முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விநாயகனே.. வினை தீர்ப்பவனே..!

'விநாயகனே வினை தீர்ப்பவனே...' எனும் பாடலைக் கேட்டால் மயங்காதவர்கள் யார்? முழு முதல்கடவுள் விநாயகருக்கு மதங்களைக் கடந்து அனைவரும் முதல் வணக்கம் வைப்பது பாரதப் பண்பாடு.

Updated On : 8 செப்டம்பர், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 7 செப்டம்பர், 2024 at 10:34 PM

'விநாயகனே வினை தீர்ப்பவனே...' எனும் பாடலைக் கேட்டால் மயங்காதவர்கள் யார்? முழு முதல்கடவுள் விநாயகருக்கு மதங்களைக் கடந்து அனைவரும் முதல் வணக்கம் வைப்பது பாரதப் பண்பாடு. அத்தகைய விநாயகர் திருவுருவச் சிலைகள் விதவிதமான வகையில் நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் பார்க்கும்போது ஏற்படும் பரவசத்தை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.

அத்தகைய ஆன்மிக உணர்வை தரும் இடமாக உள்ளது புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள பிள்ளையார்குப்பம். இங்கு பிரதான சாலையில் ஸ்ரீ மாதா கைவினைக் கலைக்கூடத்தை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவரும் என்.சக்திவேலிடம் பேசியபோது:

'எனது சொந்த ஊர் புதுச்சேரி அருகேயுள்ள காட்டேரிக்குப்பம். எனது அப்பா நடராஜன் கைவினைப் பொருள் கலைஞர். அப்பாவுக்கு அம்மா லட்சுமியும் உதவுவார். அவர்களது ஐந்து பிள்ளைகளில் நானும் ஒருவன். எட்டாவது வரை படித்து விட்டு, கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தினேன்.

Advertisement

பத்து வயதில் தொடங்கிய மண் சிலைகளை வடிவமைக்கும் பழக்கம் தற்போது ஐம்பது வயதைத் தாண்டியும் ஆர்வம் குறையாமல் உள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு, தீபாவளி, கார்த்திகை தீபம், பொங்கல் பண்டிகைகளுக்கும், கோடைக்கு குடிநீர் பானைகளும் என காலத்துக்கு ஏற்ப எங்களது மண்பாண்ட கைவினைப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. அதனால், ஆண்டு முழுவதும் எங்களால் வேலையில் சுறுசுறுப்பாகவே இயங்கமுடிகிறது. எங்கள் கலைக்கூடத்தில் நாற்பது பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

Updated On : 7 செப்டம்பர், 2024 at 10:34 PM

பொதுவாக, லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை உள்ளிட்ட தெய்வத் திருவுருவங்களை வாங்கவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது அயோத்தி ராமர் திருவுருவச் சிலை அதிகம் வாங்கப்படுகின்றன. 200 வகையான தெய்வ உருவங்கள் வடிவமைக்கப்பட்டாலும், விநாயகர் சதுர்த்திக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தெய்வத் திருவுருவங்களாகச் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மயில் விநாயகர், நந்தி விநாயகர், அனுமன் விநாயகர் என விநாயகருக்கு விதவிதமான வாகனங்களும் வடிமைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பிவைக்கிறோம்.

அரையடி முதல் 15 அடி வரையிலான நூற்றுக்கணக்கான வடிவங்களில் விநாயகர் சிலைகளை வடிமைத்து வெளியூர், வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைக்கிறோம். அவை ஒவ்வொன்றும் தலா ரூ.20 முதல் ரூ.10 ஆயிரம் வரையில் மதிப்பிடப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் களிமண், சாணம் ஆகியவற்றின் கலவையால் அமைந்தவையாகும்.

சாணத்தில் பிள்ளையார் பிடித்தே முன்னோர்கள் வணங்கினர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இயற்கையுடன் இயைந்த அச்சிலைகளை வாங்க பக்தர்கள் போட்டிபோட்டுவருகின்றனர்.

சிலைகளை வாங்கிச் செல்வோர் கலை வடிவமைப்பை பாராட்டும்போது, கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலை மதிப்பே இல்லை.

விநாயகர் சிலைகள் களிமண், சாணம் ஆகியவற்றின் உருவங்கள் நீர்நிலைகளில் கரைக்கும்போது சாணம் மீன்களுக்கு உணவாகின்றன. களிமண் நீரில் கரைந்து தரைக்குச் சென்றுவிடுகின்றன.

களிமண் பிள்ளையாருக்கு அடுத்தபடியாகக் காகிதக்கூழ் பிள்ளையாரும் இக்கலைக்கூடத்தில் தயாரிக்கப்பட்டுவருகிறது. பத்தடிக்கும் மேலாக பிள்ளையார் சிலை வடிவமைக்கும் போது காகிதக் கூழால் வடிவமைத்தால் வெளியூருக்கு எளிதில் எடுத்துச் செல்லமுடியும் என்பதால் அதை வடிவமைக்கிறோம்.

கைகளால் வடிவமைக்கும் போது ஒரு நாளைக்கு ஒரு பெரிய சிலையே வடிவமைக்க முடியும். அதனால் தற்போது அச்சு முறையில் சிலைகளை வடிவமைத்துவருகிறோம்.

அதன்படி தினமும் குறைந்தது 20 சிலைகளாவது வடிவமைக்கப்படுகிறது. அச்சிலைகளுக்கு உடனுக்குடன் வர்ணமும் தீட்டப்படுகிறது.

விநாயகர் திருவுருவச் சிலைகளுக்கு அடுத்தபடியாக தற்போது தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் சிலைகள் வீட்டு வரவேற்பறையை அலங்கரிப்பதில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. முழுக்க முழுக்க எங்கள் கலைக்கூடத்தின் கற்பனையில் அந்த வடிவம் அமைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டு தற்போது பெரும் வரவேற்பையும பெற்றுள்ளன.

வீட்டில் தொங்கவிடும் மண் மணிகள், யானை நாற்காலியில் அமரும் சுவாமி சிலைகள், புத்தரின் வண்ணச் சிலைகள், குபேரர் சிலைகள், வனவிலங்குகளின் உருவங்களும், பூஜ்ஜாடிகளும் தத்ரூபமாக வடிவமைத்து விற்கப்பட்டுவருகின்றன.

கைவினைப் பொருள்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப எங்களால் உற்பத்தி செய்யமுடியவில்லை. இதை பாரம்பரிய மதிப்புமிகு தொழிலாகக் கருதி இளைஞர்களும் வேலைவாய்ப்புப் பெறலாம்.

இளந்தலைமுறையினர் தற்போது பக்தியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் பொதுவான அழகுச் சிலைகளைவிட ஆன்மிகம் சார்ந்த சுவாமி சிலைகளையே விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.

பாரம்பரியமாக கைவினைக் கலைத் தொழிலில் ஈடுபட்டுவரும் எனக்கு மனைவி, மகள், மகன்கள் நல்ல ஆதரவை அளிக்கின்றனர்.

இத்தொழில் வருவாய் மூலமாகவே, மகளை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து படிக்கவைத்துள்ளேன். மகன்களும் நன்கு படித்துவருகின்றனர். அவர்கள் மெத்தப்படித்து மேன்மையுற்றாலும், கலைத் தொழிலை கைவிடமாட்டோம்'' என்கிறார் சக்திவேல்.

படங்கள்-கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.