கைகூடவில்லை. ஆமீர்கான் படங்களில் நடிப்பது மட்டுமல்லாது லாகூர் 1947 என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். சிறந்த பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருந்தார் கிஷோர்குமார். பெங்காலி, மராத்தி, ஹிந்தி, குஜராத்தி, கன்னடம், போஜ்புரி, மலையாளம், ஒடிசா, உருது மொழிகளில் பாடி இருக்கிறார்.
இறுதி மூச்சு வரை நடிப்பேன் - ஷாருக்கான் விருப்பம்!
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு நடித்த மூன்று படங்களும் தலா ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளன. தற்போது தனது மகள் சுஹானா கான் நடிக்கும் 'கிங்' என்ற படத்தில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். அப்படத்தை ஷாருக்கான் நிறுவனமே தயாரிக்கிறது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடந்த திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு அவரிடம், எப்போதும் நடித்துக்கொண்டிருப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ''ஆமாம்.. சாகும் நாள் வரை நடிக்க வேண்டும். யாராவது ஆக்ஷன் சொல்ல வேண்டும்.
நான் சாக வேண்டும். ஆக்ஷன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் எழுந்திருக்கக்கூடாது. இதுதான் எனது வாழ்நாள் கனவு. ஆம் நான் எப்போதும் நடிப்பதை விரும்புகிறேன்.நான் ஒன்றும் தீவிரமான நடிகர் கிடையாது. நடிப்பைப் பற்றிய சில அற்புதமான விஷயங்களை மக்களுக்குக் காட்டினேன். வாழ்க்கையின் சந்தோஷங்களை நடிப்பின் மூலம் கொண்டாடுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, எந்த வகையிலும் என்னால் மகிழ்ச்சியை உருவாக்க முடியும். நான் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன், அன்பைக் கொடுக்கிறேன். கலை, ஓவியம், பாடல், இசை - இவை அனைத்தும் எனக்கு ஒன்றுதான். எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. இரண்டு நிமிடம் உங்களை மகிழ்விக்க முடிந்தால் அது அன்பு. நான் ஒருவரை 50 வருடங்கள் அன்பு செய்ய முடிந்தால் அது ஒரு பொழுதுபோக்கு.
நான் ஒருவரை 30 விநாடிகள் மகிழ்விக்க முடிந்தால், அது படைப்பாற்றல். எனவே ஒரே விஷயத்திற்கு வெவ்வேறு பெயர்களை நான் காண்கிறேன். மேலும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்கிறேன். ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக மக்களை ஒரே உணர்வுடன் மகிழ்விக்கச் செய்கிறேன்'' என்று ஷாருக்கான் கூறியுள்ளார்.
ஷாருக்கானோடு முக்கிய வேடத்தில் நடிக்கும் சல்மான்கான்!
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அவரது மகள் சுஹானா கானும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதோடு அமிதாப்பச்சன் பேரனோடு டேட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார்.ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் 'ஸ்டார்டம்' என்ற பெயரில் வெப்சீரியஸ் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். ஆர்யன் கானை ஆரம்பத்தில் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அமெரிக்க திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்துள்ள ஆர்யன் கான் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார்.
இதையடுத்து அவரது தந்தை ஷாருக்கான் தனது சொந்த நிறுவனம் சார்பாக தயாரிக்கும் வெப்சீரியûஸ மகனை கொண்டு இயக்குகிறார். மகனுக்கு மட்டுமல்லாது மகளுக்கும் ஷாருக்கான் உதவுகிறார். மகள் நடிக்கும் படத்திலும் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.ஆர்யன் கான் இயக்கும் வெப்சீரியஸில் ஷாருக்கான் மட்டுமல்லாது சல்மான் கானும் நடிக்கிறார்.
சல்மான் கானும், ஷாருக்கானும் படங்களில் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. விரைவில் இருவரும் சேர்ந்து 'டைகர் அண்ட் பதான்' என்ற படத்தில் நடிக்க இருக்கின்றனர். ஆர்யன் கான் தனது வெப்சீரியஸில் கௌரவ வேடத்தில் நடிக்கும்படி சல்மான் கானிடம் கேட்டுக்கொண்டார்.ஷாருக்கான் குடும்பத்தோடு சல்மான் கானுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததால் ஆர்யன் கான் கோரிக்கையை சல்மான் கானால் நிராகரிக்க முடியவில்லை. ஆர்யன் கான் வெப்சீரியஸில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு நேரம் ஒதுக்கி கொடுத்து நடித்துக்கொடுத்துள்ளார்.
ஸ்டார்டம் மொத்தம் 6 எபிசோட்களாக எடுக்கப்படுகிறது. அதில் கரண் ஜோகர், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், பாபி தியோல் ஆகியோரும் கௌரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர். இதில் ஷாருக்கானும், சல்மான் கானும் ஒரே நேரத்தில் இணைந்து நடிக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் தனித்தனி எபிசோட்களில் நடிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.