"மடிப்பாக்கம் காமெடி கிளப்' என்ற நகைச்சுவைச் சங்கத்தை சென்னை புறநகரை மையமாகக் கொண்டு 2018-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார் ராதாகிருஷ்ணன் (எ) "கோவை அனுராதா'. இந்தச் சங்கத்தினர் மாதம்தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கூடி, நகைச்சுவைகள் சொல்லுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, உறுப்பினர்களை சிரிப்புக் கடலில் மூழ்கடிக்கின்றனர்.
அறுபது ஆண்டுகளாக, நகைச்சுவை எழுத்து, மேடை, தொலைக்காட்சி நாடகம், தொலைக்காட்சித் தொடர்.. என சுறுசுறுப்பாக இயங்கிவரும் அவருடன் ஒரு சந்திப்பு:
""நான் கோவையில் 1965-இல் "நண்பர்கள் கலை பண்பாட்டுக் குழு' என்ற அமைப்பு நடத்திய நாடக மேடையில் அறிமுகமானேன். அன்றுமுதல் "நோ
அழுவாச்சி! ஒன்லி காமெடி' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளேன். மக்கள் தங்களது கவலைகளை மறந்து, மகிழ்ச்கி அடைய ஏதோ என்னால் முடிந்தவரை பணியைச் செய்து வருகிறேன்.
1979-இல் சென்னை தொலைக்காட்சியின் மூலமாக என் நகைச்சுவை எழுத்துக்கும், நடிப்புக்கும் அங்கீகாரம் கிடைத்தது. அப்போது செவ்வாய்க்கிழமைகளில் ஒளிப்பரப்பான நாடகங்கள் மக்களை வெகுவாகக் கவந்தன. 1993 வரை நான் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தேன்.
"மேல் மாடி காலி', "காஸ்ட்லி மாப்பிள்ளை, "மாண்புமிகு மாமியார்', "மகாராணி செங்கமலம்', "கிரீன் சிக்னல்' உள்ளிட்டவை நான் எழுதி, நடித்த பிரபல தொலைக்காட்சித் தொடர்கள். இவற்றைத் தவிர. ஏவி.எம். தொலைக்காட்சித் தொடர்கள் பெருமளவில் நடித்துள்ளேன்.
கோபிசெட்டிப்பாளையத்தில் பிறந்த நான், கோவையில் நாடக மேடை அறிமுகத்தால், "கோவை அனுராதா' என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டேன். எனது பிறந்த நட்சத்திரம் அனுஷம். அதனை "அனுராதா' என்றுதான் சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடுவார்கள். எனவே, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்து, கோவையில் மேடை அறிமுகமான இந்தப் பெயர் பொருத்தம்தானே?
2018-இல் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்ற நண்பர், "சென்னையில் பிரபலமான சபாக்கள் இசை விழா, நாடக விழாக்களை நடத்துகின்றனர். புறநகரான மடிப்பாக்கத்தில் நாடக விழா நடத்தலாமா?' என்று கேட்டார். இதற்கு நான், "நாடக விழாவெல்லாம் வேண்டாம். நகைச்சுவை சங்கத்தை ஆரம்பித்து, நிகழ்ச்சிகளை நடத்தலாம்' என்றேன். இவ்வாறு உருவானதுதான் "மடிப்பாக்கம் காமெடி கிளப்'.
மடிப்பாக்கம் சாய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள திறந்தவெளி அரங்கில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ஐந்து மணிக்கு கூட்டம் ஆரம்பித்துவிடும். உறுப்பினர்கள் குடும்பத்தோடு வந்து நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். அரை மணி நேரத்துக்கு ஐந்தாறு பேர் ஆளுக்கு ஐந்து நிமிடம் நகைச்சுவைகளைச் சொல்வார்கள். அதன்பிறகு பட்டிமன்றம், பேச்சரங்கம், பாட்டுக் கச்சேரி, திரை இசை நிகழ்ச்சி, நாடகம், நடனம் என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும்.
காமெடி கிளப் செலவில், "ஸ்நாக்ஸ்' உண்டு. நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உறுப்பினர்களில் இருந்து இரண்டு பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, பரிசுகளும் உண்டு. உறுப்பினர்களுக்கு ஆண்டு சந்தா ஐநூறு ரூபாய்.
உறுப்பினர்களாக இல்லாதவர்கள் வந்தாலும் வரவேற்போம். எங்கள் நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு, உறுப்பினராகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. நாற்பத்தைந்து உறுப்பினர்களோடு ஆரம்பித்த எங்கள் பயணம் சிரித்து, சிரித்து வளர்ந்து தற்போது 130 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை ஆண்டுவிழா கொண்டாடிவிடுவோம். டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, நித்யஸ்ரீ மகாதேவன், சுதா சேஷய்யன் உள்ளிட்ட பிரபலங்களும் எங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
"இறைவன் ஏமாந்தான்' என்று ஒரு நாடகத்தில், எங்கள் பெண் உறுப்பினர்கள், உறுப்பினர்களின் குடும்பப் பெண்கள் மட்டுமே நடித்தார்கள். எங்களுடைய குழந்தைகள் மட்டுமே நடித்த நாடகத்தையும் நடத்தினோம்.
"மாமியார் மருமகள் உறவு', "கைப்பேசி பயன்பாடு', "ஒர்க் ஃப்ரம் ஹோம்' என்று பல சுவாரசியமான தலைப்புகளில் பட்டிமன்றங்களை நடத்தியுள்ளோம்.
"ஒர்க் ஃப்ரம் ஹோம் ஹிம்சையா?, இனிமையா?' என்ற பட்டிமன்றத்தின்போது ஒரு பேச்சாளர், "பஸ் கிடைக்காமல் ஆபீஸூக்கு பத்து நிமிஷம் லேட் ஆகிவிட்டால், அரை நாள் லீவு போடுவார்கள். அப்படி இருக்கும்போது, ஒர்க் ஃப்ரம் ஹோம் எத்தகைய இனிமை!' என்று பேசியபோது அரங்கத்தில் ஒரே கைத்தட்டல்கள்தான்.
கர்நாடக இசை, திரை இசை, நடனம்.. என்று எதுவானாலும் எங்களுடைய உறுப்பினர்களின் குடும்பத்தினர்தான் பங்கேற்பார்கள். ஆனாலும், நிகழ்ச்சியின் தரத்தில் குறை இருக்காது. எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சரி, வாடிக்கையாளர்களின் பொறுமையைச் சோதிக்கக் கூடாது! என்பதுதான் எங்கள் பாலிசி.
ஒருமுறை எங்கள் நாடகம் முடிய அரை மணி நேரம் இருக்கும்போது, மழை தூற ஆரம்பித்துவிட்டது. அதற்குள் பார்வையாளர்கள் தங்கள் நாற்காலிகளை எடுத்துகொண்டு
திறந்தவெளி அரங்கத்தை சுற்றி அமைந்திருந்த பள்ளி வளாகத்தில் உட்கார்ந்து, "நாடகத்தைத் தொடர்ந்து நடத்துங்கள்' என்றபோது அவர்கள் விருப்பப்படியே தொடர்ந்து நடந்து முடிந்தது. இப்படியே உறுப்பினர்களை சிரிக்க வைத்தே காலத்தைக் கடத்த வேண்டும்'' என்கிறார் கோவை அனுராதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.