ஞாயிறு கொண்டாட்டம்

தீராத உறவுகளின் அற்புதம் இது!

உணர்ச்சியாக, சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்க கூடிய படமாகவும் 'மாமன்' வந்திருக்கிறது. திரைக்கதை எழுதும்போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன்.

அசோக்

உணர்ச்சியாக, சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்க கூடிய படமாகவும் "மாமன்' வந்திருக்கிறது. திரைக்கதை எழுதும்போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன். அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும். நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றது. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை.

ஆத்மார்த்தமாகப் பேசுகிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ். "விலங்கு' வெப் சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்தவரின், அடுத்த படைப்பு "மாமன்' குடும்பக் கதைகளுக்கான ரசிகர்களின் மன நிலை இப்போது மாறி வந்திருக்கிறதே....

உறவின்றி அமையாது உலகு. இதுதான் இந்தக் கதையின் அடி நாதம். கிராமத்து மனசும், மணமும் மறக்காத படம். விஞ்ஞானம் வளர்ந்திருக்கலாம். தொலை தொடர்புகள் நம்மை வேற இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேர வேண்டும்.

இந்தக் கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. உறவுகளும் அதன் அர்த்தங்களும்தான் இங்கே உண்மை. எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது. உறவுகளுக்குள் உள்ள புரிதல், அந்த அற்புதம் பதிவாகியுள்ளது.

கால சூழல், பருவத்தின் மாற்றம் எல்லாம் சேர்ந்து விவசாயத்தை அழிவு நிலைக்கு கொண்டு வந்தது மாதிரிதான்.... இப்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலும் மாறுதல்கள். விஞ்ஞானம் எல்லாவற்றிலும் இருந்து நம்மை வெளியேற்றி விடுகிறது. இதில் வருகிற ஹீரோ சூரி கூட பாசம், அன்பு, உறவுகள் என அர்த்தப்படுத்தி வாழ்கிற ஆள். ஆனால் அவரை சுற்றி தவற விடுகிற மன நிலையை குடும்பம், உறவுகள் என வகைப்படுத்தியிருக்கிறேன்.

இது உறவுகளை முன்னிறுத்துகிற கதை. நான் உங்களிடம் அன்பு செலுத்துகிறேன் என்றால், அதற்குப் பதிலாக வருகிற அன்பு இன்னும் நேர்த்தியாக இருந்தால்தான் மனதை அள்ளும். தீராத உறவுகளின் அற்புதம் இது. உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை.

சூரி இந்தக் கதைக்குள் அவர் எப்படி வந்தார்....

இலக்குகளுடன் இந்த பெரு நகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று ஊரை, மனிதர்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கணத்து ஞாபகங்கள் முளை விடுகின்றன. அப்படி எனக்குள் உருவான ஓர் அம்சம்தான் இதன் கரு. இன்றைக்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பவர்களில் முக்கால் வாசி பேர் கூட்டுக் குடும்பத்தின் பிள்ளைகள்தான். அவர்களுக்கு உறவுகள்தான் ஆதாரம்.

அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு. மண்ணை, உறவின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. நாம் பெரிதாக இழந்தது கூட்டுக் குடும்பம். சில மனிதர்களின் அன்பில் சுருங்கி, வேறு முகம் பார்க்க ஆளில்லாமல் கிடக்கிறோம். இந்தக் கதையைச் சொன்னதும் சூரி சாருக்கு அவர் கிராமத்தின் அழகு, உறவுகள் ஞாôபகத்திற்கு வந்திருக்கலாம். இப்போதுமே அவர் தமிழ் மண்ணின் முகம்.

இதில் வருகிற மானையும், மருமகனையும் நாமும் பார்த்திருக்கலாம். 6 வயதே நிரம்பிய சிறுவனுக்கும் அவனின் மாமனுக்கும் நடக்கிற பாசப் போராட்டம்தான். குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் நடிப்பில் அசத்தியுள்ளார். ஐஸ்வர்யா லஷ்மி, ராஜ்கிரண் இருவருக்கும் மிக முக்கிய கதாபாத்திரம். இவர்களுடன் "லப்பர் பந்து' புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் இப்படி நம்பிக்கையான நடிகர்கள் கூடவே இருக்கிறார்கள்.

கிராமங்களில் பார்த்து ரசித்து உணர்ந்த கேரக்டர்களையெல்லாம் கொண்டு வந்து இங்கே வைத்து விட்டேன். எல்லோரும் கதையை கேட்டதும் நெகிழ்ந்தார்கள். வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டார்கள். அதை நடத்தி முடித்திருக்கிறேன்.

பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு வேலை... எப்படியான அனுபவம்....

படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு மாதிரி. நடிக்கிற நடிகர்களும் ஒவ்வொரு விதம். பல முகங்களை ஒன்று கூட்டி ஒரு முகமாகக் கொண்டு வர வேண்டும். சூரி சார் ஒரு விதம். ராஜ்கிரண் சார் வேறு வடிவம். கீதா கைலாசம், விஜி சந்திரசேகர் போன்ற தேர்ந்த நடிகைகள் ஒரு பக்கம். அங்காளி, பங்காளி என வீட்டுக்குள் சில உன்னத உறவுகள்.

இவர்களையெல்லாம் சேர்த்து இருத்தி, நிறுத்தி, பொருத்தி கொண்டு வருவது சாதாரண வேலையில்லை. ஆறு மணிக்கு மேல் கால்ஷீட் கிடையாது. அப்படி எந்த விதிமுறையும் இங்கே இல்லை. இந்தக் கதையை உள்வாங்கி எல்லோரும் அப்படி நடித்துக் கொடுத்தார்கள். இது சினிமாவில் பெரும் ஆச்சர்யம். அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டோம்.

எங்களுக்குள்ளே ஒரு வாட்ஸ் ஆப் குரூப் கிரியேட் செய்து, அதன் வழியாக எல்லாச் செய்திகளையும் கடத்தி எல்லோரையும் திரட்டி படப்பிடிப்பை முடித்தோம். கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, தயாரிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

கருடன் படத்தின் வெற்றிக்கு பின் லார்க் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. சூரிக்கு ஏற்கெனவே வெற்றிக் கொடுத்த நிறுவனம் என்பதால், அவ்வளவு நம்பிக்கை வைத்து பொருள்செலவு செய்திருக்கிறார்கள். திருச்சி பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இது இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருமழிசையில் ரூ. 1.24 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

SCROLL FOR NEXT