தாகம் தீர்த்த தமிழர் 
ஞாயிறு கொண்டாட்டம்

பெங்களூரின் தாகம் தீர்த்த தமிழர்!

'சில்'லென உடலை சிலிர்க்க வைக்கும் குளுமையான தட்பவெப்பம் நிலவும் பெங்களூரில், கடந்த கோடைக்காலத்தில் வரலாறு காணாத குடிநீர் பிரச்னை ஏற்பட்டது.

ந.முத்துமணி

'சில்'லென உடலை சிலிர்க்க வைக்கும் குளுமையான தட்பவெப்பம் நிலவும் பெங்களூரில், கடந்த கோடைக்காலத்தில் வரலாறு காணாத குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. போதுமான மழை பெய்யாததால், நீர்நிலைகள், நிலத்தடி நீர் வறண்டது. அப்போது 1.4 கோடி மக்கள் வாழும் பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத் தலைவராக தமிழ் ஐஏஎஸ் அலுவலர் டாக்டர் வி.ராம்பிரசாத் மனோகர் நியமிக்கப்பட்டார்.

'குடிநீர் பிரச்னை' அரசியலாக மாறியபோது. அந்தப் பிரச்னையை புதுமையான அணுகுமுறையால் கையாண்டு வெற்றி பெற்று மத்திய அரசு, கர்நாடக அரசுகள் மட்டுமன்றி, மக்களின் பாராட்டையும் பெற்ற அவர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கூறியதாவது:

''தமிழ்நாட்டின் ராஜபாளையம் அருகேயுள்ள வடகரை கிராமம் தான் எனது சொந்த ஊர். எனது தந்தை வரதராஜன் தபால் துறையிலும், தாய் சின்னத்தாய் அங்கன்வாடி பள்ளியிலும் கடைநிலை ஊழியர்களாகப் பணியாற்றினர். பள்ளிப்படிப்பை அரசுப் பள்ளியில் முடித்தேன். காலணிகள் அணியாமல்தான் பள்ளிக்கு நடந்து செல்வேன்.

குடும்ப வருமானம் போதுமானதாக இல்லாததால், இரவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பகுதி நேரமாக எனது தாய் வேலை செய்து வந்தார். அவருக்கு நானும் உதவுவேன். இளம்வயதில் மருத்துவராகவே ஆசைப்பட்டேன். பள்ளித் தலைமை ஆசிரியர் நல்லசிவம், ஓவிய ஆசிரியர் குணாளன், நூலகர் ஜோதி உள்ளிட்டோர் எனக்கு ஊக்கம் அளித்து, நூல்களைப் படிக்க ஊக்குவித்தனர். 1997-இல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி அளவில் 2-ஆம் இடம் பிடித்தேன்.

மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கால்நடை மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து படித்தேன்.பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்ற வருகை தந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கித் தருமாறு மனுவை அளித்தார். இதையேற்று உடனடியாக நிதி ஒதுக்க ஆட்சியர் ஆணையிட்டார். இது என் மனதில் புதிய சிந்தனைக்கு வித்திட்டது.

கால்நடை மருத்துவர் படிப்பை வெற்றிக்கரமாக முடித்தேன். அதன்பிறகு, ஐ.ஏ.எஸ். ஆவதற்காக 2003-இல் குடிமையியல் தேர்வை எழுதினேன். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வில் வென்றும் நேர்காணலில் தேர்வாகவில்லை.

எம்.வி.எஸ்.சி. (முதுநிலை கால்நடை மருத்துவர்) படித்தால், படிப்பும் கிடைக்கும், ஊக்கத் தொகையும் கிடைக்கும் என்று கருதி, அகில இந்திய பொதுத்தேர்வு எழுதினேன். அதில், 7ஆவது இடத்தைப் பிடித்து, 2006-இல் முதுநிலைப் படிப்பை முடித்தேன்.

இதனிடையே குடிமையியல் தேர்வில் நேர்காணல் வரை சென்று, ஐ.ஆர்.எஸ். பணியைப் பெற்றேன். அதில், ஆர்வம் இல்லாததால், அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்து, விஞ்ஞானியாக விரும்பினேன்.

ஐ.ஏ.எஸ். கனவு என்னை விடவில்லை. பெங்களூரில் கால்நடை மருத்துவராகப் பணியில் சேர்ந்தேன். தினமும் முந்நூறு ரூபாய் ஊதியம். மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முனைப்பாகச் செயல்பட்டேன். இதற்கு முன்னர், தமிழ் இலக்கியத்தை முக்கிய பாடமாக வைத்து, ஐ.ஏ.எஸ். தேர்வுகளை எழுதினேன்.

இந்த முறை என் தந்தையின் அறிவுரைப்படி கால்நடை, விலங்கியல் பாடங்களை முக்கிய பாடமாக எடுக்க முடிவு செய்தேன். 2007-இல் தமிழ்நாடு அரசின் கால்நடை மருத்துவப் பணிக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்று, வேலையில் சேர்ந்தேன். 2008-இல் இந்திய வனப் பணி(ஐ.எஃப்.எஸ்.) தேர்வு எழுதி, தேசிய அளவில் 3-ஆம் இடம்பிடித்தேன். ஐ.ஆர்.எஸ். பணி ஒதுக்கப்பட்டிருந்ததால், வருமான வரித் துறையில் பணியாற்ற அழைப்பு வந்தது.

மூன்றாவது முறையாக, 2008-இல் மத்திய குடிமையியல் தேர்வை எழுதினேன். அதில், ஐ.பி.எஸ். அதிகாரியாக பணி வழங்கப்பட்டது. நான்காவது முறையாக, குடிமையியல் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.

'குடிமையியல் தேர்வில் ஒதுக்கப்பட்ட பணியே ஏற்க வேண்டும். மீண்டும் குடிமையியல் தேர்வு எழுத முடியாது' என்று மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. இதனிடையே, என்னைப் போன்று மறுத்தேர்வு எழுத முடியாத 120 பேரை ஒன்றுதிரட்டி அப்போதைய பிரதமரின் உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தேன்.

'ஒருபக்கம் ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். பணிகளில் சேராமல் இருக்கிறேன். ஐ.பி.எஸ். பணியையும் நிராகரிப்பது சரியல்ல' என்று கருதி, கால்நடை மருத்துவர் பணியை ராஜிநாமா செய்துவிட்டு, ஐ.பி.எஸ். பயிற்சிக்காக மசூரிக்குச் செல்ல புறப்பட்டேன்.

அப்போது, மீண்டும் குடிமையியல் தேர்வு எழுத அனுமதியை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், முதன்மைத் தேர்வுக்கு 15 நாள்கள் மட்டுமே இருந்தன. சென்னையில் எனது நண்பர் ரவியின் வீட்டில் தங்கி தேர்வுக்குத் தயாரானேன். ஒருவழியாக முதன்மைத் தேர்வை எழுதிவிட்டு, ஊர் திரும்பினேன். அங்கு விபத்து ஏற்பட்டு, கால்முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர், ஐ.பி.எஸ். பணியில் சேர முடிவுசெய்து, ஹைதராபாத்தில் இந்திய காவல் பணி பயிற்சியில் சேர்ந்தேன். அந்த மைய இயக்குநராக இருந்த விஜய்குமாரை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டேன்.

ஐந்து மாதம் பயிற்சியை முடித்திருந்தபோது, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது. விஜய்குமார் யோசனையின்படி, 2010-இல் நேர்காணலில் கலந்துகொண்டேன்.

நேர்காணலில்,'ஐ.பி.எஸ். பணியை விட்டுவிட்டு, ஏன் ஐ.ஏ.எஸ். ஆக விரும்புகிறீர்கள்' என்று கேட்டனர். 'ஐ.பி.எஸ். பணி ஒருதுறை சார்ந்தது. ஆனால், ஐ.ஏ.எஸ். பலதுறைகள் சார்ந்தது என்பதால், பரந்துபட்டு செயல்பட முடியும்' என்று பதிலளித்தேன். மீண்டும் காவல் பணி பயிற்சியில் சேர்ந்தேன். அப்போது, சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு அழைத்துசென்று, நக்சல்களை எதிர்கொள்வதற்காக 'வனப் போர் நுட்பப் பயிற்சி'யை 10 நாள்களுக்கு அளித்தனர். அங்கு கைப்பேசி வசதி இல்லாததால், எந்தத் தகவலும் தெரியவில்லை.

பயிற்சி முடிந்ததால் கர்நாடகத்தின் சாமராஜ் நகர் வழியாக வனப் பகுதியில் இருந்து வெளியே வந்தோம். அப்போது தேசிய அளவில் 97-ஆவது இடம் பிடித்து நான் ஐ.ஏ.எஸ். அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டது தெரிய வந்தது. இலக்கை அடைந்துவிட்டோம் என்ற மனநிறைவு ஏற்பட்டது. ஐ.ஏ.எஸ். பயிற்சி முடிந்து, 2012-இல் கர்நாடக மாநிலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டேன். பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினேன்.

2023-இல் பெங்களூரு மாநகராட்சி ஆணையராகவும், ஜி20 நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதற்காக கூடுதல் பொறுப்பாக சுற்றுலாத் துறை இயக்குநராகவும் பணியாற்றினேன்.

2024-இல் மார்ச் மாதத்தில் இருந்து பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தலைவராகப் பணியாற்றி வருகிறேன். நான் பொறுப்பேற்றபோது, பெங்களூரில் கடுமையான குடிநீர் பிரச்னை இருந்தது. இதை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. மக்களில் 60 % பேர் காவிரி நீரை சார்ந்திருக்கின்றனர். 40 % பேர் நிலத்தடிநீரை நம்பியிருக்கின்றனர். பெங்களூரில் நிலையான நீர்நிலைகள் எதுவும் இல்லாததால், காவிரி நீரை முறையாக விநியோகிக்கும் வகையில் கவனம் செலுத்தினோம்.

குடிசைப் பகுதிகளில் புதிய தொட்டிகளை அமைத்து குடிநீர் வழங்கினோம். சுத்திகரிக்கப்பட்ட நீரை வறண்ட ஏரிகளில் நிரப்பியபோது, அது நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்தியது. கழிவுநீரை சுத்திகரித்து, தொழிலகங்களுக்கு வழங்கினோம். டேங்கர் லாரிகளில் அதிக விலைக்கு நீர் விற்பதைக் கட்டுப்படுத்தினோம்.

குழாய்களில் ஏரேட்டர்களை பயன்படுத்தி, நீர் பயன்பாட்டை செம்மையாக்க மக்களை கேட்டுக்கொண்டோம். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வறண்ட ஆழ்துளைக் கிணறுகளை சுத்திகரிக்கப்பட்ட நீரால் நிரப்பினோம். இதுபோன்ற நடவடிக்கைகள் குடிநீர் பிரச்னையை சமாளிக்க உதவியது. ஐஏஎஸ் அதிகாரியாக ஏழை, எளிய மக்களுக்கு உதவ முடியும் என்பதே, இந்தப் பணியில் கிடைத்து வரும் மனநிறைவாகும்'' என்கிறார் ராம்பிரசாத் மனோகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT