'உணவு ஒழுக்கம், உடல் ஒழுக்கம், உள்ள ஒழுக்கம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்தால் நீரழிவு நோய் வராமல் தடுக்கலாம். 50 % மாவுச் சத்து, 20 % புரதச் சத்து, கொழுப்புச் சத்து, 10 % வைட்டமின்கள் இருக்கக் கூடிய சத்துப் பொருள்களைச் சாப்பிட வேண்டும்.
இதைத்தான் உணவு ஒழுக்கம் என்கிறோம். உடல் ஒழுக்கம் என்பது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, 20 நிமிடங்கள் உடற்பயிற்சி, 10 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி ஆகியன தினசரி அவசியம். உள்ள ஒழுக்கம் என்பது மனதை அமைதியாக வைத்துகொண்டால் மாரடைப்பு உயிரிழப்புகள் வர வாய்ப்பில்லை.
இவை மூன்றையும் முறையாகக் கடைப்பிடித்து உடலை முதுமை காலத்திலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்கலாம். நீரழிவு நோயாளிகள் உட்பட யாரும் பயப்படத் தேவையில்லை'' என்கிறார் காஞ்சிபுரம் நீரழிவு மன்ற நிறுவனரும், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவருமான தி.அன்புச்செல்வன்.
அவரிடம் பேசியபோது:
'நாட்டில் 10 கோடிக்கும் அதிகமானவர்களுக்கும், தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சத்துகள் இல்லாத உணவு வகைகள்,உடற்பயிற்சியின்மை, மன அமைதியின்மை, தற்கால வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியனவே நீரழிவு நோயை உருவாக்கும் காரணிகள்.
தமிழ்நாட்டில் இந்த நோய் தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கிறது. இதை அறிந்து எனது குருநாதரும்,சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் வெங்கட்ராமன் நீரழிவு மன்றத்தை அங்கு தொடங்கினார்.
தொடர்ந்து 24 ஆண்டுகளாக நடத்தி மருத்துவர்களுக்கும் பின்னர் அவர்கள் மூலமாக மக்களுக்கும் நோய் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் நான் பணியாற்றியபோது, அவர் நடத்தும் கூட்டங்களுக்கு அடிக்கடி செல்வேன்.
நான் காஞ்சிபுரம் வந்ததும் எனக்கும் அதே போன்ற மன்றத்தை உருவாக்கி மருத்துவச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
2015-இல் காஞ்சிபுரத்தில் உள்ள நீரழிவு நோய் சிறப்பு மருத்துவர்களான ராமச்சந்திரன், மாணிக்க வாசகம், நமச்சியாவம்,பிரசன்னா, தன்யக்குமார், நான் உள்ளிட்ட 6 பேரால் 'காஞ்சி நீரழிவு மன்றம்' தொடங்கப்பட்டது. தற்போது 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.
நீரழிவு நோய் தொடர்பாக தற்போது வந்துள்ள புதிய சிகிச்சை முறைகள், பாதுகாப்பான மருந்துகள், இன்சுலின் ஊசிகள் ஆகியன குறித்து மருத்துவ ஆராய்ச்சி இதழ்கள் மூலமாகவும், இணையத்தின் வாயிலாகவும் தெரிந்துகொண்டு அதை முதலில் மருத்துவர்களுக்குத் தெரிவித்து விளக்கம் அளிப்போம்.
நீரழிவு நோயால் வரக்கூடிய கண், கால் நரம்பு பாதிப்புகள், இதயம், சிறுநீரக கோளாறுகள் போன்ற நீரழிவு நோயால் ஏற்படக் கூடிய இணை நோய்களையும் வராமல் தடுக்கும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் கலந்து பேசி அது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். பள்ளிகள்,கல்லூரிகள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் நீரழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
நான் இந்திய சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பதால் அதன் மூலமாக கிடைக்கிற தகவல்களையும் மன்ற உறுப்பினர்களிடம் தெரிவிப்பேன்.
நீரழிவு நோயைக் கண்காணிக்கும் கருவியை கையில் தோள்பட்டைக்கு கீழே ஸ்டிக்கர் போன்று ஒட்டிக் கொள்ளலாம்.ஒரு நாளைக்கு 94 முறை உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்காணித்து இக்கருவி வரைபடமாக தந்து விடும். இதனால் சர்க்கரையின் அளவை உடனுக்குடன் தெரிந்துகொண்டு நோயின் தாக்கத்துக்கு ஏற்றவாறு உணவு முறைகள்,மாத்திரைகள், உடற் பயிற்சிகள் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.5 ஆயிரமாக உள்ளது.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சிறுநீர் வழியே வெளியேற்றி விடும் அற்புதமான தடுப்பு மருந்துகளும் தற்போது வந்துள்ளன. இவை இதயத்தையும்,சிறுநீரகத்தையும்,சர்க்கரையின் அளவையும் சேர்த்தே பாதுகாக்கும். நீரழிவு நோயாளிகளுக்குப் பாதுகாப்பானது தான் என்கிற ஆராய்ச்சி முடிவின் ஆவணங்களையும் அது சார்ந்த விவரங்களையும் மருத்துவர்களிடம் தெரிவித்து மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறோம். தொடக்கத்தில்ரூ.90 ஆக இருந்த இதன் விலை தற்போது ரூ.12-க்கு கிடைக்கிறது.
நீரழிவு நோயால் பாதிக்கப் படாதவர்களாக இருந்து இதயமோ,சிறுநீரகமோ பாதித்தவர்களும் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.
வாரம் ஒரு முறை மட்டுமே போட்டு கொள்ளக்கூடிய இன்சுலின் ஊசியும் வந்துள்ளது. ஆனால், இதன் விலை சற்று அதிகம். நீரழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எந்த மருந்தாக இருந்தாலும் மருந்துவர்களை கலந்தாலோசித்து அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். தடுப்பூசி கண்டுபிடிக்கவும் இந்தியா உட்பட பல நாடுகளில் தீவிரமான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை 99 கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.வரும் ஏப்ரல் 13 -இல் 100-ஆவது மருத்துவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், 'பெண்களும் சர்க்கரை நோயும்' என்ற தலைப்பில் நீரழிவு நோய் சிறப்பு மருத்துவர் மாணிக்கவாசகமும், 'நீரழிவு நோயாளிகள் வாழ்க்கைப் பயணம்' என்ற தலைப்பில் 4 சிறப்பு மருத்துவர்களும் பேசவுள்ளனர். நீரழிவு நோய் தொடர்பான எந்த சந்தேகங்களும் பொதுமக்கள் கேட்டு தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலவசமாக சர்க்கரை நோய் கண்டறியும் மருத்துவ முகாம்களும்,மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.