திவ்யா
ஒரு கோயிலுக்காக சண்டை போட்டுக் கொள்ளும் இரு நாடுகள் கம்போடியா, தாய்லாந்து. இவ்விரு நாடுகளின் எல்லையிலுள்ள சிவன் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இரு நாடுகளும் 817 கி.மீ. நீள எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. 'பிரே விஹார்', 'தா முயென தாம்' என்கிற இரு கோயில்களும் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ளன.
'பிரே விஹார்' கோயில் 11-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கெமர் வம்சத்தின் சூர்யவர்மன் காலத்தில் கட்டப்பட்டது.
கம்போடியாவின், டாங் க்ரேக் என்னும் மலையில் 1,722 அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இதற்கு முன்பு இங்கு துறவிகள் மடம் இருந்ததாகவும், பிற்காலத்தில் அந்த இடத்தில் ஆலயம் உருவானதாகவும் வரலாறுகள் உண்டு.
'பிரே விஹார்' என்கிற இந்தக் கோயில் தஞ்சைப் பெரிய கோயில் போல செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
சுவர்களில் மகாபாரதம், ராமாயணம் என புராண சிற்பங்கள் நிறைந்து, இந்து மதத் தொடர்புடன் உள்ள கோயிலாகவே இது அமைந்துள்ளது. கம்போடியாவில் புத்த மதம் வலுவாக இருந்தாலும் கூட இந்து மதச் சடங்குகள் இன்றும் வழக்கத்தில் உள்ளன.
பெரும்பாலும் சுற்றுலாவாசிகளின் ஆலயமாகக் கருதப்படுவதால் பிரே விஹாருக்காக இரு நாட்டினருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்படுவதும், அடங்கி விடுவதுமாக இருக்கும். தற்போது யுனெஸ்கோ இக்கோயிலை பாரம்பரியச் சின்னமாக்கி உள்ளது இதை தாய்லாந்து எதிர்க்கிறது.
பிரச்னையின் தொடக்கம் எது?
கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற காலத்தில் இதன் எல்லைகள் மறுவரையறைக்குட்படுத்தப்பட்டபோதுதான் இரு நாடுகளுக்கும் பிரச்னை தோன்றியது. பிரச்னைக்குரிய கோயிலாகக் கருதப்படும் 'பிரே விஹார்', கம்போடியா எல்லைக்குள்ளும் அதன் பயன்பாட்டுப் பகுதிகள் தாய்லாந்துப் பகுதியிலும் இருக்கின்றன.
கோயிலின் சில பகுதிகளை தாய்லாந்து வசப்படுத்தியுள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் தெரிவித்து இருந்தது. விசாரணையின் முடிவில், கோயில் கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான கோயிலும், தலமுமாக இருப்பதால் 1904-ஆம் ஆண்டு பிராங்கே - சியாமிய ஒப்பந்தப்படி, நீர்நிலைக் கோட்டின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி கோயில் கம்போடியா எல்லைக்குள் வருவதாக நீதிமன்றம் 15.6.1962 -இல் உறுதி செய்தது.
மேலும் தாய்லாந்தின் காவல் ஏற்பாடுகளை அங்கிருந்து விலக்கிக் கொள்வதுடன், கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் கம்போடியாவுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியது. இதனை தாய்லாந்து ஏற்கவில்லை என்றாலும், இந்தச் சர்வதேச தீர்ப்பே இப்போதும் தொடர்கிறது.
தாய்லாந்து இந்தத் தீர்வை அப்போதும், இப்போதும் ஏற்கவில்லை. அவ்வப்போது இரு நாட்டுக் காவலர்களிடையே மோதல் என்பது நடந்து கொண்டேதான் இருந்தது. கடந்த மாதங்களில் இரு நாடுகளும் எல்லையில் தங்களது படைகளைக் குவித்து வந்தன. ஒருவருக்கொருவர் அத்து மீறியதாகக் குற்றம் சுமத்தியும் இருக்கின்றன.
கம்போடியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 20 ஆயிரம் மக்களை வெளியேற்றியிருக்கிறது அதன் அரசு. அதேபோன்று தாய்லாந்து அரசும் தங்களது எல்லையில் இருந்து 1.50 லட்சம் மக்களை வெளியேற்றியிருக்கிறது.
இரு தரப்பு வர்த்தகமும் முற்றிலும் சீர்குலைந்து விட்டன. தாய்லாந்திலிருந்து வரும் பழங்கள், காய்கறிகளுக்கு கம்போடியாவில் தடை உள்ளது. மக்களுக்கு மின்சாரம் விநியோகம் தடுக்கப்பட்டுள்ளது.
கம்போடியா படையினர் 'தா முயென தாம்' கோயிலுக்குள் நுழைந்து தேசிய கீதம் பாடியதான குற்றச்சாட்டில் தான் தற்போது பிரச்னை தொடங்கியது.
இந்த மோதல் போராக உருவாகக் கூடாது என்றும் சர்வேதச சட்டத்தின் அடிப்படையில் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனவும் தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சயாச்சை கூறியிருக்கிறார். கம்போடிய அரசும் இதே போன்று அமைதித் தீர்வை விரும்புவதாக கூறியிருக்கிறது.
படம் உதவி: யுனெஸ்கோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.