ஞாயிறு கொண்டாட்டம்

வாண்டுமாமா 100

'வாண்டுமாமா' என்ற புனைப் பெயரில் குழந்தைகளுக்காக சிறுகதைகள், நாவல்கள், சித்திரக் கதைகள், அறிவியல் கதைகளை எழுதிக் குவித்தவர் கிருஷ்ணமூர்த்தி என்கிற கௌசிகன்.

எஸ். சந்திரமெளலி

'வாண்டுமாமா' என்ற புனைப் பெயரில் குழந்தைகளுக்காக சிறுகதைகள், நாவல்கள், சித்திரக் கதைகள், அறிவியல் கதைகளை எழுதிக் குவித்தவர் கிருஷ்ணமூர்த்தி என்கிற கௌசிகன். தமிழ்நாட்டின் குழந்தை இலக்கியத்தில் வரலாறு படைத்தவரான அவருக்கு இது பிறந்த நூற்றாண்டு.

ஆனந்த விகடனில் லெட்டரிங் ஆர்டிஸ்டாக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்திக்கு கதைகள் எழுத ஆர்வம். அவர் ஒரு கதை எழுதி, அதனை விகடன் ஓவியர் மாலியிடம் கொடுக்க, அவரோ, 'பெரியவர்களுக்குக் கதைகளை நிறைய பேர் எழுதுகிறார்கள். குழந்தைகளுக்காகத்தான் யாரும் எழுதுவதே இல்லை. நீ குழந்தைகளுக்காக எழுது. நான் அதை விகடனில் 'பாப்பா மலரில்' வெளியிடுகிறேன்'' என்றார்.

அன்றிரவே பாப்பா மலருக்கு ஒருகதை எழுதி, மறுநாள் அதை மாலியிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த சிறுவர் கதைக்குத் தானே படங்களைப் போட்டுவிட்டு, அவற்றைக் காட்டியபோதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் கிருஷ்ணமூர்த்தி. அடுத்த வார விகடனில் 'கோம்பையின் அதிர்ஷ்டம்' என்ற அந்தக் கதை வெளியானது.

கதையை எழுதிய கிருஷ்ணமூர்த்தி வேறு யாருமில்லை. அவர்தான் 'வாண்டுமாமா' என்ற புனைப் பெயரில் குழந்தைகளுக்காக சிறுகதைகள், நாவல்கள், சித்திரக் கதைகள், அறிவியல் கதைகள் என எழுதிக் குவித்தவர்.

புதுக்கோட்டையில் பிறந்த இவர், திருச்சியில் படித்தவர். பள்ளியில் படிக்கும்போது வாண்டுமாமா எழுதிய 'குல்ருக்' என்ற சிறுகதையானது  கலைமகள்  இதழில் வெளியானது.  'பாரதி'  என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்.  'சிவாஜி', 'மின்னல்', 'காதல்', 'கலைமணி', 'கிண்கிணி', 'வானவில்', 'விகடன்', 'கல்கி', 'குங்குமம்', 'தினமணி கதிர்' என்று பல பத்திரிகைகளில் பணியாற்றியதோடு, எழுதிக் குவித்தவர் இவர்.

இவரது முழுப் பொறுப்பில் வெளியான 'கோகுலம்', 'பூந்தளிர்' ஆகிய இரு குழந்தைகள் பத்திரிகைகளும் என்றென்றும் அவர் பேர் சொல்லும். கல்கியின் சிறுவர் பகுதி, கோகுலத்தில் அவர் எழுதிய சித்திரக் கதைகளும், தொடர்கதைகளும் அந்தக் காலத்து இளம் வாசகர்களை அடுத்த இதழுக்காக ஆர்வத்துடன் காத்திருக்க வைத்தன. அவருக்கு 'கெளசிக கோத்திரம்' என்பதால், 'கெளசிகன்' என்பதும் அவருக்கு ஒரு புனைப் பெயராயிற்று.

வாண்டுமாமாவின் படைப்புகளில் 'ஓநாய்க் கோட்டை', 'மூன்று மந்திரவாதிகள்', 'வீரவிஜயன்', 'சிலையைத் தேடி', 'சர்க்கஸ் சங்கர்', 'கரடிக் கோட்டை', 'ரத்தினபுரி ரகசியம்', 'ஷீலாவைக் காணோம்', 'பலே பாலு' போன்ற படக்கதைகள் குறிப்பிடத்தக்கவை.

'பச்சைப் புகை', 'புலி வளர்த்த பிள்ளை', 'மாஜிக் மாலினி', 'கரடி மனிதன்', 'மந்திரக் குளம்', மூன்று விரல்கள்' போன்ற கதைகள் பெரியவர்களையும் கவர்ந்தவை.

கெளசிகன் என்ற பெயரில் இவர் எழுதிய 'வீணையின் நாதம்', 'அடிமையின் தியாகம்', 'அழகி', 'பண்பு தந்த பரிசு' போன்ற சிறுகதைகள் சிறப்பானவை. அதுபோல, 'பாமினிப் பாவை', 'ஜூலேகா' போன்ற சரித்திர நாவல்களையும், 'சுழிக்காற்று', 'சந்திரனே சாட்சி', 'உயிர்ச் சிரிப்பு' போன்ற சமூக நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

குழந்தைகளுக்குப் புரியும் வகையில் அறிவியல், மருத்துவ விஷயங்களை எளிமையாகச் சொல்லுவதில் வாண்டுமாமா வல்லவர். அவர் நான்கு பாகங்களில் எழுதிய 'தோன்றியது எப்படி?', 'மருத்துவம் பிறந்த கதை' (இரண்டு பாகங்கள்), 'அறிவியல் தகவல்கள்' (மூன்று பாகங்கள்) ஆகியவையே அதற்கு எடுத்துக்காட்டு. தன் படைப்புகளுக்காக ஏராளமான விருதுகளைப் இவர் பெற்றிருக்கிறார்.

தனது பத்திரிகை பணிகளுக்கு மத்தியில் 'கல்கி' அலுவலகத்தில் இருந்த ஏராளமான நூல்களில் அலமாரிகளில் வகைப்படுத்தி, தேவையான சமயத்தில் எந்தப் புத்தகத்தையும் சுலபமாக எடுக்கும் வகையில் ஒழுங்குப்படுத்தி வைத்த வாண்டுமாமாவை 'கல்கி' சதாசிவம் பெரிதும் பாராட்டினார்.

அத்துடன் நிற்காமல், தி.நகர் பசுல்லா சாலையில் இருந்த ராஜாஜியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கே மூட்டை, மூட்டையாகக் குவிந்திருந்த உள்ளூர் முதல் சர்வதேச அளவிலான அனைத்து புத்தகங்களையும் ஒரு மாதம் சிரமம் பாராமல் உழைத்து சரிப்படுத்தி, அதற்காக ராஜாஜியின் பாராட்டுகளையும் பெற்றார் கெளசிகன்.

சுமார் 65 ஆண்டுகள் சளைக்காமல் தமிழ் வாசகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய கிருஷ்ணமூர்த்தி என்கிற கெளசிகன் என்கிற வாண்டுமாமா 2014 ஜூன் 12-இல் புற்றுநோய் காரணமாக மறைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT