சிரிக்காதே..!
ஒரே கதையாக இல்லாமல் ஐந்து தனித்தனி கதைகளின் தொகுப்பாக 'சிரிக்காதே' திரைப்படம் வெளியானது.
ஒரே கதையாக இல்லாமல் ஐந்து தனித்தனி கதைகளின் தொகுப்பாக 'சிரிக்காதே' திரைப்படம் வெளியானது. 'அடங்காப் பிடாரி', 'மாலைக் கண்ணன்', 'போலிச் சாமியார்' , 'யம வாதனை' , 'புலி வேட்டை' என்பவைதான் அந்த ஐந்து படங்கள்.
'அடங்காப் பிடாரி' எனும் குறும்படத்தை ஆர்.பிரகாஷ் இயக்க, கொத்தமங்கலம் சுப்பு, மணி ஐயர், டி.கிருஷ்ணவேணி, கே.என்.
ராஜம், கே.என்.கமலம் ஆகியோர் நடித்திருந்தனர்.
Advertisement
'மாலைக்கண்ணன்' கதையை இயக்கியவரும் ஒளிப்பதிவாளரும் ஜித்தன் பானர்ஜி. எம்.எஸ்.முருகேசன், இ.கிருஷ்ணமூர்த்தி, பி.சாமா, பி.எஸ்.ஞானம், நாகலட்சுமி, ராதா பாய், மீனாட்சி ஆகியோர் நடித்திருந்தனர்.
'யம வாதனை' படத்தையும் ஜித்தன் பானர்ஜியே இயக்கினார்.
'புலி வேட்டை' படம் குறித்து போதுமான தகவல்கள் இல்லை.
'போலிச் சாமியார்' படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.எஸ்.துரைராஜ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குநர் யாரென்று தெரியவில்லை. இந்த ஐந்து கதைகளும் சென்னையில் அந்த நாள்களில் இயங்கி வந்த நியூட்டன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன.
இந்த ஐந்து கதைகளையும் ஒன்று சேர்த்தது நகைச்சுவை.
இந்த ஐந்து படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது 'போலிச் சாமியார்' திரைப்படம்தான்! போலிச் சாமியார் மர வேலை செய்யும் தச்சனின் மனைவி மீது மோகம் கொண்டு அவளுக்கு தொந்தரவு அளிப்பார். சாமியாருக்கு சரியான பாடம் புகட்டி, மக்கள் முன் அம்பலப்படுத்த, தச்சன் முடிவு செய்வான். இதை எப்படி செய்தான் என்பதுதான் கதை. கலைவாணரும், மதுரமும், துரைராஜும் இணைந்த இந்தக் கூட்டணி நகைச்சுவையில் அதகளம் செய்திருந்தது. ரசிகர்களும் ஆரவாரத்துடன் வெகுவாக ரசித்தனர்.
'சிரிக்காதே' படத்தை எஸ்.எஸ். வாசன் தனது 'ஜெமினி பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் விநியோகித்தார். பிரபல ஓவியர் மாலி வரைந்த ஹாஸ்யச் சித்திரங்களைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தினர். இந்தியாவில் திரைப்படங்களுக்கு கேலிச் சித்திரங்கள் விளம்பரமாக அமைந்தது இதுவே முதல் முறையாகும்.
'மூன்று மணி நேரத்துக்கு ஒரே சிரிப்பும் களேபரமும்...' என்ற தலைப்பில் விளம்பரங்கள் வெளியாயின. அதுவரையில் ஒரு படத்தில் ஒரு கதைக் களத்தை ரசித்து வந்த மக்களுக்கு ஒரு படத்தில் ஐந்து கதைகள் அதுவும் ஹாஸ்யக் கதைகளாக இடம்பெற்றிருந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
படம் முழுவதும் ஹாஸ்யத் துருவல்கள் நிறைந்து வயிறு வலிக்க சிரிக்க வைக்க, படத் தலைப்பை 'சிரிக்காதே' என்று எதிர்மறையாக வைத்ததும் விளம்பரமாக அமைந்தது.