ஞாயிறு கொண்டாட்டம்

இருளை நேசிப்பவர்களுக்கு..!

இயற்கையை ரசிப்பவர்களுக்கு, இருளை நேசிப்பவர்களுக்கு ஒளிப்பொறிகளாய் ஒளி சிந்திப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளைப் பார்த்தாலே மனதில் கொண்டாட்டம்தான்.

யாழினி

இயற்கையை ரசிப்பவர்களுக்கு, இருளை நேசிப்பவர்களுக்கு ஒளிப்பொறிகளாய் ஒளி சிந்திப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளைப் பார்த்தாலே மனதில் கொண்டாட்டம்தான். லம்பிரிடாய் குடும்பத்தைச் சேர்ந்த இவை பயிர்களைப் பாதிக்கும் சில வகையான பூச்சிகள், நத்தை இனங்களை உண்டு விவசாயப் பணிகளுக்கு உதவி செய்வதோடு, இயற்கையின் உணவுச் சங்கிலி சிதைந்துவிடாமல் பாதுகாக்கின்றன.

'மின்மினிப்பூச்சி', 'தூக்கணாங்குருவிக்கூடு' என்று தமிழ் இலக்கியங்களிலும், ஹார்பர் லீ எழுதிய 'டூ கில் எ மோக்கிங்பர்ட்' எனும் நாவலிலும் குறிப்புகள் உள்ளன. ஜப்பானில் மின்மினிப்பூச்சிகளைப் பார்க்கும் விழா கோடைகாலத்தில் கொண்டாடப்படுகிறது.

மின்மினிப்பூச்சிகளில் 2,000-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஒவ்வொரு இனத்துக்கும் தனித்துவமான பண்புகள் உள்ளன. இவை அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.

ஒளிரும் சிறப்புக்காகவே புகழப்படும் 'மின்மினிப்பூச்சிகள்' உயிர்-வேதி வினையின் மூலம் ஒளியை உருவாக்குகிறது. இதன் வயிற்றில் உள்ள சிறப்பு செல்களில் நடைபெறும் 'போட்டோசைட்ஸ்' என்கிற நிகழ்வால் ஒளி உமிழப்படுகிறது. ஆக்சிஜன், லூசிபெரின் என்ற ஒளி உண்டாக்கும் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து நடைபெறும் வேதிவினையின் மூலம் லூசிபெரஸ் என்கிற நொதி-என்சைம் உருவாகிறது. இது ஒளிரும் தன்மை கொண்டது.

இவை தன் ஒளிவீச்சுகளின் ஒளிச்செறிவையும் அதிர்வுகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இந்த ஒளியே தன் தொடர்பு சமிக்கையாகவும், இணையைக் கவரவும் பயன்படுத்தப்படுகின்றன. சில இரையின் கவனத்தைப் பெறவும், வேட்டை உயிரினங்கள் குறித்து எச்சரிக்கை செய்யவும் பயன்படுத்துகின்றன.

இவற்றின் முட்டை, புழு, பியூபா, பூரண வயது நிறைந்த பூச்சி ஆகிய நான்கு முக்கிய நிலைகளில் வடிவமாற்றம் அடைகிறது. முட்டைகள் முதலில் மண்ணில் இடப்படுகின்றன. புழுக்கள் உருவாகியவுடன் நத்தைகளின் கூழ்கள், சினைகள், சில பூச்சி வகைகளைச் சாப்பிடுகின்றன. பல மாறுதல்களுக்குப் பின்னர் புழுக்கள் பியூபாவாக மாறுகின்றன. பிறகு வயது வந்த பூச்சிகளாக வெளிப்படுகின்றன.

இந்தப் பூச்சிகள் சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை மட்டுமே வாழுகின்றன. பறவைகள், சிலந்திகள், சில பூச்சியினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் திறன் பெற்றவை.

சில வகையான மின்மினிப்பூச்சிகள் தன்னைப் பிடித்து உண்ணும் வேட்டை உயிர்களின் வாய்க்குள் சென்றதும் ஒரு ரசாயன திரவத்தைச் சுரந்து, அந்த உயிரின் சுவை அறியும் தன்மையைக் கெடுத்துவிடும். சில நேரங்களில் வேட்டை உயிர்களிடம் இருந்து தப்பிக்க வேறு பூச்சியைப்போல பாசாங்கு செய்யும் திறனும் பெற்றவை.

வாழிடங்கள் இழப்பு, பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, ஒளி மாசு உள்ளிட்ட பல அச்சுறுத்தல்களை இவை எதிர்கொள்கின்றன. நகரவாதம், வேளாண்மையால் வாழிடங்கள் இழந்ததால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பூச்சிக்கொல்லிகளும் பிற ரசாயனங்களும் மின்மினிப்பூச்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம். ஒளி மாசு பூச்சிகளின் தொடர்பு கொள்ளும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் திறனை பாதிக்கக்கூடும். இவற்றைக் காப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஒளி உருவாக்க உதவும் நொதி-லூசிபரஸை மருத்துவப் படிமம் எடுக்கும் முறைகள், மருந்து உருவாக்கத்தில் பயன்படுத்த ஆராய்ச்சிகள் செய்கிறார்கள். லூசிபரஸ் பயன்படுத்துவதன் மூலம் உயிருள்ள உயிரிகளின் செல்களின் இயக்கத்தை, மருந்துகளின் செயல்திறன்களைக் கண்காணிக்க முடியும்.

மின்மினிப்பூச்சிகள் தொடர்ந்து ஒளிவிடாமல் விட்டுவிட்டு பச்சை-மஞ்சள் நிறத்தில் ஒளிவிடும் அமைப்பைப் பெற்றவை. வெவ்வேறு கூட்டத்தில் இருந்து பூச்சிகளை பிடித்துவந்து ஒரே இடத்தில் விட்டாலும் ஒட்டுமொத்த கூட்டமும் நொடிக்கும் குறைவான நேரத்தில் ஒரே நேரத்தில் நின்று ஒளிர்ந்து அற்புதம் நிகழ்த்தும்.

'எப்படி இந்தப் பூச்சிகள் இவ்வளவு குறைவான நேரத்தில் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன' என்பது ஆய்வாளர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

ஒளி உமிழும் பூச்சிகளின் பட்டியலில் க்ளோ- வார்ம் பீட்டல், ரயில் ரோடு வார்ம்ஸ், கிளிக் பீட்டல், ஃபங்கஸ் ஞாட்ஸ், ஃபயர் பீட்டல், கேவ் க்ளோ - வார்ம், ட்ரோபிகள் ஃபயர் பீட்டல், க்ளோ - வார்ம், பயோலுமினிசென்ட் ரோசெஸ் போன்ற பல வித்தியாசமான உயிரினங்களும் உள்ளன.

பல்லுயிர்த்தன்மையைப் பேணும் தோட்டங்கள், விளைநிலங்கள் பராமரிக்கப்பட்டால் மின்மினிப்பூச்சிகள் கட்டாயம் அந்த இடத்துக்கு வந்து சேரும். பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் பயன்படுத்தாத, காய்ந்த மரங்கள், இலை தழைகள் அப்புறப்படுத்தப்படாமல், நீர் வசதி கொண்ட இடங்களுக்கு அதிகம் ஈர்க்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

ஊரக திறனாய்வுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 4,149 போ் எழுதினா்

SCROLL FOR NEXT