FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!

'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.

Updated On : 17 மே 2026, 4:09 am IST
பகிர்:

'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.

உதாரணத்துக்கு சோடியம் குளோரைடு, சிலிக்கான், ஜெர்மானியம் போன்றவை ஒரே மாதிரியான பண்புகளைத் தனது பருமன் முழுவதும் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட கிரிஸ்டல்களை சிறிய விதையைப் போல் பயன்படுத்தி முழுவதும் வளர்ந்த கிரிஸ்டல்களை வளர்த்து உருவாக்குகின்றனர் அறிவியலாளர்கள். இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 'கிரிஸ்டல் குரோத்' பி.ராமசாமியின் பங்களிப்பு அபாரமானது.

உருகிய நிலையில் இருந்து படிக வளர்ப்பு, சோக்ரால்ஸ்கி முறை, பிரிட்ஜ்மேன் நுட்பம், கரைசலிலிருந்து படிக வளர்ப்பு, ஆவியிலிருந்து படிக வளர்ப்பு, திடநிலை படிக வளர்ப்பு போன்று பல முறைகள் உள்ளன. ராமசாமி தனது மாணவர் சங்கரநாராயணனுடன் இணைந்து கரைசல் முறையில் ஒற்றை திசையில் ஒரே படிகமாக பெரிய அளவில் உருவாக்கக்கூடிய, பெரிய ஆய்வக வசதிகள் தேவைப்படாத, எளிமையான, அதிகம் செலவாகாத, ஒரு படிக வளர்ப்புமுறையை உருவாக்கினர். இது 'சங்கரநாராயணன்-ராமசாமி (எஸ். ஆர்.) முறை என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் படிக வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.

Advertisement

Advertisement

எஸ். ஆர். முறையானது பெரிய அளவான ஒற்றைப் படிகங்களை வளர்ப்பதில் பல நன்மைகளை அளிக்கிறது. கரைபொருள்-படிக மாற்றத்தின் உயர் செயல்திறன், குறைந்தபட்ச வெப்ப அழுத்தங்கள், எளிய பரிசோதனை அமைப்பு, பன்முகத்தன்மை போன்ற மேம்பட்ட ஒளியியல் பண்புகள் முக்கியமானவையாகும்.

நாட்டின் முதலாவது கேலியம் ஆர்சனைடு படிகத்தை (1 கிலோ) ஜூன் 1989- ஆம் ஆண்டிலும், முதலாவது இண்டியம் பாஸ்பைட் படிகத்தை (1 கிலோ) 1992-ஆம் ஆண்டிலும் ராமசாமி வளர்த்தெடுத்தார். இந்தச் சாதனையால் கேலியம் ஆர்சனைடு, இன்டியம் பாஸ்பைட் படிகத்தை வளர்த்தெடுப்பதற்கான தொழில்நுட்ப அறிவைப் பெற்ற உலகின் 7-வது நாடாக இந்தியா திகழ்ந்தது.

ஒளிமின்னழுத்த சூரிய மின்கலங்களுக்காக, உயர்தர பல படிக சிலிக்கானை பெருமளவில் இந்தியாவில் உருவாக்கும் முயற்சியிலும் ராமசாமி வெற்றியைக் கண்டார். சாய உணர் சூரிய மின்கலங்களில் 10% செயல்திறனை எட்டியதும் சூரிய ஆற்றல் ஆராய்ச்சியில் சாதனையாகும். 1980-84 காலகட்டத்தில் மேக விதைப்பு மூலம் செயற்கை மழையை உருவாக்கும் ஆய்விலும் அவர் ஈடுபட்டிருந்தார். சங்கரநாராயணன்-ராமசாமி முறையின் மூலம் உருவாக்கப்பட்ட, 1,350 மி.மீ. நீளமுடைய மிக நீண்ட கரிம பென்சோபெனோன் ஒற்றைப் படிகம் சாதனைக்குரியது.

ராமசாமியின் வாழ்க்கை

கோவில்பட்டி அருகேயுள்ள மேலப்பட்டியில் 1943- ஆம் ஆண்டில் பிறந்தவர் ராமசாமி. இவர் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி, திருச்சி புனித வளனார் கல்லூரிகளில் இயற்பியல் பட்டங்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட சிறந்த ஆய்வுக்காகத் தங்கப் பதக்கம் வென்றவர்.

இவர் 1982-இல் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக வளர்ச்சி மையத்தை நிறுவி, இயக்குநராகப் பணியாற்றினார். தேசிய வசதி மையமாக இந்த மையம் அங்கீகரிக்கப்பட்டதோடு, சர்வதேச கோட்பாடு இயற்பியல் மையத்தின் இணை மையமாகவும் அங்கீகாரம் பெற்றது. இவர் 1993 முதல் 1997 வரையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றினார். தற்போது சென்னை எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஆய்வியல் புலமுதன்மையராகப் பணியாற்றிவருகிறார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியர் பணியும், 46 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுப் பணியும் மேற்கொண்டு இன்றும் ஓய்வு அறியாமல் உழைத்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இவரது நெறியாளுகையின் கீழ் முனைவர் பட்டம் பெற்றதோடு, அவர்கள் பல்வேறு இடங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டனர். மூன்றாவது, நான்காம் தலைமுறை ஆய்வாளர்கள் இன்னும் இவரது வழிகாட்டுதலைப் பெற்று வருகின்றனர்.

இவர் பன்னாட்டு ஆய்விதழ்களில் ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள், பல நூறு கருத்தரங்க உரைகள் வெளியிட்டுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பலமுறை சென்று ஆய்வுரை ஆற்றியுள்ளார். மத்திய அரசிடம் ஆய்வு நிதியைப் பெற்று, ஆய்வுத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். எஸ். ஆர். முறையில் படிக வளர்ப்பு முறையில் மட்டும் சுமார் 200 கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். யுனெஸ்கோவின் நீல்ஸ் போர் விருது, ஈரானின் கராஸ்மி சர்வதேச விழா விருது, பல்கலைக்கழக மானியக் குழுவின் ஹோமி ஜஹாங்கிர் பாபா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அறிவியல், தொழிலக ஆய்வு மன்றம் (சி. எஸ். ஐ.ஆர்.), பேராசிரியர் பி. ராமசாமியை நாட்டின் மிக முக்கிய அறிவியலாளர்களில் ஒருவர் என்று குறிப்பிடுகிறது.

இவர் தலைவராகப் பதவி வகிக்கும் இந்திய படிக வளர்ச்சிச் சங்கத்தின் சார்பில் 'பேராசிரியர் பி. ராமசாமி தேசியப் படிக வளர்ச்சி விருது' படிக வளர்ப்பில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments