அமீர்கான் தனது சூப்பர்ஹிட் படமான 'சித்தாரே ஜமீன் பர்' படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீட்டை யூ டியூப் தளத்தில் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளார். திரையரங்க வெளியீடுகளில் ஒன்றை, நேரடியாக மக்களின் வீடுகளுக்கு வழங்கும் ஒரு துணிச்சலான புதிய விநியோக அணுகுமுறையைக் அறிவித்துள்ளார்.
நடிகர் - தயாரிப்பாளர் அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை இந்தியாவில் ரூ. 100 கட்டணத்திலும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட 38 சர்வதேச நாடுகளில், அவர்கள் நாட்டின் சந்தைக்கேற்ற கட்டணத்திலும் காணலாம்.
8 மணி நேர வேலை காரணமாக சந்தீப் வங்காவின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறி இருந்தார். அப்போது பாலிவுட்டில் அது பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து வித்யா பாலனிடம் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த அவர், 'தாய்மார்கள் குறைந்த மணி நேரங்கள், நெகிழ்வு நேரங்களில் வேலை செய்வதற்கான உரையாடல்கள் தற்போது அனைத்து துறைகளிலும் நடந்து வருகிறது.
பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்கள் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதாது. நான் ஒரு தாய் அல்ல. அதனால், என்னால் 12 மணிநேர ஷிஃப்ட்டில் பணிபுரிய முடியும்' என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த மாதம் 28-ஆம் தேதி தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்து பேசியிருக்கிறார் தனுஷ். தனுஷின் வளர்ச்சியில் அவரது ரசிகர்களின் பங்கு முக்கியமானது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களை அவ்வப்போது சந்தித்த தனுஷ், அதன் பின் சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
ரசிகர்களிடம் பேசுவதற்கான போதுமான நேரம் கிடைக்காமலிருந்தார். இந்நிலையில் இனி ஒவ்வொரு ஞாயிறும் ரசிகர்களைச் சந்திக்க உள்ளார். முதற்கட்டமாக சென்னையில் உள்ள ரசிகர்களில் 500 பேருடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இனி மாவட்ட ரீதியாக ரசிகர்களைச் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் 'சென்னை பைல்ஸ்' படம் வெளியாகியுள்ளது. இது குறித்த சந்திப்புகளில் பேசியிருக்கிறார் அவர், 'ஒவ்வொரு முறையும் நான் இங்கு வந்து மேடை ஏறி நிற்கும்போது எனக்குப் பயமாக இருக்கும்.
எனக்குப் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமா இன்டஸ்ட்ரிக்கும், இந்த மண்ணிற்கும் நன்றி. முதன் முதலில் நான் இங்கு நடிக்க வரும்போது தமிழ் தெரியாது. சரியாக நடிப்பும் வராது.ஆனால் அதை எதுவும் பெரிதுபடுத்தாமல் இங்கு மட்டும்தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கிறது. தமிழ் இன்டஸ்ட்ரியில் திறமையை மதிக்கிறார்கள், வாய்ப்பு கொடுக்கிறார்கள்' என பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மகள் சுஹானா கான் நடிக்கும் 'கிங்' படத்தில் பிரதான வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த மே மாதத்திலிருந்து தொடங்கி நடந்து வருகிறது. மும்பை படப்பிடிப்பில் ஷாருக்கான் பங்கேற்று வருகிறார்.
அவர் இடம் பெற்ற காட்சிகள் மும்பை கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் நடந்து வந்தது. படப்பிடிப்பின் ஆக்ஷன் காட்சியில் ஷாருக்கான் பங்கேற்றபோது அவருக்கு காயம் ஏற்பட்டது.
காயத்தின் தன்மை குறித்துத் தெரியவில்லை. ஆனால், ஒரு மாதம் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கான மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.