ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43
ஜெமினி கணேசன் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
ராமசாமி கணேசன் என்ற ஜெமினி கணேசன், ராமசாமி ஐயருக்கும் கங்கம்மாவுக்கும் மகனாக புதுக்கோட்டையில் 1920-ஆம் ஆண்டு, நவம்பர் 17-இல் பிறந்தார். இவர் தாத்தா புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல்வராக இருந்தார். இவர் விரிவுரையாளராக இருந்து, பின்னர் ஜெமினி ஸ்டூடியோவில் நிர்வாகியானார். சந்திரபாபு வாய்ப்புக் கேட்டு ஜெமினி ஸ்டூடியோவில் விஷமருந்தி மயங்கி விழுந்தபோது, அவரைக் காப்பாற்றினார்.
ஆர். கே. நாராயணன் எழுதிய நாவல் "மிஸ் மாலினி', 1947-இல் கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் திரைப்படமானபோது, ஆர். கணேஷ் என்ற பெயரில் அறிமுகமானார். இவர் பிரபலமாகி மறக்க முடியாத எத்தனையோ படங்களில் நடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற வரிசையில் அவர்களோடும், பல கணேஷ்கள் இருந்த காரணத்தால் "ஜெமினி' நிறுவனத்தால் அறிமுகமானவர் என்பதால் ஜெமினி கணேசன் ஆனார். 200 படங்களுக்கு மேல் நடித்தவரின் களத்தூர் கண்ணம்மாவில் உலக நாயகன் கமல் சிறுவனாக 1960-இல் அறிமுகமானார்.
ஸ்ரீதரின் காதல் காவியங்களான "கல்யாண பரிசு' படத்துக்குப் பின் முதன் முதல் காஷ்மீரில் எடுத்த "தேன் நிலவு' படத்தில் இந்தியத் தாரகை வைஜெயந்தி மாலாவுடன் நடித்தார்.
1966-இல் நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த "பட்டத்து ராணி' படத்தில் என்னை வசனத்தைப் படிக்கச் சொல்லுவார். என் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டு சிலவற்றை ரசிப்பார். சிலவற்றை விமர்சிப்பார். இதில் இவருடன் நடித்த பி. பானுமதி, "ஜெமினி' என்று அழைத்தால், "மேடம்' என்று ஓடுவார்.
நியூ டோன் ஸ்டூடியோவில் நான் கொடுத்த சட்டை, பேண்டைப் போடாமல் வேறு ஒன்றைப் போட்டு நடித்தார். இதை நான் கவனிக்காமல் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குப் போய்விட்டேன். அங்கு டி.கே.ராமமூர்த்தி இசையில், வாலி எழுதிய பாடலை, பி. சுசீலா பாடிக்கொண்டிருந்தார். அந்தப் பதிவுக்குப் போய் விட்டேன்.
படம் "ரஷ்' பார்த்தபோது, இந்த உடை "கன்ட்டியூனிட்டி' தவறானதால், மீண்டும் அந்த செட் போட்டு பல ஆயிரங்கள் வீணாகி, மீண்டும் காட்சி எடுக்கப்பட்டது. எல்லாரும் என்னைத் திட்டியபோது, ஜெமினி அது தன் தவறு என்று பிரகடனப்படுத்தி, என்னை ஆறுதல்படுத்தினார்.
நான் பணிபுரிந்த அந்தப் படம் வெளியாகும் முன் முதல் தடவையாக திருப்பதி போக ஆசைப்படுபவதாகச் சொன்னேன். எனக்கு அங்குப் போய் வர செலவுக்குப் பணம் கொடுத்தார்.
அடுத்த படம் எப்போது என்ற நிலையில், நான் பாண்டி பஜாரில் நடந்துசென்றபோது, அங்கு காரில் வந்த அவர், காரை நிறுத்தி என்னை ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் சென்று, "சாவித்திரி' என்று கூப்பிட்டு, என்னை அறிமுகம் செய்துவைத்து, ஸ்வீட் பாக்கெட்டுடன் 50 ரூபாய் கொடுத்தார்.
நான் ஏவி.எம். ராஜன், புஷ்பலதாவுக்கு "பாச தீபம்' என்ற வெற்றி நாடகத்தை எழுதினேன். "கல்கி' புகழ்ந்து பாராட்டியது. இதை அவர் எடுத்த "நான் அவனில்லை' படத்துக்குப் பிறகு கே. பாலசந்தர் இயக்கத்தில் எடுக்க ஆசைப்பட்டு, என்னைக் கூப்பிட்டுப் பேசினார். ஏவி.எம். ராஜன் மறுத்ததால் அது நடைபெறாமல் போனது.
நான் கதை, வசனகர்த்தாவாக ஆனதும், 1974-இல் என் "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு' படத்தில் ரா. சங்கரன் இயக்கி, 55 ஆண்டு கால நண்பர் சிவகுமார் , ஜெயசித்ரா நடித்தபோது, இவரை தாத்தா வேடத்தில் நடிக்கச் சொன்ன போது, ""நாராயணா, நான் எப்பவும் காதல் மன்னன்டா... தாத்தா இல்லைடா!'' என்று கூறி, மறுத்தார்.
நாடகக் காவலர் ஆர். எஸ். மனோகரின் குழுவினர் நடித்து, நான் எழுதிய "அக்னி பிரவேசம்' நாடகத்தை வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் பார்க்க, கே.எஸ். ரவிகுமார், ""அண்ணே'' என்று அழைக்கும் கங்கை அமரனுடன் ஜெமினியின் மகள் கமலா செல்வராஜும் வந்திருந்தார். அவரிடம் நான் ஜெமினியைப் பற்றிச் சொன்ன போது, ""எவர் கீரின் ஓல்டு மெமரிஸ்'' என்று பெருமையாகச் சொன்னார்.
இவர் ""கணவனே கண் கண்ட தெய்வம்'' படத்தின் வெற்றிக்குப் பிறகு நாராயணன் கம்பெனி எடுக்க இருந்த "மனம் போல் மாங்கல்யம்' படத்தில் சிவாஜி நடிக்க இருப்பதை அறிந்து, ஒரு பிச்சைக்காரனைப் போல வேடமிட்டுச் சென்று தயாரிப்பாளர்களை அசத்தி, அந்த முதல் இரட்டை வேடப் படத்தில் நடித்தார்.
இயல்பாக நடித்த இவரது வாழ்க்கைச் சக்கரம் காலத்தின் சேற்றில் சிக்கி, 2005-ஆம் ஆண்டு, மார்ச் 22-இல் காலமானார்.
(தொடரும்)